தேடுதல்

Vatican News
திருக்குடும்பம் திருக்குடும்பம் 

நேர்காணல்: புனித யோசேப்பு ஆண்டு நிறைவு

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வெளியிட்ட, Quemadmodum Deus என்ற ஆணையின் வழியாக, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு இதயங்களே, திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வெளியிட்ட, கடவுளின் அதே வழியில் எனப் பொருள்படும், Quemadmodum Deus என்ற ஆணையின் வழியாக, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். அந்த அறிவிப்பின் 150ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி,  “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டு, புனித யோசேப்பு யூபிலி ஆண்டையும் அறிவித்தார். 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வரை இந்த ஆண்டு சிறப்பிக்கப்படுகிறது.  

இந்த யோசேப்பு யூபிலி ஆண்டு நிறைவடையவிருக்கும் இவ்வேளையில், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி சகாய ராஜ் அவர்கள், இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் முறை குறித்துப் பேசுகிறார்.

புனித யோசேப்பு ஆண்டு நிறைவு - அருள்பணி சகாயராஜ் ம ஊ ச

அருள்பணி சகாயராஜ் ம.ஊ.ச.

புனித யோசேப்பு ஆண்டின் நிறைவு

வத்திக்கான் வானொலியின் நேயர்களே,

பரந்து விரிந்த வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த பறவை, திடீரென சிறகொடிந்து வீழ்ந்தது போல, சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்த இவ்வுலகை கொரோனா பெருந்தொற்று முடிக்கிப்போட்டது. எங்கும் வேகம், எதிலும் வேகம் என்று போட்டிபோட்டு கொண்டு ஓடி உலகம், ஒரே நொடியில் நின்றுபோனது. அனைவரும் அவரவர் வீடுகளில் முடங்கியிருந்த நேரத்தில், வாராது வந்த மழைபோல, நம் தனிமையில் நம் உடன் பயணிக்க, தளர்ந்து போன உள்ளத்தில் நம்பிக்கை விதைகளை விதைக்க, திருத்தந்தை அவர்களால் நமக்கு அளிக்கப்பட்ட அற்புதமான ஆண்டு புனித யோசேப்பு ஆண்டாகும்.

 • கனவிலும் நினைவிலும் கடவுளின் கட்டளை
 • கருத்துடன் கேட்ட காவலரே!
 • கருத்தாய் கட்டளை காத்திட எமக்கும்
 • கருணை காட்டிடும் மாமுனியே!
 • தூய்மை நேர்மை வாய்மை அனைத்தும்
 • கைக்கொண்டு வாழ்ந்த காவலரே!
 • வஞ்சம் நீக்கி நெஞ்சினில் தூய்மை
 • துலங்கிடச் செய்யும் தூயவரே!
 • வளர்க்கும் வளனாரு. நீவீர்! வாழிய வாழியவே

உலகில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனின் பிரசன்னம் இருக்கிறது என்பதை நம் வாழ்வின் பல்வேறு நேரங்களில் நாம் உணர்ந்து அனுபவித்துள்ளோம். புனித யோசேப்பு ஆண்டு திருத்தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டதன் காரணத்தை நாம் அறிவோம். கி.பி. 1870ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள், திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களின் ஆணையின்படி, புனித யோசேப்பு அகில உலக திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார்.

இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவராகவும், தூய கன்னிமரியாவின் கணவராகவும், இறைமகன் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகவும் யோசேப்பு இருந்தபோதிலும், அவர் மறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். தன் குடும்பத்தைப் பேணுவதிலும், இயேசுவுக்கும் மரியாவுக்கும் உறுதுணையாக இருப்பதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தினார். இறைத்திட்டமானது கனவின் வழியாக வளனாருக்கு வெளிப்படுத்தபட்டது, அவருக்கு அருளப்பட்ட வெளிப்பாடுகளை நம்பி, அவற்றிகெல்லாம் கீழ்ப்படிந்து நடந்த வளனார், வரலாற்றின் ஓட்டத்திலும், திருஅவையின் வாழ்விலும் மறைந்தே காணப்பட்டார். கி.பி. 1870ல் அகில உலக திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டபின் திருத்தந்தையர்களின் பார்வை புனித யோசேப்பின் மீது அதிகம் பதிந்தது எனக்கூறலாம்.

கி.பி. 1955ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திருத்தந்தை 12ஆம் பயஸ் புனித யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலரென அறிவித்தார்.

கி.பி. 1961ஆம் ஆண்டு திருத்தந்தை 23ஆம் யோவான், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை புனித யோசேப்பின் பராமரிப்பில் ஒப்படைத்தார்.

கி.பி. 1989ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், 'மீட்பரின் பாதுகாவலர்" என்ற திருத்தூது அறிவுரை மடல் வாயிலாக புனித வளனாரின் வாழ்வில் விளங்கிய பல்வேறு பண்புகளை விளக்கியுள்ளார்.

இவ்வாறாக, திருஅவையின் வாழ்விலும், விசுவாசிகளின் ஆன்மீக வாழ்விலும் இரண்டறக் கலந்த புனித வளனார், திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்ட 150ஆண்டின் நினைவை போற்றும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், 'தந்தையின் இதயத்தோடு" என்ற திருத்தூது மடல் வாயிலாக, புனித வளனாரை கொண்டாட, தியானிக்க, அவரின் வாழ்வை போல நம் வாழ்வையும் இறைவனுக்கு உகந்ததாக மாற்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் அழைப்பு விடுத்தார். தற்போது, புனித வளனார் ஆண்டை நிறைவு செய்து கொண்டிருக்கும் நாம், இந்த ஆண்டிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

நாம் நடந்து வந்த பாதைகளைத் திரும்பி பார்க்கிறபோது, புனித வளனாரின் வாழ்வைப்போல, கடந்த ஆண்டின் பெரும்பால நாட்கள் மறைந்த வாழ்வு நடந்த உணர்வுதான் நம்மில் மேலோங்கியிருக்கிறது. புனித யோசேப்பை போன்று நமக்கு அருளப்பட்ட கனவுகளை, அவை சுட்டிக்காட்டிய செய்திகளை நாம் நம்பினோமா? என்று நம்மையே நாம் கேள்வி கேட்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பொதுமுடக்கம், தளர்வுகளுடன்கூடிய பொது முடக்கம், பெருந்தொற்றுக்கால நடைமுறைகள், பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் என நம்மையே நாம் தனிமைபடுத்திக்கொண்ட பொழுது,  நமக்குள் நம்பிக்கை கீற்றுகள் தோன்றுவதற்கு பதிலாக அவநம்பிக்கையே அதிகமானது. இச்சூழலில் புனித யோசேப்பின் இடைவிடாத பிரசன்னத்தை சுட்டிக் காட்டும் இவ்வாண்டு ஆறுதல் தருவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது.

புனித யோசேப்பு ஆண்டு எவ்வாறு சிறப்பிக்கப்பட்டது?

புனித யோசேப்பு ஆண்டின் செயல்பாடுகளாக நாம் செய்தவற்றை பின்வரும் முறைகளில் வகைப்படுத்தலாம்.

1. ஆன்மீக முயற்சிகள்

திருத்தந்தையின் அழைப்பின் பேரில் புனித வளனாரைப் பற்றி தியானிக்க பல்வேறு தியானங்களும், குறிப்பாக பங்குத் திருவிழா நவநாட்களில் புனித யோசேப்பை பற்றிய மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

'தந்தையின் இதயத்தோடு" என்ற திருத்தூது மடலின் இறுதியில் உள்ள புனித யோசேப்பை நோக்கிய செபமானது, அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாள் திருப்பலியின் இறுதியிலும் செபிக்கப்பட்டு வருகிறது.

2. பிறரன்புச் சேவைகள்

புனித வளனாரை அகில உலகத் திருஅவையானது 'நல்மரணத்தின் பாதுகாவலர்" என அழைத்து, நன்மரணடைய புனித வளனாரை நோக்கிச் செபிக்க அழைப்பு விடுக்கிறது. இந்த, புனித வளனார் ஆண்டு கொரோனா காலத்தில் அமைந்ததால், மரண வேளையில் இருந்த பலருக்காக செபித்தும், பெருந்தொற்றினால் இறந்தோரை அடக்கம் செய்தும் பல பக்த சபைகள் பிறர் அன்பு சேவைகளை செய்தனர்.

3. புனித வளனார் குறித்த பாடல்கள்

இதுவரை பாரம்பரியமான பாடல்கள் மட்டுமே வழிபாடுகளில் பாடப்பட்டு வந்தன. புனித வளனார் ஆண்டில் அதிக அளவிலான புதுப்பாடல்கள் புனித வளனார் மீது இயற்றப்பட்டு. இசையுடன் திருவழிபாடுகளில் பாடப்படுகின்றன. இப்பாடல்கள், புனித வளனார் குறித்த விவிலிய, பாரம்பரிய செய்திகளை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டிருப்பதால், இப்பாடல்கள் எளிய வகையில் புனித வளனாரின் வாழ்க்கை குறித்தும், அவருடைய மேன்மையையும் மக்களிடம் எளிதாக எடுத்துச்செல்கின்றன.

4. இலக்கிய படைப்புகள்

புனித வளனார் ஆண்டை முன்னிட்டு பல்வேறு புத்தகங்களும், தொகுப்புகளும் வெளியாயின. எடுத்துக்காட்டாக, அருட்பணி. ஜெரி எழுதிய நேசமிகு யோசேப்பு, புனித வளனாரின் பக்தியை வளர்க்கும் விதமாக செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொதுப்பதில் குரு அருட்பணி. பாக்கியரெஜிஸ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள 'வளர்க்கும் வளனார்" என்ற தொகுப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தொகுப்பில் திருத்தந்தையர்களின் மடல்கள், நவநாள், பாரம்பரியச் செபங்கள், புதுமைகள், பக்தி முயற்சிகள், சிந்தனைகள், வணக்கமாதம், புதன்கிழமை பக்தி, திருப்பலி, திருப்புகழ்மாலை, பாடல்கள், கீர்த்தனைகள், தேம்பாவணி பாடல்கள், உறங்கும் நிலையில் இறைத்திருஉளம் காணும் புனித யோசேப்பு, மற்றும் சிலுவைபாதை ஆகியவை உள்ளன.

இத்தொகுப்பானது கிடைத்தற்கரிய ஒரு களஞ்சியம் ஆகும். பராம்பரிய செபங்கள் பகுதியில், புனித வளனாரை நோக்கி முதல் நூற்றாண்டிலேயே செபிக்கப்பட்ட செபம், எவ்வாறு புனித வளனார் தொடக்கத் திருஅவையிலேயே முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அச்செபம் பின்வருமாறு அமைகிறது:

புனித யோசேப்பு
புனித யோசேப்பு
 • ஓ! புனித யோசேப்பே
 • நான் உம்மைப் பற்றி சிந்திக்க ஒருபோதும் சோர்வடைவதில்லை. இயேசு உங்கள் கரங்களில் உறங்குகிறார். அவர் உங்கள் இதயத்திற்கு அருகில் இருக்கும்போது நாம் உம்மை அணுகத் துணிவதில்லை.
 • என்பெயரால் அவரை நெருக்கமாக அழுத்தி, இயேசுவின் நேர்த்தியான நெற்றியில் எனக்காக முத்தமிட்டு, நான் இறக்கும் தருவாயை நெருங்கும்போது அந்த முத்தத்தை எனக்கு திருப்பிதர அவரிடம் கேளுங்கள்.
 • என் மரண வேளையில் உடனிருக்கும் புனித யோசேப்பே!
 • எனக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.
 • தமிழ் இலக்கியங்களில் ஒப்புயர்வற்ற நூல் தேம்பாவணி ஆகும். புனித வளனார் பாட்டுடை தலைவனாக வைத்து, வீரமாமுனிவரால் இந்நூல் 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. புனித வளனார் ஆண்டில் இந்நூலைப் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன.

வத்திகான் வானொலியின் பங்கு

வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு ஞாயிறு ஒலிபரப்பிலும் புனித வளனாரின் ஆலயங்கள் பற்றி ஒலிபரப்பினார்கள். இத்தொடரானது புனித வளனாருக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயங்கள் பற்றி அறிந்து கொள்ள உதவியாயிருந்தது. பல வரலாற்று குறிப்புக்கள் ஆச்சரியம் தருவதாகவும் அமைந்திருந்தன. அவற்றில் ஒன்று மீரட் நகரில் உள்ள மறைமாவட்ட பேராலயம் ஆகும். புனித வளனாருக்கு நேர்ந்தளிக்கப்பட்ட இப்பேராலயமானது இஸ்லாம் சமயத்திலிருந்து மனமாறிய பேகம் ஸ்ம்ரூவால் கி.பி 1834ல் கட்டப்பட்டதாகும்.

இங்ஙனம், நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் புனித வளனார் வளனார் ஆண்டு நம்மை இறைவனில் ஐக்கியப்படவும், குறிப்பாக, பெருந்தொற்றினால் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் நமக்கு, அமைதியில் இறைவனின் திருவுளத்தை அறிந்து நடக்கவும் உதவியாக இருக்கிறது.

புனித வளனார் அமர்ந்திருக்க, உறங்கும் குழந்தை இயேசுவை மார்போடு அணைத்தவராக அன்னை மரியாள் அவரின் மடியில் உறங்கும் ஒரு திருஉருவத்தைக் கண்டேன். ஓய்வெடுக்கும் நிலையிலும் தன் குடும்பத்தையும், தன் திருமகனின் குடும்பமாகிய திருஅவையையும் கண்ணயராது காக்கும் புனித வளன் முனியை எங்ஙனம் போற்றுவது.

புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவது போல, " கடவுள் நம்முடைய தேவைகளில் பரிந்துபேசி வரங்களை இறைவனிடமிருந்து பெற்று தரும் ஆற்றலை பல புனிதர்களுக்கு அருளியுள்ளார். அவர்களில் புனித வளனாருக்கு அளித்திருக்கும் வரமோ அளவில்லாதது. எனவே, அவரின் பரிந்துரைகளை நாடுவோர் உறுதியாக வேண்டி விரும்பி கேட்கும் வரங்களை பெறுகின்றனர்."

அமைதியின் உருவாய், உறக்கத்திலும் இறைவனின் திருவுளத்தை அறிந்தவராய், எப்போதும் எங்களை காக்கும் புனித வளனாரே உம்மில் எப்போதும் நாங்கள் தஞ்சமடைந்து வாழும் வரத்தை உம் திருமகனிடமிருந்து பெற்று தாரும்!

(அருள்பணி சகாயராஜ் ம.ஊ.ச.

பெருமாளேரி, தமிழ்நாடு)

25 November 2021, 14:41