தேடுதல்

வியட்நாமில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை வியட்நாமில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை 

வியட்நாம் கோவிட்-19 மீட்புப் பணியில் பல்சமய ஒருங்கிணைப்பு

நம் அனைவருக்கும் ஒருவரே இறைவன் என்பதால், பிரிவுகளைத் தாண்டி, பாலங்களை அமைப்பது, நெருக்கடி வேளைகளில் நமக்கு முன்னிருக்கும் சவால் - Ho Chi Minh பேராயர் Nang

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய துன்பங்களிலிருந்து மக்களை மீட்க அனைவரும் இணைந்து வந்து பணியாற்றியது, மனதுக்கு நிறைவைத்தந்தது என்று, வியட்நாம் நாட்டின் பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் கூறியதாக, பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

வியட்நாமின் Ho Chi Minh உயர்மறைமாவட்டம், ஏற்பாடு செய்திருந்த பிறரன்புப் பணிகளில், புத்த மதத் துறவிகளும், கிறிஸ்தவத் துறவிகளும் இணைந்த 682 தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து பணியாற்றியது, அனைவருக்கும் உன்னதமான ஓர் அனுபவத்தைத் தந்தது என்று, பேராயர் Joseph Nguyen Nang அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

மருத்துவப்பணியாளர்களுக்கு உதவி செய்தல், உணவு பரிமாறுதல், மற்றும் பெருந்தொற்றைக் குறித்த விழிப்புணர்வை வழங்குதல் என்ற பல பணிகளில் அனைத்து மதத்தைச் சேர்ந்த இளையோர், பல்வேறு சவால்கள் நடுவிலும், ஆர்வமாய் ஈடுபட்டனர் என்று, Ho Chi Minh உயர்மறைமாவட்டம் கூறியது.

மனிதர்களின் துயரைத் துடைப்பது, அனைத்து மதங்களும் விடுக்கும் பொதுவான அழைப்பு என்றும், நம் அனைவருக்கும் ஒருவரே இறைவன் என்பதால், பிரிவுகளைத் தாண்டி, பாலங்களை அமைப்பது, நெருக்கடி வேளைகளில் நமக்கு முன்னிருக்கும் சவால் என்றும் பேராயர் Nang அவர்கள் எடுத்துரைத்தார்.

மத, இன பாகுபாடு ஏதுமின்றி, கோவிட் பெருந்தொற்றினால் அனைத்து மக்களும் உயிரிழந்துள்ளனர் என்பதால், இறந்தோரின் நினைவாக இறைவேண்டல் செய்வதற்கென, நவம்பர் 19, வருகிற வெள்ளியன்று, மாலை 7.30 மணிக்கு Ho Chi Minh நகரின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை எழுப்பப்படுமாறு, பேராயர் Nang அவர்கள் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 14:04