தேடுதல்

ஆயர் Stephen Chow ஆயர் Stephen Chow 

ஹாங் காங் ஆயர் - உறவுப் பாலமாக இருப்பது, கடினமான பணி

சீன அரசுக்கும், ஹாங் காங் தலத்திருவைக்கும், அதேவண்ணம், கத்தோலிக்கர்களுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பதே என் ஆவல் - ஹாங் காங் புதிய ஆயர் Stephen Chow

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சீன அரசுக்கும், ஹாங் காங் தலத்திருவைக்கும், அதேவண்ணம், கத்தோலிக்கர்களுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பதே என் ஆவல் என்று ஹாங் காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் Stephen Chow Sau Yan அவர்கள் கூறினார்.

டிசம்பர் 4, கடந்த சனிக்கிழமை, ஹாங் காங்கில் உள்ள அமல அன்னை பேராலயத்தில், ஹாங் காங் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் கர்தினால் John Tong Hon அவர்களால் திருப்பொழிவு செய்யப்பட்ட ஆயர் Stephen Chow அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

உறவுப் பாலமாக இருப்பதும், ஒப்புரவை வளர்ப்பதும் தனக்கு முன் இருக்கும் கடினமான ஒரு பணி என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய ஆயர் Stephen Chow அவர்கள், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், எந்த அரசியல் கொள்கையைக் கொண்டிருந்தாலும், ஒற்றுமையாய், ஒருவருக்கொருவர் உதவி செய்வது ஒன்றே நமக்கு முன்னிருக்கும் பாதை என்பதை, இந்தப் பெருந்தொற்று நமக்கு ஆழமாக உணர்த்தியுள்ளது என்று கூறினார்.

சீனாவில், பல்வேறு தடைகளையும், சவால்களையும் சந்தித்தாலும், தன் மறைப்பணியை மனம் தளராமல் ஆற்றிய மற்றொரு இயேசு சபை அருள்பணியாளர் மத்தேயோ ரிச்சி அவர்கள் தனக்கு ஓர் உந்துசக்தியாக இருக்கிறார் என்று, ஆயர் Stephen Chow அவர்கள் குறிப்பிட்டார்.

ஆயர் Stephen Chow அவர்கள், திருப்பொழிவு செய்யப்பட்ட இத்திருப்பலியில், அருள்பணியாளராகள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோருடன், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்களும், ஹாங் காங் ஆளுநர் Carrie Lam அவர்கள் தலைமையில், ஏனைய அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

1959ம் ஆண்டு பிறந்த Stephen Chow அவர்கள், 1984ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்து, 1994ம் ஆண்டு ஓர் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். உளவியல், மற்றும் மனித முன்னேற்றம் ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற Stephen Chow அவர்கள், 2018ம் ஆண்டு முதல், சீன இயேசு சபையினரின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஹாங் காங் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Michael Yeung Ming Cheung அவர்கள் 2019ம் ஆண்டு, சனவரி 3ம் தேதி இறையடி சேர்ந்ததையடுத்து, ஓராண்டுக்கும் மேலாக அடுத்த ஆயர் நியமிக்கப்படாத நிலையில், 2021ம் ஆண்டு மே 17ம் தேதி, Stephen Chow அவர்கள், ஹாங் காங் ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார். (Fides/ AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2021, 15:04