தேடுதல்

இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich - கோப்புப் படம் இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich - கோப்புப் படம் 

ஐரோப்பிய கண்டத்தை ஒன்றிணைப்பதில் இளையோரின் பங்கு

ஐரோப்பாவின் வருங்காலம் குறித்த கலந்துரையாடல்களில், திருஅவை இணைத்துக்கொள்ளப்படாதது குறித்து ஆயர்கள் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவின் வருங்காலம், மற்றும் ஐரோப்பிய கண்டத்தை ஒன்றிணைப்பதில் இளையோரின் பங்கு என்பது குறித்து, கடந்தவாரம் இரண்டு நாள் கூட்டமொன்றை நடத்திய ஐரோப்பிய ஆயர் பேரவை, ஐரோப்பிய கண்டம் ஆன்மாவுடன் செயல்படவேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளது.

கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்குப்பின், முதன்முறையாக நேரடியாக கூடியுள்ள ஐரோப்பிய ஆயர்கள், தங்கள் இலையுதிர்கால கூட்டத்தையொட்டி, Brussels நகரில் சந்தித்து விவாதித்தபோது, ஆன்மாவுடன் கூடிய ஐரோப்பாவாலேயே, சவால்களை எதிர்கொள்ளும் ஊக்கத்தைப் பெறமுடியும் என அறிவித்தனர்.

ஐரோப்பா எதிர்நோக்கிவரும் சவால்கள் மற்றும் அதன் முதன்மை நோக்கங்கள் குறித்து விவாதிக்க இளையோருக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து கத்தோலிக்க திருஅவையின் ஆதரவை வெளியிட்ட ஆயர்கள், தலத்திருஅவை அளவிலும், தேசிய அளவிலும், ஐரோப்பிய அளவிலும் திருஅவையும், இளையோரும், மேலும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று இன்று சமுதாயத்திற்கு முன்வைத்துள்ள சவால்கள் குறித்து ஐரோப்பிய மக்கள் பிரதிகளுடன் விவாதிக்க இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திய ஆயர்கள், ஐரோப்பாவின் வருங்காலம் குறித்த கலந்துரையாடல்களில் திருஅவை இணைத்துக்கொள்ளப்படாதது குறித்து கவலையை வெளியிட்டனர்.

இது குறித்து செய்தி வெளியிட்ட ஐரோப்பிய ஆயர் பேரவைத்தலைவர், இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், ஓர் ஆன்மாவுடன் செயல்பட உதவும் நோக்கத்தில், கருத்துப் பரிமாற்றங்களில் திருஅவையின் கருத்துக்களையும் இணைப்பது, ஐரோப்பியத் தலைவர்களுக்கு, ஓர் உந்து சக்தியைத் தரும் என கூறினார்.

கிளாஸ்கோவில் இடம்பெறும் COP26 கருத்தரங்கில், காலநிலை நெருக்கடிக்குரிய தீர்வுகளைப் பெறுவதில், ஐரோப்பியத் தலைவர்கள், தீவிரமுடன் செயல்படவேண்டும் எனவும், ஐரோப்பிய ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 14:39