தேடுதல்

COP26 உச்சி மாநாட்டையொட்டி இளையோர் அணி COP26 உச்சி மாநாட்டையொட்டி இளையோர் அணி 

சுற்றுச்சூழல் நெருக்கடி, மனித முகத்தைக் கொண்டது

வறியோரின் குரல்களுக்கு செவிமடுக்கும் வேளையில், குரல் எழுப்ப இயலாத பல்லுயிர்களின் குரல்களுக்கும் செவிமடுக்கிறோம் என்பதை COP26 பிரதிநிதிகள் உணர்ந்து செயல்படவேண்டும் - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31ம் தேதி முதல், நவம்பர் 12ம் தேதி முடிய நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு, COP26, இரண்டாவது வாரமாக நடைபெற்றுவருவதையொட்டி, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இம்மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நடைபெற்றுவரும் COP26 உச்சி மாநாடு, கத்தோலிக்கத் திருஅவைக்கு மிக முக்கியமான ஒரு மாநாடு என்பதை வலியுறுத்தி, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர் அவையின் சுற்றுச்சூழல் பணிக்குழுவின் தலைவர் ஆயர் ஜான் ஆர்னால்டு அவர்களும், பன்னாட்டு உறவுகள் பணிக்குழுவின் தலைவர் ஆயர் டெக்லான் லாங் அவர்களும் இணைந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றங்களால் மிக அதிக அளவில் துன்புறுவது வறியோரே என்பதை தங்கள் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர்கள், COP26 மாநாட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மனித சமுதாயத்தில் நீதியை மீண்டும் நிலைநாட்டும் முடிவு என்பதை மாநாட்டின் பிரதிநிதிகள் உணரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

உலகெங்கிலுமிருந்து இந்த மாநாட்டை அடைந்துள்ள மக்களின் குரல்களுக்கு பிரதிநிதிகள் செவிமடுக்கவேண்டும் என்றும், எந்த ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்களும், இந்த முடிவுகளிலிருந்து விலக்கிவைக்கப்படக் கூடாது என்றும்,  சுற்றுச்சூழல் நெருக்கடி, எப்போதும், ஒரு மனித முகத்தைக் கொண்டது என்றும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வறியோரின் குரல்களுக்கு செவிமடுக்கும் வேளையில், குரல் எழுப்ப இயலாத பல்லுயிர்களின் குரல்களுக்கும் செவிமடுக்கிறோம் என்பதை COP26 பிரதிநிதிகள் உணர்ந்து செயல்படவேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிறிஸ்து கொணர்ந்த நற்செய்தி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அனைவருக்கும் பொதுவாக இருப்பதுபோல, கத்தோலிக்கத் திருஅவையும், எல்லைகளைக் கடந்த பணிகளை ஆற்றிவருகிறது என்பதை, இவ்வறிக்கையில் நினைவுறுத்தும் ஆயர்கள், COP26 உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளும், நாடுகள் என்ற எல்லைகளால் குறுகிப்போகாமல் இருப்பதை, கத்தோலிக்கத் திருஅவை முழுமனதுடன் வரவேற்கும் என்று கூறியுள்ளனர். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 13:19