தேடுதல்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்  

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21, 2019, ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்து 1000 நாட்களைக் கடந்துவிட்டன

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21, 2019,  ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட  வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்து 1000 நாட்கள் நிறைவடைவதையொட்டி, "ஆண்டவரே, என் அழுகுரல் உம்மிடம் வரட்டும்" என்ற மையப்பொருளில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக ஜனவரி 14, வெள்ளியன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித், அவர்கள், அருள்பணியாளர்கள்,  அருள்கன்னியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஜனவரி 14 ஆம் தேதி, வெள்ளியன்று தெவத்தாவில் (Tewatta) உள்ள லங்கா அன்னையின் தேசிய பெருங்கோவிலில், காலை 10 மணிக்கு ஒன்றுகூடி, இறைவேண்டல் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கேட்குமாறும் அழைப்புவிடுத்ததாகவும் UCAN செய்தி  தெரிவிக்கிறது.   

கொழும்புவின் துணை ஆயர் Anton Ranjith அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, முழு நாடும் அனுபவித்துவரும் இந்த இக்கட்டான தருணத்தில், விசுவாசத்தை வலுப்படுத்தி, கடவுளின் அன்னையிடம் திரும்புவது அவசியம்,  ஏனென்றால், அவரே ஆண்டவரிடம் பரிந்துபேசி மக்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தருகிறார் எனக் கூறியதாகவும் UCA News  கூறுகிறது.  

இச்சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட அரசுத்தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்பட்ட விதம் குறித்து ஆயர் பேரவையின் அதிருப்தியை, கர்தினால் இரஞ்சித் அவர்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் யார், இதனைச் செய்யத் தூண்டியவர்கள் யார் என்பதையெல்லாம் குறித்து, சரியாக விசாரித்து உண்மைகள் கண்டறியப்படவில்லை என்று கர்தினால் இரஞ்சித் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று இலங்கையில் உள்ள மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், மற்றும் மூன்று சொகுசு உணவகங்களில் நடத்தப்பட்ட. வெடிகுண்டு தாக்குதலில், 37 வெளிநாட்டினர் உட்பட 279 பேர் கொல்லப்பட்டனர்,  500 பேர் படுகாயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2022, 16:08