தேடுதல்

புனித திருமுழுக்கு யோவானும் இயேசுவும் புனித திருமுழுக்கு யோவானும் இயேசுவும் 

விண்மீன் காட்டும் பாதையில்.... - இருப்பதில் மனநிறைவு

ஊழலற்ற உலகம் படைக்க வேண்டுமெனில், புனித திருமுழுக்கு யோவானைப் போன்ற நேர்மையான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

டிசம்பர் 9ம் தேதி, அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள். உலக மனித உரிமைகள் தினத்திற்கு முந்தைய நாள். ஊழலற்ற உலகம் படைக்க வேண்டுமெனில், முதலில் நேர்மையான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால்தான் மனவுறுதியுடன், அநீதி கண்டு அஞ்சாமல் போராட முடியும், கொண்ட கொள்கைக்காக, உயிரை விடவும் தயாராக இருக்க முடியும். நற்செய்தியில் பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதராக புனித திருமுழுக்கு யோவானைக் காண்கிறோம்.

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிட பெரியவர் எவரும் தோன்றியதில்லை' என, இயேசுவே அவருக்கு உலகில் உயரிய இடத்தைக் கொடுக்கிறார். இன்று ஊழலை எதிர்ப்பவர்கள், உயிரோடு வாழ முடிவதில்லை, அப்படியேத் தப்பிப் பிழைத்தாலும் அவர்களை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை இந்த உலகு. புனித யோவானுக்கு நடந்ததும் அதுதான்.  ஓர் அரசின் அநீதத்தன்மையை எதிர்த்து துணிச்சலோடுக் குரல் எழுப்பினார். தலை துண்டிக்கப்பட்டு தட்டில் வைக்கப்பட்டதுதான் அவருக்குக் கிடைத்த பரிசு.

பாலைநிலத்தின் கூக்குரலாக, மனமாற்றத்திற்கு அழைப்பு விடுத்த, திருமுழுக்கு யோவான்தான், "அவரே உலகின் செம்மறி" என்று இயேசுவை உலகிற்கு அடையாளம் காட்டுகிறார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. அந்த பாலைநிலத்துக் கூக்குரல், ஏரோதின் அரண்மனையிலும் எதிரொலித்தது. சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சந்திக்கிறார் திருமுழுக்கு யோவான். நீதிக்காக மறைசாட்சியாகவும் மாறுகிறார்.

"ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள், பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள், மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்", என்று முழங்கிய திருமுழுக்கு யோவான்,   “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும், உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள், நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என, அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

உலகில் ஊழல்கள் குறைய வேண்டுமானால், இருப்பதில் மனநிறைவு அடைய வேண்டும். அதாவது, உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் என்ற திருமுழுக்கு யோவானின் அழைப்பு ஒவ்வொருவர் உள்ளத்திலும் நுழைந்து செயலாக்கம் பெறவேண்டும்.

அநீதிகளைக் கண்டு வாய்மூடி மௌனியாக, அதற்குத் துணைப் போகாமல், சமுதாயச் சீர்திருத்தத்திற்கு நம் கைகளை இணைப்போம்.

ஆண்டவருக்கான வழியை ஆயத்தமாக்குங்கள், என்பதுதான் திருவருகைகாலத்தில் நமக்கு விடப்படும் அழைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 15:40