தேடுதல்

விவசாய சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள் விவசாய சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்  

விவசாயச் சட்டங்களை இந்திய அரசு நீக்கியதற்கு ஆயர்கள் மகிழ்ச்சி

இந்திய அரசு பிடிவாதமாக இல்லாமல், விவசாயிகளின் ஆலோசனைகளைக் கேட்டபின், விவசாயச் சட்டங்களை நிறைவேற்றியிருந்தால், இத்தனை குழப்பங்களும், இழப்புகளும் ஏற்பட்டிருக்காது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய வரலாற்றில் மிக நீண்டகாலமாக இடம்பெற்ற பொதுமக்கள் போராட்டத்திற்கும், 700 விவசாயிகளின் மரணத்திற்கும் காரணமான 3 விவசாயச் சட்டங்களை நீக்கவுள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்திருப்பது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள்.

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த அவசரச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு பிஜேபி அரசு எடுத்த முடிவு, விவசாயிகளின் நலனுக்கும், நாட்டின் நலனுக்கும் உகந்த ஒன்று என்றுரைத்த இந்திய ஆயர் பேரவையின் தொழிலாளர் நல அவையின் தலைவர், ஆயர் Alex Vadakumthala அவர்கள், விவசாயிகளின் போராட்டங்களின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.

விவசாயச் சட்டங்களைப் பொருத்தவரையில், இந்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இல்லாமல், விவசாயிகள் நலன் கருதி அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டபின் இந்த சட்டங்களை நிறைவேற்றியிருந்தால், இத்தனை குழப்பங்களும், இழப்புகளும் ஏற்பட்டிருக்காது என்றார், ஆயர் Vadakumthala.

விவசாயச் சட்டங்கள் குறித்து முழுமையாக ஆராயாமல் முடிவெடுத்ததே இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என அரசை குற்றஞ்சாட்டிய இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்ற அவையின் தலைவர், ஆயர் Gerald Almeida அவர்கள், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கவே இப்புதிய சட்டங்கள் என அரசு அறிவித்த நிலையில், விவசாயிகள் கண்டதெல்லாம், உரம், மற்றும் விவசாயப் பொருட்களின் விலை ஏற்றமே என மேலும் எடுத்துரைத்தார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளதை மனதில்கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் Almeida.

இந்தத் தேர்தல்களில் வெற்றிபெற்றால் மட்டுமே, மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மையுள்ள எண்ணிக்கையைப் பெறமுடியும் என்பதும், தற்போது 97 எம்.பி-க்கள் மட்டுமே மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கென உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

22 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக்கொண்டு, பிஜேபியின் கோட்டையாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி, இப்போது இருப்பதில், நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளை அது இழக்கும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டம் காரணமாக, பஞ்சாபில் பொதுக்கூட்டங்களை நடத்தமுடியாமல் பிஜே.பி. கட்சி திணறிவருகிறது.

தற்போது பிரதமர் மோடி நீக்க உள்ளதாக அறிவித்த மூன்று விவசாயச் சட்டங்களும், நவம்பர் 29ம் தேதி துவங்க உள்ள பாராளுமன்ற குளிர்காலத் தொடரின்போது அதிகாரப்பூர்வமாகத் திருப்பிப் பெறப்படும். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 14:51