தேடுதல்

புலம்பெயர்ந்தோருக்கு உதவ, உணவுப் பொருள்களைத் திரட்டும் போலந்து மக்கள் புலம்பெயர்ந்தோருக்கு உதவ, உணவுப் பொருள்களைத் திரட்டும் போலந்து மக்கள் 

பிரச்சனைகள் தொடரும் வரை, உதவிகளும் தொடரும் - காரித்தாஸ்

போலந்து-பெலாருஸ் எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து பங்குத்தளங்களின் மக்களும், புலம்பெயர்ந்தோருக்கு கடந்த சில நாள்களாக அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேவையில் இருப்போருக்கு உதவிகள் செய்வதும், ஒவ்வொரு நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும், ஒன்றுக்கொன்று முரணான செயல்கள் அல்ல என்று, போலந்து நாட்டு காரித்தாஸ் அமைப்பின் இயக்குனரான அருள்பணி Marcin Iżycki அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

போலந்து மற்றும் பெலாருஸ் நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள பதட்ட நிலைகளின் நடுவே, பெலாருஸ் நாட்டிலிருந்து போலந்து நாட்டிற்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்துவரும் போலந்து காரித்தாஸ் அமைப்பு, இந்தப் பிரச்சனை தொடரும் வரையில், தாங்கள் செய்யும் உதவிகளும் தொடரும் என்று அறிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்ற, போலந்து ஆயர் பேரவை, நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு காணிக்கை திரட்டப்படும் என்று அறிவித்திருப்பதை முற்றிலும் வரவேற்ற காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Iżycki அவர்கள், நிதிதிரட்டும் இம்முயற்சிக்கு, காரித்தாஸ் அமைப்பினர் முழுவீச்சில் உதவிகள் செய்வர் என்றும் கூறினார்.

போலந்து-பெலாருஸ் எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து பங்குத்தளங்களின் மக்களும், புலம்பெயர்ந்தோருக்கு, கடந்த சில நாள்களாக அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக, காரித்தாஸ் பணிகளில் ஈடுபட்டுள்ள பிரான்சிஸ்கன் அருள்பணி Cordian Szwarc அவர்கள் கூறினார்.

எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Białystok உயர் மறைமாவட்டத்தின் காரித்தாஸ் அமைப்பு, எல்லைப்புற காவல்துறையின் அனுமதியோடு, புலம்பெயர்ந்துள்ள மக்களின் குளிர்கால தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்பணி Jerzy Sęczek அவர்கள் கூறினார்.

அண்மைய நெருக்கடியான சூழல் தீர்ந்தபிறகும் போலந்து நாட்டு காரித்தாஸ் அமைப்பு, புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டில் ஒருங்கிணைக்கத் தேவையான உதவிகளைத் தொடரும் என்று, காரித்தாஸ் இயக்குனர் Marcin Iżycki அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2021, 14:47