தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல்

திருஅவைக்குள் பேரரசரின் தலையீட்டை ஏற்றதால், தான் பலவீனமானவனே என வெளிப்படையாக அறிவித்து பதவி விலகவும் முன்வந்த திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தையர் வரலாற்றில் ஏறத்தாழ பாதியைக் கடந்து வந்துவிட்டோம், அதாவது ஆயிரம் ஆண்டு நம்மால் நோக்கப்பட்டுவிட்டது. 1099ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் உர்பான் காலமானதுவரை கடந்த வாரத்தில் கண்டோம்.

  1099ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ந்தேதி, அதாவது திருத்தந்தை இரண்டாம் உர்பான் இறந்த 15 நாட்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல். யெருசலேம் நகர், கிறிஸ்தவர்களிடம் வந்துவிட்டது என்ற செய்தியை அறிவதற்கு முன்னரே, திருத்தந்தை இரண்டாம் உர்பான் இறந்துவிட்டார் என அறிந்தோம். இப்போது, திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 

   திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலின் இயற்பெயர் ரனியேரோ (Raniero). இத்தாலியின் மத்தியப் பகுதியில் பிறந்த இவர், இளவயதிலேயே குளூனி சபையில் இணைந்து துறவியானார். இவர் தனது 20வது வயதில் துறவு இல்லம் தொடர்புடைய பணிக்காக உரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். இவரின் பக்தியாலும் அறிவாலும் கவரப்பட்ட திருத்தந்தை 7ம் கிறகரி, இத்துறவியை திருத்தந்தையர் இல்லத்திலேயே தங்கியிருக்குமாறு பணித்தார். சிறிது காலத்தில் இவரை புனித கிளமென்ட் கோவிலின் தலைமை அருள்பணியாளராகவும் உயர்த்தினார். திருத்தந்தை இரண்டாம் உர்பான் இறந்தபோது, இதே கோவிலில்தான் கர்தினால்கள், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடினர். அவர்கள் வாக்களித்ததும் துறவி ரனியேரோவுக்குதான். 

   நிச்சயமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். ஏனெனில் அக்காலத்தில் பேரரசருக்கும் திருத்தந்தைக்கும் இடையே, அதாவது அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே முரண்பாடுகள், மோதல்கள் வெளிப்படையாக வெடித்திருந்தன. திருத்தந்தை பதவியை ஏற்க பலர் பயந்தார்கள். அதிலும் குறிப்பாக துறவிகள். ஆனால் அக்காலத்தில் அரசியல் தீமைகளை எதிர்த்துப் போராட ஆன்மீகபலம் பொருந்திய துறவிகளையே கர்தினால்களும் விரும்பினர். ஏற்கனவே இக்காலக்கட்டத்தில் சில துறவிகள் திருத்தந்தையர் பதவியை ஏற்க மறுத்து ஒளிந்து ஓட முயன்றதையும், கர்தினால்களால் கட்டாயப்படுத்தி பதவியேற்கவைக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறோம். துறவி ரனியேரோ வாழ்விலும் அதுதான் நடந்தது. எல்லாம் துறந்த ஒரு துறவியான எனக்கு நிர்வாகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதுதான் இவரின் பலமான வாதமாக இருந்தது.

   ஆனால் கர்தினால்கள் எதையும் செவிமடுப்பதாக இல்லை. ஆகஸ்ட் 13ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 14ந்தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். துறவி ரனியேரோ, தனக்கென தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர்தான் இரண்டாம் பாஸ்கல் என்பது. இவர், திருத்தந்தை  பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினாலும், ஏற்றுக்கொண்டபின் தன் கடமைகளில் தெளிவாக, உறுதியாக இருந்தார். புனித பூமியை கிறிஸ்தவர்கள் வசம் கொண்டுவருவதில் முந்தைய திருத்தந்தையான இரண்டாம் உர்பான் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்தார்.

  இவர் பெரிய பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது. அக்காலத்தில் திருஅவைக்கு மிகவும் பெரிய தலைவலியாக இருந்த பிரச்சனை என்னவெனில், ஆயர், மற்றும் துறவு இல்ல அதிபர் நியமனங்களில் அரசியல் ஆட்சியாளர்களின் தலையீடு. என் கீழுள்ள இடங்களில் நான்தான் இவர்களை நியமிப்பேன் என பேரரசர் நான்காம் ஹென்றி, திருத்தந்தையர்களோடு பெரிய மோதலிலேயே ஈடுபட்டு வந்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுக்கு விரும்பியவர்களை ஆயர்களாகவும், துறவு இல்ல அதிபர்களாகவும் நியமித்தனர். நம் திருத்தந்தைக்கு பிரச்சனையாக இருந்த இன்னுமொரு விடயம், எதிர்திருத்தந்தையர்கள். ஆம், இவர் காலத்தில் மூன்றாம் கிளமென்ட் (Guibert), தியோதொரிக் (Theodoric), அலெரிக் (Aleric),  நான்காம் சில்வெஸ்டர் என 4 பேர் தங்களை திருத்தந்தையர்கள் என அறிவித்து பிரச்சனை கொடுத்துக்கொண்டிருந்தனர். இதையும் திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் சமாளிக்க வேண்டியிருந்தது.

  மூன்றாம் கிளமென்ட் என்ற பெயரில் தன்னை திருத்தந்தையாக அறிவித்து, பேரரசரின் ஆதரவுடன் கோலோச்சிவந்த எதிர்திருத்தந்தை Guibert, திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் அவர்கள் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே காலமானார். ஏனைய மூன்று திருத்தந்தையர்களுள் இருவர், திருத்தந்தை பாஸ்கலால் துறவு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு, தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். மூன்றாவது திருத்தந்தைக்கு ஆதரவளிக்க பெரிய அளவில் மக்கள் கூட்டம் இன்மையால், அது பெரிய அச்சுறுத்தலாக இருக்கவில்லை. இதற்கிடையில், பேரரசர் நான்காம் ஹென்றியும் 1106ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலமானார்.

   நியமனங்களில் ஆட்சியாளர்களின் தலையீட்டை தடைசெய்வதாக 1102ல் உரோமில் கூடிய ஆயர் மன்றத்தில் மீண்டும் அறிவித்தார் திருத்தந்தை. ஆனால் யாரும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை, நான்காம் ஹென்றியின் இரண்டாம் மகன் 5ம் ஹென்றி பேரரசரானார். நான்காம் ஹென்றியின் முதல் மகன் கோன்ராட், ஏற்கனவே எதிர்ப்பாளர்களான Matilda போன்றோருடன் இணைந்து பேரரசரை எதிர்த்ததை கடந்த திருத்தந்தையின் வாழ்க்கை வரலாற்றின்போது தெரிவித்திருந்தோம். இப்போது, பேரரசரான ஐந்தாம் ஹென்றி, தன் தந்தையைப்போலவே, தானே தலத்திருஅவைக்கு தலைவர்களை நியமிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதேவேளை, தன்னை திருத்தந்தை பேரரசராக முடிசூட்டவேண்டும் எனவும் விரும்பினார்.

   இங்குதான் இரண்டு பக்கமும் இழுபறியானது. 1111ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி Sutri என்னுமிடத்தில் இருதரப்பினரிடையேயும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 1111ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தப்படி பேரரசர் 5ம் ஹென்றி  திருஅவை நியமனத்தில் தலையிடுவதை விட்டுக்கொடுக்கவேண்டும். அதற்கு கைமாறாக, ஜெர்மன் தலத்திருஅவை பேரரசரிடமிருந்து பெற்ற உடைமைகளையும் சலுகைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் இருதலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு 12ந்தேதி பேரரசரின் முடிச்சூட்டுவிழா புனித பேதுரு பெருங்கோவிலில் ஏற்பாடானது. முடிசூட்டுவிழாவின்போது அனைவர் முன்னிலையிலும் இவ்வொப்பந்த விதிகள் வாசிக்கப்பட்டன. ஆனால், அங்கு கூடியிருந்த மக்களிடையே ஒரே எதிர்ப்பு. ஏனெனில் மன்னரிடமிருந்து பெற்றவைகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றால் பல அருள்பணியாளர்கள் இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்படுவர். கூச்சலும் குழப்பமும் அதிகரிக்க, முடிச்சூட்டுவிழாச் சடங்கு நிறுத்தப்பட்டு, மூன்று நாட்களுக்கு உரோம் நகரில் போராட்டங்கள் இடம்பெற்றன.

   என்ன செய்திருப்பார் பேரரசர் என்பது கணிக்க முடிகிறது. ஏற்கனவே தான் ஏற்றுக் கொண்ட விதிகளைத் தூக்கி எறிந்தார். அதோடு விடவில்லை. திருத்தந்தையையும் அங்கிருந்த கர்தினால்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார். இரண்டு மாதங்கள் கடுங்காவலில் வைத்து புது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு திருத்தந்தையை கொடுமைப்படுத்தினார். பேரரசரே ஆயர்களை நியமிக்கலாம் என திருத்தந்தையும் கையெழுத்திட, மறுநாளே பேரரசராக திருத்தந்தையின் கைகளால் முடிசூட்டிக் கொண்டார் பேரரசர் 5ம் ஹென்றி. பேரரசரின் அநியாய விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதால் பல திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தைமீது கோபம் கொண்டனர். திருத்தந்தையும், தான் பலவீனமானவனே என வெளிப்படையாக அறிவித்து பதவி விலகவும் முன்வந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

   இத்தோடு அவர் துயரம் முடிவடையவில்லை. 1116ம் ஆண்டு உரோம் நகரில் புரட்சி ஏற்பட்டபோது, பெனவெந்தோ நகருக்கு இவர் தப்பியோட வேண்டியதாகியது. அதற்கு அடுத்த ஆண்டு, பேரரசர் 5ம் ஹென்றி, உரோம் நகரில் வந்து சில மாதங்கள் தங்கியபோது, திருத்தந்தை வெளியேறவேண்டியதாகியது. பின்னர், 1118ம் ஆண்டு ஜனவரி மாதத் துவக்கத்தில் உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் அவர்கள், சில நாட்களிலேயே, அதாவது ஜனவரி 21ந்தேதி Castel San’t Angelo மாளிகையில் காலமானார். புனித பேதுரு பெருங்கோவில், பேரரசரின் படைகளின் கடடுப்பாட்டின் கீழ் இருந்ததால், இவர் உடல், ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

19 ஆண்டுகள் தலைமைப் பணியாற்றி, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட இத்துறவி, தன் கடைசி காலத்தில் அனுபவித்தவை மிகவும் கொடுமையானவை. ஆனால், திருஅவைக்காக, பேரரசர் மற்றும் சில திருஅவைத் தலைவர்களின் எதிர்ப்புக்களை தாங்கிக்கொண்டார், துறவியான இத்திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல். வரும் வாரம் திருத்தந்தை இரண்டாம் செலாசியுஸ் (Gelasius) குறித்து நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 14:39