தேடுதல்

பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா பேராலயத்தில் செபிக்கும் பக்தர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா பேராலயத்தில் செபிக்கும் பக்தர்கள் 

பிலிப்பீன்ஸ் பொதுத் தேர்தலுக்காக இறைவேண்டல்

பிலிப்பீன்ஸ் நாட்டில் 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவை, நாட்டின் நலனுக்காக செபிக்குமாறு, இறைவேண்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவை, நாட்டின் நலனுக்காக செபிக்குமாறு, இறைவேண்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 30, இச்செவ்வாய் முடிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றிய பேராயர் Romulo Valles அவர்களால் வெளியிடப்பட்ட இந்த இறைவேண்டல், பிலிப்பீன்ஸ் நாட்டு அரசியலமைப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள 16 விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

நேர்மை, நாணயம் ஆகிய விழுமியங்களுடன் மக்களுக்குப் பணியாற்ற விழையும் வேட்பாளர்களை மக்கள் தெரிவுசெய்யுமாறு விண்ணப்பிக்கும் இந்த இறைவேண்டலை, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் முன்னாள் தலைவர், Socrates Villegas அவர்கள் உருவாக்கியுள்ளார் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும், முதல், மற்றும் மூன்றாம் ஞாயிறுகளில் நாட்டின் தேர்தலையொட்டி உருவாக்கப்பட்டுள்ள இந்த இறைவேண்டலும், இரண்டு மற்றும் நான்காம் ஞாயிறுகளில், நடைபெறவிருக்கும் ஆயர் மாமன்றத் தயாரிப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள இறைவேண்டலும், ஒவ்வொரு பங்கிலும் எழுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், நாட்டின் அரசுத்தலைவர், உதவித் தலைவர், 12 செனட் அவை உறுப்பினர்கள், மற்றும் 308 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

மேலும், டிசம்பர் 1, இப்புதனன்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் புதியத் தலைவராக Kalookan மறைமாவட்டத்தின் ஆயர் Pablo Virgilio David அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்று UCA செய்திக்குறிப்பு கூறுகிறது.

2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முடிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் 62வயது நிறைந்த ஆயர் David அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்களின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் வன்மையாக கண்டனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2021, 14:36