தேடுதல்

ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார் - மாற்கு 12:42 ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார் - மாற்கு 12:42 

பொதுக்காலம் 32ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல், நம்மையே வருத்தித் தரவேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியே சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 32ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

பங்குக்கோவில் திருநாள் நெருங்கிவந்தது. திருநாளுக்கு நிதி உதவி செய்யுமாறு, பங்குத்தந்தை, ஒவ்வொரு திருப்பலியிலும், மக்களிடம் விண்ணப்பித்தார். அத்துடன், நிதி உதவி செய்பவரின் பெயரும், அவர் வழங்கியத் தொகையும், ஞாயிறு திருப்பலிகளில் வாசிக்கப்படும் என்றும், பங்குத்தந்தை அறிவித்திருந்தார்.

பங்கில் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவர், திருவிழாவுக்கென, பங்குத்தந்தையிடம், பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அடுத்த ஞாயிறன்று, அதை கட்டாயம் அறிவிப்பதாக பங்குத்தந்தை கூறியதும், செல்வந்தர் விடைபெற்றுச் சென்றார். ஐந்து நிமிடங்கள் சென்று, செல்வந்தர் மீண்டும் பங்குத்தந்தையிடம் வந்து, "சாமி, நான் கொடுத்த பத்தாயிரத்தில் தயவுசெய்து ஒரு ரூபாயைத் திருப்பிக்கொடுங்கள்" என்று கேட்டு வாங்கிக்கொண்டார். காரணம் புரியாமல் திகைத்து நின்ற பங்குத்தந்தையிடம், அச்செல்வந்தர், "சாமி, நீங்கள் பூசையில் என் பெயரையும், நான் கொடுத்த தொகையையும் சொல்லும்போது, 'பத்தாயிரம்' என்று சொன்னால், அது ஒரே வார்த்தையிலே, சுருக்கமா முடிஞ்சிடும். அதற்குப்பதில், நான் தந்தது, 'ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து, தொண்ணுற்றொன்பது' என்று நீங்கள் சொல்லும்போது, அது நீளமாகத் தெரியும்" என்று விளக்கம் தந்தார்.

தர்மச்செயல்களுக்கு விளம்பரம் தேடும் பலருக்கு, இச்செல்வந்தர், ஒரு சிறிய, இன்னும் சொல்லப்போனால், சின்னத்தனமான எடுத்துக்காட்டு. மற்றவர்களின் செவிப்பறையைக் கிழிக்கும் அளவு, தங்கள் தான தர்மங்களை அறிக்கையிடும் செல்வந்தர்களை, இயேசு இன்றைய நற்செய்தியில் (மாற்கு 12: 38-44) தோலுரித்துக் காட்டுகிறார்.

கோவிலில், காணிக்கைப் பெட்டிக்கருகே நடந்தவற்றை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: "இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்." (மாற்கு 12:41) இந்தக் கூற்றில், மக்கள் காணிக்கைப் பெட்டியில் செப்புக்காசு போட்டனர் என்பதை, நற்செய்தியாளர் மாற்கு, குறிப்பிட்டுப் பேசுவது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

எருசலேம் கோவிலில், காணிக்கைப் பெட்டிகள், குழாய் வடிவத்தில், உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. எனவே, அவற்றில் நாணயங்களைப் போடும்போது, மிகுந்த ஒலியை உருவாக்கின. அந்த ஒலி நீண்டநேரம் கேட்கவேண்டும் என்பதற்காக, தாங்கள் வழங்கிய காணிக்கைத் தொகையை, சிறு சில்லறைகளான செப்புக்காசுகளாக மாற்றி, மூட்டைகளில் கட்டிக் கொணர்ந்து, அவற்றை, அந்தக் காணிக்கைப் பெட்டியில் போட்டனர், செல்வந்தர். அதிலும், மக்கள் அதிகம் கூடிவந்த பகல் நேரங்களில் அவர்கள் இவ்வாறு செய்திருக்கவேண்டும். யாருடைய காணிக்கை, அதிக நேரம் ஒலி எழுப்பியது என்ற போட்டியும், செல்வந்தர்களுக்கிடையே எழுந்திருந்தால், வியப்பில்லை.

காணிக்கைப் பெட்டிக்கருகே செல்வந்தர்கள் நடத்திய இந்தக் கேவலமான நாடகங்களைக் கண்டு, உள்ளத்தில் வேதனை அடைந்த இயேசுவின் கவனம், அங்கு வந்து சேர்ந்த ஓர் ஏழைக் கைம்பெண் மீது திரும்பியது. யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், காணிக்கையைச் செலுத்திவிட்டு செல்லநினைத்த அக்கைம்பெண், இயேசுவின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இந்நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

மாற்கு 12:42-44

அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, இயேசு தம் சீடரை வரவழைத்து, "இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசுபோட்ட மற்ற எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன், தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்" என்று அவர்களிடம் கூறினார்.

அப்பெண்ணின் காணிக்கையை, மற்ற செல்வந்தர்களின் காணிக்கையோடு ஒப்பிட்டு, புகழ்கிறார் இயேசு. காணிக்கை பெட்டிக்குள் எவ்வளவு பணம் போடப்பட்டது என்ற கணக்குப் பார்வையுடன் சிந்தித்தால், அப்பெண்ணின் காணிக்கையை, இயேசு மிகைப்படுத்தி புகழ்வதுபோல் தெரிகிறது. செல்வந்தர்கள் போட்டது, 1000 ரூபாய் என்றால், இந்த ஏழைக் கைம்பெண் போட்டது, 50 காசு. ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதைவிட, காணிக்கை செலுத்தியபின், அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பதுதான், காணிக்கையின் மதிப்பைக் காட்டும்.

அப்பெண்ணின் காணிக்கையைப் பற்றி இயேசு புகழ்ந்து சொன்ன வார்த்தைகளில், ஆழமும், அர்த்தமும் உள்ளன. இருந்ததைப் போட்டார், வைத்திருந்ததைப் போட்டார் என்று மட்டும் சொல்லாமல், இருந்த அனைத்தையுமே போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டார் என்று, அக்காணிக்கையின் முழுமையை, அழுத்தமாய், ஆணித்தரமாய் கூறுகிறார் இயேசு.

அதுமட்டுமல்ல... இருந்தது, பிழைப்புக்காக வைத்திருந்தது என்ற சொற்கள் வழியே, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்தையும் இயேசு குறிப்படுவதை உணரலாம். சுருங்கச் சொல்லவேண்டுமானால், இந்தக் கைம்பெண், தன்னையும், தன் வாழ்வையும்பற்றி சிறிதும் கணக்குப்பார்க்காமல், கடவுளுக்கு, அனைத்தையும் வழங்கினார் என்பதை, இயேசு நமக்குப் புரியவைக்கிறார்.

இந்தக் கைம்பெண் ஏன் இவ்விதம் செய்தார் என்ற கேள்வி எழலாம்... கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து, பதிலுக்கு ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்து, இப்படி செய்தாரா? நிச்சயமாகக் கிடையாது. அந்தக் கண்ணோட்டம், வியாபாரம். ‘கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா’ என்று நாம் இறைவனிடம் பேசினால், அது, பேரம் பேசும் வியாபாரம். செல்வந்தரின் எண்ணங்களை ஆக்ரமிக்கும் வியாபார பேரங்களை அறியாதவர், இந்த கைம்பெண். தன்னிடம் இருந்த அனைத்தையும் கடவுளுக்கு மகிழ்வாகத் தந்தவர். எனவே, அவர் இயேசுவின் மனமார்ந்த பாராட்டுகளைப் பெறுகிறார்.

இயேசு கூறிய புகழுரைகளை, அப்பெண் கேட்டாரா? இல்லை. காணிக்கை செலுத்திய திருப்தியுடன், அவர் காணாமல் போய்விட்டார். அப்பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும், கற்களிலும், பெயர்களைப் பொறித்து, போஸ்டர்கள் ஒட்டி, ஆர்ப்பாட்டம் செய்யாமல், அமைதியாக நல்லது செய்வது, ஏழைகளின் அழகு.

இறைவாக்கினர் எலியாவுக்கு உணவு வழங்கும் கைம்பெண் - 1 அர. 17:10-16
இறைவாக்கினர் எலியாவுக்கு உணவு வழங்கும் கைம்பெண் - 1 அர. 17:10-16

மற்றோர் ஏழைக் கைம்பெண்ணை, இன்றைய முதல் வாசகத்தில் (அரசர்கள் முதல் நூல் 17:10-16) சந்திக்கிறோம். இறைவாக்கினர் எலியா சந்தித்த கைம்பெண்ணும், அவரது மகனும், வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் போராடும், பல கோடி ஏழை மக்களின் பிரதிநிதிகள். எலியா சந்தித்த இந்தக் கைம்பெண், ஏற்கனவே, தனக்கும், தன் மகனுக்கும், மரணதண்டனை விதித்துவிட்டப் பெண். இறப்பதற்குமுன், தன் மகனுக்குச் சிறிதளவாகிலும் உணவு தந்து, அவன் மகிழ்ந்திருப்பதைக் காணவேண்டும் என்ற ஆவலோடு, அந்தத் தாய், வீட்டிலிருந்த கையளவு மாவைக் கொண்டு, ரொட்டி சுடுவதற்கு, சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தார். அப்பெண் சுள்ளிகள் பொறுக்கியதை, தங்கள் உயிரற்ற உடல்களை எரிக்க, அவர் விறகுக்கட்டைகளை திரட்டினார் என்ற கோணத்திலும் கற்பனைசெய்து பார்க்கலாம். அத்தகைய விரக்தியை மனதில் சுமந்திருந்த அக்கைம்பெண்ணின் வாழ்க்கையில், கடவுள் குறுக்கிடுகிறார்.

இறைவாக்கினர் எலியா வழியாக, கடவுள் வருகிறார். சும்மா வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டுவருகிறார். அப்பெண்ணின் உணவில் பங்குகேட்டு வருகிறார். முதலில், எதேச்சையாக, தண்ணீர் மட்டும் கேட்கும் இறைவாக்கினர் எலியா, அப்பெண் போகும்போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார். ஏதோ அக்கைம்பெண், தன் வீட்டில் அப்பங்களைச் சுட்டு, அடுக்கிவைத்திருப்பது போலவும், அவற்றில் ஒன்றிரண்டைக் கொண்டு வா என்று கேட்பது போலவும் உள்ளது, எலியாவின் கூற்று. மேலோட்டமாகப் பார்த்தால், எலியா, அவரை, கேலிசெய்வது போலத் தோன்றலாம். ஆனால் அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் ஆற்றக்கூடிய புதுமைகளைக் காண்பதற்கு ஓர் அழைப்பு. அந்த அழைப்பைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை, அந்தப் பெண். தன் பசி, அதைவிட தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை, விரக்தியை இவ்வார்த்தைகளில் கொட்டுகிறார்:

“வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்.” (1 அரசர்கள் 17: 12)

விரக்தியின் உச்சத்தில், தனக்குத் தானே எழுதிக்கொண்ட மரணதண்டனை தீர்ப்பு இது. நம்மைச் சுற்றியிருக்கும் பல கோடி ஏழை மக்கள், பலமுறை, குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், தங்களுக்குத் தாங்களே வழங்கிவரும் மரணதண்டனை தீர்ப்புக்களை, இந்த வார்த்தைகள் நமக்கு நினைவுறுத்துகின்றன.

விரக்தியில் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளுக்குப் பதிலாக, இறைவாக்கினர் எலியா அவரிடம், இறைவன் ஆற்றக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். எலியா சொன்னதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு விளங்கியதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்" என்று இன்றைய வாசகம் கூறுகிறது.

இறைவாக்கினர் எலியாவை, முன்பின் பார்த்திராத அந்தக் கைம்பெண் நடந்துகொண்ட விதத்தை, இருவேறு வகையில் நாம் பொருள் கொள்ளலாம். எலியா சொன்னதுபோல், புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு, அப்பெண் அப்படி செய்திருக்கலாம். ஆனால், அதைவிட மேலான ஒரு கோணத்தில், நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். தனது இயலாமையிலும், வறுமையிலும், பசியிலும், இன்னொரு மனிதரின் பசியைப் போக்கவேண்டும் என்ற ஆவலால், அவர் அப்படிச் செய்திருக்கலாம்.

ஏழைகளின் மனம் அத்தகையது. அவர்களுக்குத்தான், தாழ்வென்றால், தவிப்பென்றால், பசியென்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து, பசியைப் போக்கும் புதுமைகளை, அவர்களால் ஆற்றமுடியும். தங்கள் துன்பங்கள் நடுவிலும், அடுத்தவரின் துன்பங்களைத் துடைக்கும் கலையை அறிந்தவர்கள், ஏழைகள்.

பலன் எதையும் எதிர்பாராமல், கொடுத்த இவ்விரு கைம்பெண்களைப்பற்றி சிந்திக்கும்போது, புனித அன்னை தெரேசா அவர்கள், தன் வாழ்வில் சந்தித்த இரு ஏழைகள் தனக்களித்த ஒப்பற்ற கொடைகளைப்பற்றி கூறியது, நம் நினைவில் நிழலாடுகின்றன. இவ்விரு அனுபவங்களைப்பற்றி, அன்னை பகிர்ந்த சொற்கள்:

"ஒருமுறை, நான் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அச்சாலையில், தர்மம் கேட்டபடி அமர்ந்திருந்த ஒருவர், என்னை அருகில் அழைத்தார். நான் அவர் அருகே சென்றதும், அவர் என்னிடம், 'அன்னையே, எல்லாரும் உங்களுக்குப் பணம் தருவதுபோல், நானும் உங்களுக்கு தர விழைகிறேன். இதோ, இன்று நான் சேகரித்த பணம்' என்று சொல்லி, 15 ரூபாயை என்னிடம் நீட்டினார். அவர் தந்ததை நான் பெற்றுக்கொண்டால், அன்று அவர் பட்டினியாக இருக்கவேண்டும், அதை நான் வாங்காமல் போனால், அவரது உள்ளம் வேதனைப்படும். எனவே, நான் அவர் தந்த 15 ரூபாயை நன்றியோடு பெற்றுக்கொண்டேன். சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து அவர் சேகரித்த 15 ரூயாயை நான் பெற்றுக்கொண்டதும், அவரது முகத்தில் தோன்றிய மகிழ்வை, வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை" என்று அன்னை அவர்கள் கூறினார்.

மற்றொரு தருணத்தில் அன்னை அவர்கள் அடைந்த அனுபவத்தை இவ்வாறு கூறியுள்ளார்: "ஒருமுறை, எங்கள் இல்லத்திற்கு ஏழைப்பெண் ஒருவர் வந்தார். அவர் என்னிடம், 'அன்னையே, நானும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால், என்னிடம் பணம் எதுவுமில்லை. நான் பல வீடுகளுக்குச் சென்று, அவர்களது உடைகளை ஒவ்வொரு நாளும் துவைத்துத் தருகிறேன். என் குழந்தைகளை வளர்க்க அந்தப் பணம் உதவுகிறது. ஆனாலும், நான் உங்களுக்கு உதவிசெய்ய ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் உங்கள் இல்லத்திற்கு வந்து, உங்கள் குழந்தைகளின் உடைகளை துவைத்துத்தர, தயவுசெய்து, எனக்கு உத்தரவு தாருங்கள்" என்று அப்பெண் என்னிடம் சொன்னார். அவர், முழுமனதோடு வழங்கிய அந்தச் சேவை, விலைமதிப்பில்லாத ஒரு கொடை" என்று அன்னை அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல், நம்மையே வருத்தித் தரவேண்டும் என்பதை இன்றைய ஞாயிறு வாசகங்கள் வழியே சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காகவும், இவர்களைப்போல், தங்கள் வாழ்வு முழுவதையும், தகனப்பலியாகத் தந்துள்ள ஆயிரமாயிரம் கைம்பெண்களுக்காகவும், வறியோருக்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2021, 13:27