தேடுதல்

'ஒரே நாடு, ஒரே சட்டம்' கருத்தியலுக்கு எதிர்ப்பு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' கருத்தியலுக்கு எதிர்ப்பு  

இலங்கை:'ஒரே நாடு, ஒரே சட்டம்' கருத்தியலுக்கு ஆயர்கள் எதிர்ப்பு

புத்தமதத் துறவி ஞானசாரா தேரா அவர்களின் நியமனம், சட்ட அமைப்பாளர்களை ஆலோசிக்காமல் இடம்பெற்றுள்ளது மற்றும், அது, சட்ட அமைப்பாளர்களை அவமதிப்பதாக உள்ளது - ஆயர் பெர்னான்டோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கருத்தியலைப் புகுத்தும் அரசின் திட்டம் கைவிடப்படுவதற்கும், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும், அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இலங்கையில் பெரும்பான்மையாக வாழ்கின்ற புத்த மதத்தினரின் அமோக ஆதரவுடன், 2019ம் ஆண்டு, அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி நடத்திவரும் கோத்தபய இராஜபக்ஷா அவர்கள், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்வண்ணம், 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கருத்தியலை ஆய்வுசெய்து, சட்டவரைவுத் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்குமாறு, கடந்த மாதத்தில், புத்தமதத் துறவி Galagodaaththe Gnanasara Thera அவர்கள் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்தக் குழுவின் ஆய்வறிக்கைகள், மாதம் ஒருமுறையும், அக்குழுவின் இறுதி அறிக்கை 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியன்று அல்லது அத்தேதிக்கு முன்னும், அரசுத்தலைவருக்குச் சமர்ப்பிக்கப்படவேண்டும் என, இலங்கை அரசின் சிறப்பு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நவம்பர் 02, இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்டுள்ள, இலங்கை ஆயர் பேரவையின் தலைவரான, பதுல்லா ஆயர், ஜூலியன் வின்ஸ்டன் செபஸ்தியான் பெர்னான்டோ அவர்கள், இந்தப் பணிக்குழுவின் நியமனம்குறித்த அரசாணை திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தப் பணிக்குழுவில், தமிழர், இந்துக்கள், கத்தோலிக்கர் மற்றும், ஏனைய சிறுபான்மை கிறிஸ்தவக் குழுக்களின் பிரதிநிதிகள் இடம்பெறாமல் இருப்பதுபற்றி குறைகூறியுள்ள ஆயர் பெர்னான்டோ அவர்கள், அப்பணிக்குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரின் கடந்தகால நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டிருப்பது, பெரிய அவமானமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிர மதப்பற்றுடைய துறவி ஞானசாரா தேரா அவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் என்று அறியப்படுபவர், மற்றும், அவரது போது பாலா சேனை (BBS) என்ற அமைப்பு, 2013ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தமதத் துறவி ஞானசாரா தேரா அவர்களின் நியமனம், சட்ட அமைப்பாளர்களை ஆலோசிக்காமல் இடம்பெற்றுள்ளது மற்றும், அது சட்ட அமைப்பாளர்களை அவமதிப்பதாக உள்ளது எனவும் கூறியுள்ள ஆயர் பெர்னான்டோ அவர்கள், சட்டத்திற்குமுன் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் முறையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என, மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2021, 14:32