தேடுதல்

ஞாயிறு சிந்தனை  -  300122 ஞாயிறு சிந்தனை - 300122 

பொதுக் காலம் - நான்காம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் அன்புப் பணியாற்றவே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அகிலத்தை அன்பால் நிரப்புவோம்
ஞாயிறு சிந்தனை - 290122

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் ( I. எரே 1: 4-5.17-19;  II. 1 கொரி 12: 31 - 13: 13;  III. லூக்  4: 21-30)

அன்பு என்பது சொற்களில் அல்ல செயல்களில் விளக்கம் பெறுகின்றது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் இறைவார்த்தைகளை வாசித்து நம் ஞாயிறு சிந்தனையைத் தொடங்குவோம்.

ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.  (லூக் 4: 24-30)

கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாகத்தான் இவ்வார ஞாயிறு நற்செய்தி வாசகமும் அமைகிறது. இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறார். அங்கிருந்த எல்லாரும் அவர்மேல் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியந்துபோய் அவரைப் பாராட்டுகிறார்கள். அவரது பெற்றோரான யோசேப்பையும் மரியாவையும் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து, சொந்த ஊரில் இறைவாக்கினர் எவரும் மதிக்கப்படுவதில்லை என்று கூறும் இயேசு, பழைய ஏற்பாட்டிலிருந்து இரண்டு நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். அவ்வளவுதான், கோபம் கொப்பளிக்க அவர்மீது ஒருமிக்கப் பாய்கிறார்கள். இங்கே, சீற்றங்கொண்டனர், துரத்தினர், இழுத்துச்சென்றனர் என்ற மூன்று விடயங்களை லூக்கா பதிவு செய்கின்றார். தனது சொந்த ஊரிலேயே, அதுவும் தனது பணியைத் தொடங்கிய முதல்கட்டத்திலேயே இப்படிப்பட்ட ஓர் எதிர்ப்பை இயேசு சந்திக்கின்றார். இயேசுவுக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை, அவர் பெறப்போகும் கல்வாரி அனுபவத்திற்கான முதல் ஒத்திகையாகவே நான் கருதுகிறேன். சரி போகட்டும், இயேசுவின்மீது அவர்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? அப்படி என்ன அவர் சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டார்? அவருக்காக வாதாட ஏன் அங்கு யாருமே முன்வரவில்லை, அதுவும் அவருடைய சொந்த ஊரிலேயே? இந்தக் கேள்விகளுக்கு இப்போது விடை தேடுவோம்.   

இயேசு எடுத்துக்காட்டும் முதல் நிகழ்வில், எலியாவுக்கு உதவும் சீதோன் அருகே வாழும் ஓர் ஏழைக் கைம்பெண் பற்றி கூறுகிறார். முதல் அரசர்கள் நூலில் 17ம் பிரிவில் வரும் இந்த நிகழ்வை (வச1-24) எடுத்துரைக்கின்றார் இயேசு. இந்த ஏழைக்  கைம்பெண், சாரிபாத் நகரின் ஒதுக்குபுறமான பகுதியான ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தவர். அதுவும் குறிப்பாக, இவர் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்திராத ஒரு பிற இனப்பெண் என்பதும், யாவே கடவுளை உண்மையாகத் தன் உள்ளத்தில் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பதும் மிகவும் கவனிக்கத்தக்கது. அன்றாடங்காய்ச்சியான அவரிடம் எலியா அனுப்பப்படுகிறார். சமூகத்தாலும், பொருளாதாரத்தாலும் மிகவும் கடைநிலைக்குத்  தள்ளப்பட்டவர் இக்கைம்பெண். யாருமே கண்டுகொள்ளாத, யாருமே உதவி செய்ய முன்வராத இக்கைம்பெண்மேல் கடவுள் அன்புகூர்ந்து இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். கையறு நிலையில் இருக்கும் இப்பெண், தன் இயலாமையை எடுத்துரைத்தபோதிலும்  எலியாவுக்கு மனமுவந்து உதவுகிறார். ஆண்டவர் உரைத்தபடி அந்தப் பஞ்சகாலம் முழுவதும் அவர் வீட்டில் இருந்த பானையில் மாவு தீரவுமில்லை, கலயத்திலிருந்த எண்ணெய் குறையவுமில்லை. இதைத்தொடர்ந்து, இறந்துபோன அக்கைம்பெண்ணின் மகனையும் உயிர்ப்பித்துக் கொடுக்கிறார் எலியா. இந்நிகழ்விற்குப் பின்பு, யாவே கடவுள்மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழம் அதிகரிப்பதையும் பார்க்கிறோம்.

இயேசு காட்டும் இரண்டாவது நிகழ்வாக அமைவது நாமான் நலம்பெறும் நிகழ்வு. அரசர்கள் இரண்டாவது நூலில் ஐந்தாவது பிரிவு முழுவதும் நாமான் நலம்பெறும் நிகழ்வு கூறப்படுகிறது. பிற இனத்தைச் சேர்ந்த படைத்தலைவனான நாமான், இறைவாக்கினரான எலிசாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, யோர்தான் ஆற்றிலே ஏழு முறை மூழ்கி எழும்போது, அவரது தொழுநோய் நீங்கி அவர் நலமடைகிறார். இதில் நாம் நினைவில் நிறுத்தவேண்டிய செய்தி என்னவென்றால், ஏழைக் கைம்பெண்ணின் மகன் உயிர்பெற்றெழுந்ததும், அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்” (வசனம் 24) என்கிறார். அவ்வாறே நாமானும் நலம்பெற்றவுடனே, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்” (வசனம் 15) என்று எலிசாவிடம் கூறுகிறார்.

ஆக, சாரிபாத்தில் வாழ்ந்த ஏழை கைம்பெண்ணும், சிரியா மன்னனின்  படைத்தலைவனான நாமானும் பிற இனத்தவர்கள் என்பதும், இஸ்ரயேல் மக்களிடையே கைம்பெண்கள் பலர் இருக்க, சாரிபாத்தில் வாழ்ந்த ஓர் ஏழை கைம்பெண்ணிடம் மட்டுமே எலியா அனுப்பப்பட்டார் என்றும், இஸ்ரயேல் மக்களிடையே                      தொழுநோயாளர்கள் பலர்  இருந்தும், சிரியா நாட்டைச் சேர்ந்த நாமான் மட்டுமே குணம் பெற்றார் என்றும் இயேசு சொன்னதுதான் இயேசுவின் ஊர்க்காரர்களுக்கு அவர்மேல் பயங்கர கோபம் வருவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. இஸ்ரயேல் மக்கள், தாங்கள் மட்டுமே யாவே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட தூய்மையான மக்கள் எனவும், தங்களைத் தவிர மற்ற எல்லாரும் தீட்டானவர்கள் என்றும் மமதையில் வாழ்ந்தார்கள். மிக முக்கியமாக, சமாரியர்கள்மேல் கடுமையான வெறுப்புணர்வைக் காட்டினார்கள். பொறாமை, வெறுப்பு, பகைமையுணர்வு காழ்ப்புணர்ச்சி, கோபம், வஞ்சகம், சூது, பிரித்தாளும் சூழ்ச்சி ஆகிய கடவுளுக்கு ஒவ்வாத குணங்களையும் கொண்டிருந்தார்கள் என்பது, அவர்கள் இயேசுவின் மீது காட்டிய கோபத்திலிருந்து வெளிப்படுகிறது.   

இந்நேரத்தில், இயேசு இந்த இரண்டு சம்பவங்களை எடுத்துக்காட்டி, கடவுளின் அன்புக்கு எல்லாரும் சொந்தக்காரர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார். வாழ்வில் நலிந்தவர்கள், ஏழைகள், துன்புறுவோர், துயரத்தில் ஆழ்ந்திருப்போர், கைவிடப்பட்டோர், நோயாளர்கள், கைம்பெண்கள், விலைமாதர்கள், வரிதண்டுவோர் என எல்லாரையும் தேடும் அன்புதான் கடவுளின் கனிந்த அன்பு என்பதை எடுத்துரைக்கின்றார். மேலும், இதுவே எல்லோருக்கும் மீட்புதரும் அன்பு என்பதையும், இத்தகைய தந்தையின் அன்பையே தானும் எல்லா மக்களுக்கும் கொடுக்க வந்திருப்பதாகவும் சொல்லாமல் சொல்லுகிறார் இயேசு.

இத்தகைய அன்பற்ற மனநிலை இருக்கக் கூடாது என்பதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் எடுத்துக்காட்டுகிறார். மேலும், ஒரு மனிதரிடம் உண்மையான அன்பு இருக்குமேயானால், அது எத்தகையதாய் இருக்கும் என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகின்றார் பவுலடியார். அவ்வார்த்தைகளுக்கு இப்போது செவிமடுப்போம்.  

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது;தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது (1 கொரி 13:4-8).

குறிப்பாக, இந்தப் பிரிவின் இறுதியிலே, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது என்கிறார். இத்தகைய தலைசிறந்த அன்பு இஸ்ரயேல் மக்களிடத்திலே காணப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம். இயேசுவின் பணி வாழ்வு முழுவதும் அவரோடு வீண் தர்க்கத்தில் ஈடுபட்டு வந்த சதுசேயரும், பரிசேயரும், திருச்சட்ட அறிஞர்களும், அவருடைய சொந்த ஊர் மக்களை போல இப்படிப்பட்ட அன்பில்லா மனநிலையைத்தான் கொண்டிருந்தனர்.

நாம் விண்ணை முட்டும் காரியங்களை நிகழ்த்தினாலும், அடிப்படையில் அன்பு இல்லை என்றால் எல்லாம் வீணிலும் வீண் என்பதுதான் உண்மை. ஒருமுறை என் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு அருள்பணியாளரைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். "அவர் அந்தக் கல்லூரியில் வேலை செய்கிறார், வெளிநாட்டில் உள்ள புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர், மிகவும் திறமையானவர், அருமையாகப் பாடம் நடத்துவார், பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர், 5 மொழிகளில் பேசக்கூடியவர், நன்றாகப் பாடுவார், பூசை வைப்பார் என்று சொல்லிக்கொண்டே போனார், நானும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருந்தேன், பேசிக்கொண்டே சென்றவர் திடீரென்று இடையில் நிறுத்திவிட்டு சொன்னார், எல்லாம் சரிதான் சாமி, ஆனால், கல்லூரியில் யாருக்கும் அவரை பிடிக்காது. காரணம், அவர் யாரையும் புரிந்துகொள்ளமாட்டார். அவருக்கு அவருடைய வேலை நடக்கணும் அவ்வளவுதான், யாருக்கு என்ன நடந்தாலும் கன்டுகொள்ளவும் மாட்டார், அக்கறை காட்டவும் மாட்டார். அன்பு என்றால் என்ன விலை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.   

அன்பானவர்களே, எங்களது மதுரை மறைமாநில இயேசு சபைக் குரு, மறைந்த விக்டர் அவர்கள், இமயத்தை தொடுவது சாதனை அல்ல... பிறர் இதயத்தைத் தொடுவதுதான் சாதனை... என்று அடிக்கடிக் கூறுவார். இன்றைய காலகட்டங்களில், இல்லற வாழ்விலும் சரி, துறவற வாழ்விலும் சரி, பலர் இமயத்தைத் தொடுவதே சாதனையாக நினைக்கிறார்கள். ஆனால், பிறர் இதயத்தைத் தொடுவதுதான் உண்மையான சாதனை என்பதை புனித அன்னை தெரசா போன்ற பலர், தங்களின் வார்த்தையாலும் வாழ்வாலும் வாழ்ந்து  காட்டியிருக்கிறார்கள். 

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” (எரே 1:4- 5). என்ற முதல் வாசகத்திற்கு முழுவடிவம் கொடுக்கும் இறைவாக்கினராக, இறைமகனாக இயேசு ஆண்டவர் விளங்கினார்.  ‘நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்’ என்ற புதிய கட்டளையை இயேசு கொடுத்தார்.

என்னுடைய கிறிஸ்தவ வாழ்வு எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் எண்ணிப் பார்ப்போம். என்னிடம் துலங்கும் கிறிஸ்துவின் அன்பு சுயநலம் நிறைந்ததா அல்லது பொதுநலம் நிறைந்ததா? அது எனக்கானது மட்டுமா? அல்லது எல்லாருக்குமானதா? என்பதை ஆன்ம பரிசோதனை செய்வோம்.

"அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை, அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது, செயல்களில் விளக்கம் பெறுகின்றது அன்பு" என்றார் அன்னை தெரசா. கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும், இத்தகைய அன்புப் பணிக்கே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அகிலத்தை அன்பால் நிரப்புவோம். அதற்கான அருளை ஆண்டவர் நம்மீது பொழிந்திட  இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2022, 16:15