தேடுதல்

Vatican News
உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில்   (J.TUQUIB)

உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பகுதி 2

உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில், உரோம் மறைமாவட்டத்தின் ஆயரும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவருமாகிய திருத்தந்தைக்குரிய பேராலயமாக அமைந்திருப்பதால், உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம், தாய் ஆலயமாகவும் கருதப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 9ம் தேதி, உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழாவும், நவம்பர் 18, இவ்வியாழனன்று, திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருங்கோவில்கள் நேர்ந்தளிப்பு விழாவும் சிறப்பிக்கப்பட்டன. புனித பேதுரு ஆலயம், கி.பி.83ம் ஆண்டில், உரோமையில், முதன்முதலாக, புனித பேதுருவின் கல்லறையின்மேல்  வத்திக்கான் குன்றின் அடிவாரத்தில் கட்டப்பட்டது. நாளடைவில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், இதே இடத்தில் மிகப்பெரிய பேராலயமாக நிறுவினார். தற்போதைய புனித பேதுரு பெருங்கோவில், 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற கலைஞர் மைக்கிள் ஆஞ்சலோவின் யுக்தியால் எழுப்பப்பட்டது. இப்பெருங்கோவில் 1626ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. மேலும், திருத்தந்தை புனித அனாக்ளீற்றஸ், திருத்தூதர் புனித பவுலின் கல்லறைமீது அவரது நினைவாக பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவையிரண்டையும் தவிர, புனித மேரி மேஜர் மற்றும் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில்களும்  உரோம் நகரிலுள்ள நான்கு முக்கிய பெருங்கோவில்கள் ஆகும். பெரிய கான்ஸ்டன்டைன் என்று அழைக்கப்படும் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களிடம், திருமுழுக்குப் பெற்ற இடத்தில் உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில்  எழுப்பப்பட்டுள்ளது. புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலின் முகப்பு, நுழைவாயில், உட்புறம் ஆகியவற்றை நேரிடையாகப் பார்ப்பது போன்று, வேலூர் மறைமாவட்டத்தின் அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள் காட்சிப்படுத்தியதை, கடந்தவார நிகழ்ச்சியில் வழங்கினோம். அதைத் தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில், அருள்பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள், அப்பெருங்கோவிலின் உட்புறத்தில் இரு பக்கங்களில் அமைந்துள்ள சிற்றாலயங்களின் அழகு, வரலாறு, அப்பெருங்கோவிலின் மைய வளைவு, திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றும் பீடத்தின் மேலுள்ள கூண்டு போன்றவற்றை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.  

உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் பகுதி 2

உரோமைப் பேரரசர்களுள் ‘பெரிய’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ஒரே பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் (Constantine கி.பி.306–337). இவர் பெரிய கான்ஸ்டன்டைன் என்று அழைக்கப்படுவதோடு, தன் பேரரசை ஒன்றிணைத்தவர் மற்றும், வலிமைப்படுத்தியவர் ஆவார். இவர் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியதைத் தொடர்ந்து, உரோமைப் பேரரசரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் முடிவுக்கு வந்தன. அதோடு, இவர் தன் பேரரசில் கிறிஸ்தவத்தையும் வளர்த்தெடுத்தார். ஐரோப்பாவில் மிகப் பழமையான ஆலயமாகவும் உரோம் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமுமாகவும் விளங்கும் இப்பெருங்கோவில், உரோம் மறைமாவட்டத்தின் ஆயரும், கத்தோலிக்கத் திருஅவையின் தனிப்பெரும் தலைவருமாகிய திருத்தந்தைக்குரிய பேராலயமாக அமைந்திருப்பதால், உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம், தாய் ஆலயமாகவும் கருதப்பட்டு வருகிறது.

உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில்
உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில்

 

18 November 2021, 12:52