தேடுதல்

Vatican News
திருத்தந்தை இரண்டாம் உர்பான் திருத்தந்தை இரண்டாம் உர்பான்  

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் உர்பான் - 2ம் பாகம்

எருசலேம் நகரை இஸ்லாமியர்களின் பிடியினின்று மீட்க சிலுவைப்போர் வீரர்களை அனுப்பி வெற்றி கண்ட திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோமுக்கு வெளியே கூடிய ஆயர் பேரவையினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் உரோம் நகருக்குள் நுழைந்து திருத்தந்தைக்குரிய  தலைமைப் பீடத்தில் அமரமுடியாமல் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் உர்பான் குறித்து கடந்த வாரம் கண்டோம். இத்திருத்தந்தை மூன்று ஆண்டுகள் தென் இத்தாலியில், நாடுகடத்தப்பட்டவர்போல் வாழவேண்டியதாகியது. ஆனால் மெட்டில்டாவின் (Matilda) படைகள், Canossa கோட்டையில் பேரரசர் ஹென்றியின் படைகள் மீது வெற்றி கண்டதும், பேரரசரின் மகன் Conrad அவரை விட்டு விலகி, மெட்டில்டாவின் துருப்புக்களோடு இணைந்து மிலானின் மன்னராக முடிச்சூட்டப்பட்டதும் நடந்தபோது, திருத்தந்தை இரண்டாம் உர்பான் உரோமுக்கு திரும்பிவர இயலும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஏனெனில், பேரரசரின் துணையுடன்தான் எதிர்திருத்தந்தையாக Guibert, புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தார். இப்போது பேரரசரே முறியடிக்கப்பட்டபோது, எதிர்திருத்தந்தைக்குப் பக்கபலமாக யாரும் இல்லா நிலை உருவானது.

   திருத்தந்தை இரண்டாம் உர்பானும் உரோம் நகர் திரும்பினார். புனித இலாத்ரன் திருத்தந்தையர் இல்லத்திற்குத் திரும்பமுடியாத நிலையில், திருஅவைக்கு உதவிவந்த ஒரு குடும்பத்தின் இல்லத்தில் தங்கினார். அவரிடம் எவ்விதப் பொருளாதார பலமும் இருக்கவில்லை. அவரே பிறரின் உதவிகளில் வாழ்ந்து வந்தது மட்டுமல்ல, கடனிலும் இருந்தார். இவ்வேளையில், 1094ம் ஆண்டு புனித இலாத்ரன் திருத்தந்தையர் மாளிகையை, அதன் ஆளுநர், திருத்தந்தைக்கு அளிக்க அவரிடம் விலைபேசினார். ஏற்கனவே கடனில் வாழ்ந்த திருத்தந்தை, அம்மாளிகையை விலைகொடுத்து வாங்க என்ன செய்வார்? இவ்வேளையில் பிரான்ஸ் நாட்டு துறவி கிரகரி என்பவர், திருத்தந்தையின் உதவிக்கு ஓடிவந்தார். தன் துறவு இல்லத்திற்குச் சொந்தமான உடைமைகளின் ஒரு பகுதியை விற்று இலாத்ரன் மாளிகையின் ஆளுநருக்குக் கொடுத்தார். இதன் வழியாக, இலாத்ரன் பசிலிக்காவுக்குள் நுழைய முடிந்த திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள், முதன் முறையாக திருத்தந்தைக்குரிய தலைமைப்பீடத்தில் அமர்ந்தார். அதாவது, உரோமுக்கு வெளியே Terracina என்ற இடத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள், சரியாக 6 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தைக்குரிய பீடத்தில் அமரமுடிந்தது.

  1095ம் ஆண்டில் ஆயர் பேரவையைக் கூட்டினார், திருத்தந்தை இரண்டாம் உர்பான். அதில் 13 பேராயர்களும், 220 ஆயர்களும், 90க்கும் மேற்பட்ட துறவு இல்ல அதிபர்களும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. பிரான்ஸில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யெருசலேம் நகரை Saracens என்ற, துருக்கிய, மற்றும் பெர்ஷிய இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க சிலுவைப்போர் நடத்துவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. இதற்கு தன் முழு ஆதரவையும் வழங்கிய திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள், பிரானஸ் நாட்டின் ஒவ்வொரு நகராகச் சென்று போதித்து படைகளைத் திரட்டினார். பின்னர், 1097ம் ஆண்டு உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை, அதே ஆண்டு ஆயர் பேரவை ஒன்றைக் கூட்டினார். இக்காலக்கட்டத்தில் பேரரசர் ஹென்றியின் பலம் இத்தாலியில் குறைந்தது. அவரைக் கண்டு திருத்தந்தை அஞ்சவேண்டிய தேவையில்லை என்ற நிலை உருவாகியது. 1099ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் ஓர் ஆயர் பேரவையைக் கூட்டி, அதிலும் சிலுவைப்போருக்கு ஆதரவான குரலை எழுப்பினார், பாப்பிறை இரண்டாம் உர்பான்.

  இத்திருத்தந்தையின் காலத்தில்தான் கான்டர்பரியின் புனித Anselm வாழ்ந்தார் என்பதையும் நாம் அறிந்திருப்பது நல்லது. நம் இத்திருத்தந்தை வழங்கிய ஆதரவு மற்றும் ஊக்கத்தினால், சிலுவைப் படைகள்முன் யெருசலேம் வீழ்ந்தது. ஆனால், 1099ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி சிலுவைப்படைகள் யெருசலேமை கைப்பற்றிய செய்தியை அறிய திருத்தந்தை இரண்டாம் உர்பான் இல்லை. ஆம், செய்தி வந்து சேர்வதற்கு முன்னரே, ஜூலை 29ந்தேதி திருத்தந்தை இறைபதம் அடைந்துவிட்டார். யெருசலேம் கைப்பற்றப்பட்ட 2 வாரத்திற்குபின்தான் திருத்தந்தை  இறந்தார் எனினும், அதுவரை அந்த செய்தி உரோம் நகரை வந்தடையவில்லை. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், துவக்க காலத்தில் இவர் இருப்பிடமின்றி அலைந்தபோது அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய Pierleoneன் வீட்டில் காலமானார், இரண்டாம் உர்பான். எதிர்திருத்தந்தைக்கு விசுவாசமான படைகள் இன்னும் நகரில் உலவிவந்ததால், இவரை இலாத்ரன் பசிலிக்காவில் அடக்கம் செய்ய இயலவில்லை. இவரின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் சிறிய ஆலயம் ஒன்றில் திருத்தந்தை முதலாம் Adrianன் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. 1881ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருத்தந்தை இரண்டாம் உர்பானை திருஅவையில் அருளாளராக அறிவித்தார்.

   இவருக்குப்பின் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

03 November 2021, 14:47