தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் 

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ்

தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு ஐந்து நாட்களே பொறுப்பிலிருந்த திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் எண்ணற்றவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

   திருத்தந்தையர்களின் அதிகாரத்தை மதிக்கத் தவறி, அவர்களை சிறைவைத்தது, மற்றும் அவர்களை உரோம் நகருக்குள் நுழையவிடாமல் தடுத்தது என பேரரசர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளை நாம் கண்டுவருகிறோம். இவ்வாறு துன்பங்களை அனுபவித்த திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் அவர்கள்,1118ம் ஆண்டு சனவரி 21ந்தேதி மரணமடைய, அடுத்து திருத்தந்தையானார் திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் (Gelasius).     

   பேரரசர் நான்காம் ஹென்றி மற்றும் அதற்குப்பின் வந்த அவர் மகன் ஐந்தாம் ஹென்றி ஆகியோரின் கைகளில் பெரும் துன்பங்களை அனுபவித்த திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் அவர்களுக்கு பக்கபலமாகவும், ஆறுதலாகவும் நின்றவர், இத்தாலியின் கயத்தா நகர் துறவி ஜான். இவர் பெனடிக்டன் துறவியாக மொந்தெ கசினோ துறவு இல்லத்தில் இருந்தார். திருப்பீடத்தின் உயர் அதிகாரியாகவும் இருந்தார். திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் இறந்து, அடுத்த பாப்பிறையைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளை கர்தினால்கள் மேற்கொண்டபோது, பேரரசர் 5ம் ஹென்றி, உரோமையப் பிரபுக்கள் சிலரோடு சேர்ந்துகொண்டு, தனக்கு நம்பிக்கையான ஒருவரை தலைமைப்பீடத்தில் அமர்த்த முயன்றார். ஆன்மீகத்திற்குள் அரசியலை விரும்பாத கர்தினால்களோ, Palatine என்ற இடத்தின் பெனடிக்டன் துறவு இல்லத்தில் இரகசியமாகக் கூடினர். மொந்தெ கசினோ துறவு இல்லத்திற்கு ஆள் அனுப்பி, துறவி ஜான் அவர்களை வருமாறு கட்டளையிட்டனர். கர்தினால்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட துறவி ஜான், திருத்தந்தை பொறுப்பை ஏற்கமாட்டேன் என மறுத்தார். கடந்த சில தேர்தல்களில் நடந்ததுபோலவே இவரின் விருப்பத்திற்குச் செவிமடுக்காமல், ஒருமித்த குரலில் இவரை திருத்தந்தையாக அறிவித்தனர், அங்கு இரகசியமாகக் கூடியிருந்த கர்தினால்கள்.

 கயெத்தாவின் பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து  மொந்தெ கசினோ துறவு இல்லத்தில்  புகுந்து திருத்தந்தையின் ஆலோசகராகவும், திருப்பீட உயர் அதிகாரியாகவும் பதவி வகித்து, தற்போது திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திருத்தந்தை இரண்டாம்  ஜெலாசியுஸ், தன் ஓராண்டு பொறுப்புக் காலத்தின்போது எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. தன்னை ஆலோசிக்காமலேயே கர்தினால்கள் இரகசியமாக ஒரு திருத்தந்தையைத் தேர்ந்துகொண்டார்கள் என்பதை கேள்வியுற்ற பேரரசரின் ஆதரவுக் குழுக்கள் கோபம் கொண்டனர். Cenzio Frangipani என்பவரின் தலைமையின் கீழ் சென்று, துறவுமடக் கதவுகளை உடைத்து உள்சென்று, புதிய திருத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த துறவி ஜான் அவர்களைத் தாக்கினர். அவர் எப்படியெல்லாம் தாக்கப்பட்டார் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் விவரித்துள்ளதை வாசிக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தையின் அறைக்குள் நுழைந்த Frangipani, முதலில் அவரின்  கழுத்தில் கைவைத்து இழுத்து கீழே தள்ளினார். அவரை காலால் மிதித்து, தலை முடியைப் பிடித்து தர தரவென இழுத்து, அருகிலிருந்த சிறு கோட்டைக்குள் கொண்டு சென்று ஓர் இருட்டறையில் வீசினார். பலியிடக் கொண்டு செல்லப்படும் ஆட்டினைப்போல் தன் துன்பங்களை ஏற்று, எவ்வித எதிர்ப்பும் இன்றி அமைதியாய் இருந்தார் துறவியான, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான். ஆனால், இதையெல்லாம் கேள்வியுற்ற உரோம் மக்கள் வெகுண்டெழுந்தனர். புதிய திருத்தந்தை சிறைவைக்கப்பட்டிருந்த, இருள் நிறைந்த குகையைச் சூழ்ந்துகொண்டு, அவரை உடனே விடுவிக்கும்படி கோரினர். கொலைவெறி கொண்ட கூட்டத்தைப் பார்த்ததும் பயந்துவிட்டார் Frangipani. திருத்தந்தைக்கு ஆதரவாக இவ்வளவு பெரிய கூட்டம் கோபவெறியுடன் வருவார்கள் என அவர் கனவிலும் எண்ணவில்லை. புதிய திருத்தந்தையை உடனே விடுவித்தது மட்டுமல்ல, அவர் கால்களில் விழுந்து மன்னிப்பை வேண்டினார். திருத்தந்தையும் எதுவும் நடவாததுபோல், உடனே அவருக்கு, மன்னிப்பை வழங்கினார். மக்கள் ஆரவாரத்தோடு அப்புதிய திருத்தந்தையை, பெரும் ஊர்வலமாக புனித ஜான் இலாத்ரன் பசிலிக்காவை நோக்கி அழைத்துச் சென்று திருத்தந்தையாக முடிச்சூட்டினர். அவரும் திருத்தந்தை இரண்டாம் Gelasius என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.

  ஆனால், இந்த வெற்றியும், அமைதியும் அதிக காலம் நீடிக்கவில்லை. தன்னிடம் ஆலோசிக்காமலேயே திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதில் கோபமுற்றிருந்த பேரரசர் ஐந்தாம் ஹென்றி, மக்கள் இவ்வளவு ஆரவாரத்துடன் திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்களை திருத்தந்தையாக முடிசூட்டியதைக் கேள்வியுற்றதும், தன் படைகளை இத்தாலியின் லொம்பார்தி பகுதியில் விட்டுவிட்டு, உரோம் நகர் வந்தார். பேரரசர் வருவதைக் கேள்வியுற்றதும், அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் திருத்தந்தைக்கு எதிராக எழுந்தனர். திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ்,  தன் அதிகாரிகளுடன் உரோம் நகரைவிட்டு தப்பியோட வேண்டியதாகியது. தன் சொந்த இடமான கயெத்தாவுக்கு வந்த திருத்தந்தைக்கு அங்கேயே அருள்பணியாளர் திருநிலைப்பாடும், ஆயர் திருநிலைப்பாடும் வழங்கப்பட்டன. இதுவரை திருத்தொண்டராக இருந்த திருத்தந்தை, கயெத்தாவில்தான் உரோமை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள். கூறுகின்றனர்

  திருத்தந்தை தப்பியோடிவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட ஐந்தாம் ஹென்றி, கயெத்தாவுக்கு ஆள் அனுப்பி அவரை உரோம் நகருக்கு அழைத்தார். அதாவது, குழந்தையைக் கிள்ளிவிட்டு தொடடிலையும் ஆட்டும் நாடகம் ஆடினார். திருஅவைக்குள் தன் அதிகாரங்கள் குறித்து விவாதிக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். பேரரசரின் கபட எண்ணத்தைப் புரிந்துகொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்கள், உரோம் நகர் வர மறுத்தார். பேரரசரும் இதுதான் சரியான தருணம் என எண்ணி, தனக்குக் கீழ்ப்படிபவரான போர்த்துக்கல்லின் Braga பேராயர் Maurice Burdinus என்பவரை திருத்தந்தையாக நியமித்தார். அவரும் எட்டாம் கிறகரி என்ற பெயரை எடுத்துக்கொண்டு, திருத்தந்தை என தன்னை அறிவித்தார். உண்மையான திருத்தந்தை ஜெலாசியுஸ் அவர்களோ, பேரரசரையும் எதிர்திருத்தந்தையான Burdinusஐயும் திருஅவையிலிருந்து விலக்கி வைத்தார்.

பேரரசர் ஐந்தாம் ஹென்றி உரோம் நகரிலிருந்து வெளியேறியபின், அங்கு திரும்பி வந்தார், திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ். ஆனால், எதிர்திருத்தந்தையின் பலம் அதிகமாக இருந்ததால் உண்மைதிருத்தந்தையால் எதுவும் செய்ய இயலவில்லை. இதற்கிடையில், பேரரசரின் ஆதரவாளரான Frangipaniயின் ஆட்களால் திருத்தந்தை தாக்கப்பட்டு, தப்பியோட வேண்டியதாகியது. பிரான்சில் அடைக்கலம் புகுந்த திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்கள், 1119ம் ஆண்டு, சனவரி 29ந் தேதி குளூனி துறவுமடத்தில் காலமானார். திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு ஐந்து நாட்களே வாழ்ந்த இத்திருத்தந்தை அனுபவித்த கொடுமைகள், அதிலும் குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பெற்ற உடல்காயங்கள் எண்ணற்றவை. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெரிய துன்பங்களை அனுபவித்த ஒரே திருத்தந்தை இவராகத்தான் இருக்கும் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

வரும் வாரத்தில் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்துஸ் (Callistus) குறித்துக் காண்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 13:37