தேடுதல்

தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் திருத்தந்தைக்கு வழங்கிய முள் கம்பிகளால் ஆன சிலுவை தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் திருத்தந்தைக்கு வழங்கிய முள் கம்பிகளால் ஆன சிலுவை  

முள் கம்பிகளால் ஆன 'அமைதியின் சிலுவை' கண்காட்சி

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் எல்லையை நிர்ணயிக்க பயன்படுத்தப்பட்டுள்ள முள்கம்பிகளைக் கொண்டு, Kwon Daehun அவர்கள் உருவாக்கியுள்ள 136 சிலுவைகள் கொண்ட கண்காட்சி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முள் கம்பிகளால் ஆன சிலுவைகள் அழகானவை, ஏனெனில், முள்கம்பிகள், நாம் விழையும் அமைதிக்கு அடையாளங்களாக உள்ளன என்று, தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் (Moon Jae-In) அவர்கள், உரோம் நகரில், ஒரு கண்காட்சியைத் திறந்துவைத்தபோது கூறினார்.

அண்மையில், தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் அவர்கள், உரோம் நகரில் நடைபெற்ற G20 மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த வேளையில், உரோம் நகரில் உள்ள புனித லொயோலா இக்னேசியஸ் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

அக்டோபர் 29ம் தேதி முதல், நவம்பர் 7ம் தேதி முடிய நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தென் கொரியாவின் Kwon Daehun என்ற கலைஞர் உருவாக்கியுள்ள 136 சிலுவைகள், மக்களின் பார்வைக்கென வைக்கப்பட்டுள்ளன.

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் எல்லையை நிர்ணயிக்க பயன்படுத்தப்பட்டுள்ள முள்கம்பிகளைக் கொண்டு, Kwon Daehun அவர்கள் உருவாக்கியுள்ள 136 சிலுவைகள் கொண்ட இந்தக் கண்காட்சிக்கு 'அமைதியின் சிலுவை' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வட மற்றும்  தென் கொரிய நாடுகளில் வாழும் மக்கள், தங்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுகளை அழித்து, கொரியா ஒரே நாடாக உருவாவதை விரும்புகின்றனர் என்பதை, 'அமைதியின் சிலுவை' கண்காட்சி உணர்த்துகிறது என்று, இக்கண்காட்சியைத் திறந்து வைத்த அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் கூறினார்.

அக்டோபர் 29 கடந்த வெள்ளிக்கிழமை, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்துப் பேசிய தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், Kwon Daehun அவர்கள் உருவாக்கிய முள்கம்பி சிலுவைகளில் ஒன்றை, திருத்தந்தைக்கு, நினைவுப்பரிசாக வழங்கினார் என்பதும், கொரியத் தீபகற்பத்தில், அமைதியை ஊக்குவிக்குப்பதற்கு உதவியாக, திருத்தந்தை, வடகொரியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

'அமைதியின் சிலுவை' கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிலுவைகளை, சோல் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் ஆசீர்வதித்தார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2021, 14:22