தேடுதல்

செபம் செபம் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 26 – மாசற்ற வாழ்க்கை வாழ்வோம் - II

மாசற்ற வாழ்க்கையை மாசுபடுத்தும் பொய்யர், வஞ்சகர், தீயோர், பொல்லார் இவர்களுடனான உறவுகளைத் தவிர்த்து மாசற்ற மனிதர்களாய் வாழ்வோம்
விவிலியத் தேடல்: திருப்பாடல் 26 – பகுதி II

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

‘இறைநம்பிக்கையே வாழ்க்கை’ என்ற தலைப்பில் திருப்பாடல் 26ல் முதல் மூன்று இறைவசனங்கள் குறித்து, கடந்த வார விவிலியத் தேடலில் நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 12 வரை உள்ள இறைவசனங்களைத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அந்த இறைவசனங்களை தியானச் சிந்தனையோடு வாசிப்போம்.

“பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை; வஞ்சகரோடு நான் சேர்வதில்லை. தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்; பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை. மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்;  ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன். உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்; ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்; பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்து விடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு. நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன். (வசனம் 4-12)

பொய்யர், வஞ்சகர், தீயோர், பொல்லார் இவர்களோடு நான் சேர்வதில்லை, அவர்களின் நடுவில் கூட நான் அமர்வதில்லை என்று தாவீது அரசர் கடவுளிடம் எடுத்துக்கூறி தான் ‘மாசற்றவன்’ என்பதை வெளிப்படுத்துகின்றார். அரசியல், சமுதாயம், சமயம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம் ஆகிய துறைகளில், ஒருவர் உண்மையிலேயே அப்பழுக்கற்றவராக, அதாவது, மாசற்றவராக வாழ முடியுமா? என்றால், நிச்சயம் முடியும். அதற்கான சாத்தியக்கூறுகள் தனிமனிதனைப் பொறுத்துதான் அமையும். ஆனால், அப்படி வாழ்வது உண்மையிலேயே சவால் நிறைந்ததுதான். காரணம், இந்தத் துறைகளில் எல்லாம் பொய்யர், வஞ்சகர், தீயோர், பொல்லார் ஆகிய நான்கு பேரும் கண்டிப்பாக இருப்பார்கள். இந்தத் தளங்களில் மாசற்றவராக ஒருவர் வாழவேண்டுமெனில், நிச்சயம் இழிபேச்சுக்கும், நகைப்புக்கும், கேலிப்பேச்சுக்கும் எள்ளிநகையாடலுக்கும் ஆட்படவேண்டியிருக்கும். “இவரு பெரிய யோக்கியராக்கும்…  இவரால் மட்டும் இந்தச் சமுதாயம் மாறிவிடவாப்போகிறது... அவரு வேலைய பார்த்துகிட்டு பேசமா போகவேண்டியதுதானே... பெருசா நியாயம் பேச வந்துட்டாரு… இவனும் பிழைக்க மாட்டான் மத்தவங்களையும் பிழைக்க விடமாட்டான் என்பன போன்ற சொற்களால் வறுத்தெடுப்பார்கள். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி எத்தனையோ பேர் மாசற்ற மனிதர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள்..  

கடந்த ஆண்டு நான் ஒரு பங்கிற்குப் திருப்பலி நிறைவேற்றப் போயிருந்தேன். அது ஒரு பெரிய பங்கு. திருப்பலியின் இறுதியில் தூதன் இதழ் பற்றி மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு திருப்பலி முடிந்து ஆலயத்திற்கு வெளியே அவ்விதழை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து, தூதன் இதழுக்குச் சந்தா  செலுத்திவிட்டு, பாதர், நான் ஓர் ஓய்வுபெற்ற தாசில்தார். உங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழையுங்கள் என்று கூறி, தொலைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் சென்றவுடன் இன்னொரு நபர் என்னிடம் வந்து, பாதர், அந்தத் தாசில்தார் உண்மையிலேயே ஒரு அப்பழுக்கற்ற மனிதர். அவர் தன்னுடைய 40 ஆண்டுகால பணியில் யாரிடமும் எதற்காகவும் கை நீட்டி பணம் வாங்கியதில்லை. அப்படி வாங்கியதாக யாரும் இதுவரையிலும் சொன்னதும் கிடையாது. தனது சொந்த காசைப்போட்டு மற்றவர்களுக்குச் செலவு செய்திருக்கிறாரே தவிர, ஒருமுறை கூட இலஞ்சம்  வாங்கியது கிடையாது. இவர் நல்லவராக வாழ வேண்டும் என்பதற்காக இவரது மேலிட அரசு அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்திருக்கிறார். அந்தளவுக்கு மிகவும் நல்ல மனிதர். இவரால் நம் கிறிஸ்தவ மதத்திற்கே பெருமை என்று சொன்னார்.  

இங்கே தாவீது அரசர் "மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்" என்கிறார். நம் தமிழ் சமுதாயத்தில் ‘கைகளைக் கழுவுகிறேன்’ என்பது உடல் உறுப்புகளில் ஒன்றான கைகளைக் கழுவுதல் மட்டுமல்ல, மாறாக, தீயக் குணங்களிலிருந்தும், தீய மனிதர்களிடமிருந்தும், விலகியிருப்பதை இது குறித்துக்காட்டுகிறது. இன்னும் குறிப்பாக, உறவை முறிக்கும் விதமாக, "நான் இன்றோடு என் கையை கழுவிட்டேன், உன் உறவே எனக்கு வேண்டாம், உன் வாசல் படியைக்கூட நான் இனிமேல் மிதிக்க மாட்டேன்... என்பதைக் குறிக்கும் விதமாக இந்தச் சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வேலையே வேண்டாமென்று கைகழுவிட்டேன், இந்தப் பிரச்சனையே வேண்டாமென்று கைகழுவிட்டேன், இந்த ஊரே வேண்டாமென்று கைகழுவிட்டேன் என்றும் சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும் விதமாக இந்த வாழ்க்கையே  வேண்டாமென்று கைகழுவிட்டேன் என்றெல்லாம் பல்வேறு சூழல்களில் இவ்வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. இங்கே தாவீது அரசர் பொய்யர், வஞ்சகர், தீயோர், பொல்லார் ஆகியோரின் கூட்டத்தில் சேராமல் தான் விலகி இருப்பதை எடுத்துக்காட்டவே ‘மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்’ என்கிறார்.

இதன்வழியாக, பாவிகளின் சமூகத்திலிலிருந்து மட்டுமல்ல அந்தப் பாவம் விளைவிக்கும் தீமையிலிருந்தே விடுபடவேண்டும் என்றும், விட்டு விடுதலையாக வேண்டுமென்றும் தாவீது அரசர் எடுத்துக்காட்டுகிறார். இவ்விடம், "ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்." (1 கொரி 11:28) என்ற இறைவார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாய் இருக்கின்றது. அதாவது, ஒவ்வொருவரும் தன்னையே சோதித்தறிந்துகொள்ளும் நிலைக்கு, அல்லது சுய ஆய்வுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படித் தங்களைத் தாங்களே சுய ஆய்வு செய்துகொள்பவர்கள்தாம், ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமரக்கூடிய தகுதியையும் பெறுகிறார்கள் என்றும் தாவீது அரசர் எடுத்துக்காட்டுகிறார். இதனைத் தன் சிந்தனைகளில் கொண்டவராக திருப்பாடல் 24ல் 3 முதல் 5 வரை உள்ள இறைவசனங்களிலும் எடுத்துக்காட்டுகிறார். "ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,  இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். (திபா 24:3-5)  

இரண்டாவது விடயமாக, தாவீது அரசர், “ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்” (வச 8) என்றுரைக்கின்றார். அதாவது, கடவுளின் திருப்பிரசன்னம் நிறைந்திருக்கும் ஆலயத்திற்குள் எல்லாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது என்பதையும், அதற்கானத் தகுதிகள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதையும், அவர் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். மாசற்றோரும் மாசற்ற வாழ்க்கை நடுத்துபவரும் மட்டுமே கடவுளின் ஆலயத்திற்குள் உட்புக முடியும் என்கிறார். அப்படியென்றால், இந்த மாசற்றோருக்கான தகுதிகள் எவை என்பதையும் தாவீது அரசர் திருப்பாடல் 15ல் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். இப்போது அந்தத் திருப்பாடலை வாசிப்போம்.

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில்  குடியிருப்பவர் யார்? மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்;  தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; — இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். (திபா 15:1-5).

 ‘கோவில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதீர்கள்’ என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆலயம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் இதயமாக விளங்குகிறது. நம் இதயங்கள் ஒவ்வொன்றும் திருஆலயம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. “நெஞ்சமென்னும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா, உன்னைத் தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா” என்று பாடுகிறோம். உள்ளமெனும் ஆலயமாக இருந்தாலும், வெளிப்புறத் தோற்ற ஆலயமாக இருந்தாலும், அவைகள் மாசற்றவைகளாக இருக்கவேண்டும். இன்றைய காலக்கட்டங்களில் நமது ஆலயங்களுக்கு எப்படிப்பட்ட மனநிலையிலும் நாம் வரலாம் என்ற தவறான மனப்போக்குகள் நம் மத்தியில் பரவி வருகின்றன. இந்நிலைத் தவிர்ப்போம். மேலும்,  மாசற்ற வாழ்க்கையை மாசுபடுத்தும் பொய்யர், வஞ்சகர், தீயோர், பொல்லார் இவர்களுடனான உறவுகளைத் தவிர்த்து மாசற்ற மனிதர்களாய் வாழ்ந்து இறைவனின் இல்லமதில் இன்பமுடன் வாழ்வோம். அதற்கான அருளை இந்நாளில் கேட்டு மன்றாடுவோம். அடுத்தவார நமது விலியத்தேடலில் திருப்பாடல் 27ஐ குறித்துத் தியானிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2022, 16:41