விவிலியத்தேடல்: திருப்பாடல் 19 – ஆண்டவரின் திருச்சட்டம் 1
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் 'இருளர்' என்ற பழங்குடியினத்தவருக்கு எதிராக, பல நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளில் ஒன்று, 1993ம் ஆண்டு, நீதி மன்றத்தில், ஒரு வழக்காகப் பதிவானது. அந்த வழக்கை, பதிவுசெய்து, நடத்திய வழக்கறிஞர் சந்துரு அவர்கள், பின்னர் நீதியரசராகவும் பணியாற்றி, தற்போது ஒய்வு பெற்றுள்ளார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன், இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு மற்றும் செங்கேணி என்ற தம்பதியருக்கு நிகழ்ந்த அந்தக் கொடுமைக்கு எதிராக, வழக்கறிஞர் சந்துரு அவர்கள், நீதிமன்றத்தில் வழக்காடி வென்ற நிகழ்வு, தற்போது, 'ஜெய் பீம்' என்ற ஒரு திரைப்படம் வழியே, மக்களைச் சென்றடைந்துள்ளது. இந்திய மக்களுக்கு, குறிப்பாக, பழங்குடியின மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள பெரும்பாலான சட்டங்கள், ஏட்டளவில் மட்டுமே, சட்ட நூல்களில் பதிவாகியிருப்பதையும், நடைமுறையில், அவை, வெளிச்சத்தைக் காணமுடியாமல், இருளில் புதைத்திருப்பதையும், இந்தத் திரைப்படம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஒளியை மையப்படுத்திக் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி வெளிவந்த இத்திரைப்படம், மக்கள் நடுவே, சட்டங்களைப் பற்றிய தெளிவுகளை உருவாக்கிவருகிறது. இத்தருணத்தில், மக்களால், மக்களுக்கென உருவாக்கப்படும் சட்டங்கள், அவையனைத்திற்கும் மேலாக, இறைவனால் வழங்கப்பட்டுள்ள சட்டங்கள் என்ற கருத்துக்களை, இன்றைய விவிலியத்தேடலில் சிந்திக்க முயல்வோம்.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும், சட்டங்கள் எவ்வளவுதூரம் மதிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்கென, 2006ம் ஆண்டு, World Justice Project (WJP), அதாவது, 'உலக நீதித் திட்டம்' என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. எந்த ஓர் அரசையும் சாராமல், சுதந்திரமாக, தனிப்பட்ட முறையில், நடுநிலையோடு இயங்கிவரும் WJP ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், 'Rule of Law Index', அதாவது, 'சட்டத்தின் ஆளுமை குறியீடு' என்ற பெயரில், அறிக்கையொன்றை வெளியிட்டு வருகிறது.
நீதித்துறையில் பணியாற்றும் 4,200க்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியுடன், இவ்வாண்டு, அக்டோபர் 14ம் தேதி இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 139 நாடுகளில் சட்டங்கள் எவ்வாறு ஆட்சி செலுத்துகின்றன என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் அதிகாரங்கள், ஊழல் அற்ற நிலை, ஒளிவுமறைவற்ற ஆட்சி, அடிப்படை உரிமைகள், சட்டமும் ஒழுங்கும், குடியுரிமை நீதி (Civil justice) மற்றும் குற்றவியல் நீதி (Criminal justice), என்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளைக்கொண்டு, 139 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
WJP நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள், சென்ற ஆண்டும், இவ்வாண்டும் முதல் நான்கு இடங்களைப் பெற்றுள்ளன. இந்தத் தரவரிசையில், வெனிசுவேலா நாடு, கடந்த ஈராண்டுகளாக இறுதி இடமான 139வது இடத்தைப் பெற்றுள்ளது. 2020ம் ஆண்டு, 122வது இடத்தைப் பெற்றிருந்த மியான்மார் நாடு, இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டதன் பின்னர், 6 நிலைகள் தாழ்ந்து, இவ்வாண்டு 128வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 133வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான், இவ்வாண்டு, 134வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், சென்ற ஆண்டு, 73வது இடத்தை வகித்த இலங்கை, இவ்வாண்டு 76வது இடத்திற்கும், சென்ற ஆண்டு, 76வது இடத்தை வகித்த இந்தியா, இவ்வாண்டு 79வது இடத்திற்கும் தரம் தாழ்ந்துள்ளன.
ஏட்டளவில் சட்டங்கள் வகுப்பதில் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ள இந்தியா, சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், 79வது இடத்தைப் பெற்றுள்ளது. ஆம். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் உருவாக்கப்பட்டுள்ள Constitution எனப்படும், அரசியலமைப்பு சட்டங்கள் என்ற அறிக்கையை ஒப்பிட்டுப்பார்க்குமபோது, இந்தியாவின் அரசியலமைப்பு, 1,46,385 சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மிக நீளமான அரசியலமைப்பு என்பதில், முதலிடம் பெற்றுள்ளது. இந்தப் பெருமையை, ஏட்டளவில் பெற்றுள்ள இந்தியா, சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், ஆண்டுக்கு ஆண்டு தாழ்வடைந்து, தற்போது, 79வது இடத்தில் இருப்பது, வேதனை தருகிறது.
இது, இந்தியாவின் நிலை மட்டுமல்ல. பொதுவாகவே, உலகின் பல நாடுகளில், சட்டங்கள், தெளிவாக வகுக்கப்பட்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக, அவற்றைப் பின்பற்றுவதில், பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று, WJP நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும், சட்டங்கள், மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை, வெறும் ஏட்டளவு சொற்களாக மட்டும் சிறைப்பட்டிருக்கின்றன என்பதும், நடைமுறையில், அவை, பெருமளவு பின்பற்றப்படுவதில்லை என்பதும், இன்றைய உலகில் நாம் தெளிவாக உணர்ந்துவரும் வேதனை. கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியினால் விதிக்கப்பட்ட முழு அடைப்பை பயன்படுத்தி, உலகின் ஒரு சில நாடுகளில், அரசியலமைப்பில், திருத்தங்களும், மாற்றங்களும் உருவாக்கப்பட்டன. இந்தியாவில், பாராளுமன்றத்தில், தகுந்த விவாதங்கள் ஏதுமின்றி, குடியுரிமை, விவசாயம், கல்வி ஆகிய விடயங்களில், பல முக்கியமான மாற்றங்கள், நம் அரசியலமைப்பில் திணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு சூழலில், 'ஆண்டவரின் திருச்சட்டம்' என்ற தலைப்பில் பதிவாகியுள்ள, 19வது திருப்பாடலில், நாம் தேடலை மேற்கொள்கிறோம்.
WJP நிறுவனம், இவ்வாண்டு வெளியிட்டுள்ள 'சட்டத்தின் ஆளுமை குறியீடு' அறிக்கையின் அறிமுகப்பக்கத்தில், மனிதவரலாற்றில், முதன்முதலாக எழுத்துவடிவில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் பாபிலோனிய சட்டத்தின் ஒரு சில சொற்கள் பதிவாகியுள்ளன. பாபிலோனிய அரசர், ஹம்முராபி அவர்களால் உருவாக்கப்பட்ட இச்சட்டத்திலிருந்து, WJP அறிக்கையில் ஒரு மேற்கோளாகப் பதிவாகியுள்ள முக்கியமான சொற்கள் இவை: "வலிமையானோர், வலுவற்றோரை காயப்படுத்தாமல் இருக்க, கைம்பெண்களையும், அனாதைகளையும் பாதுகாக்க, நீதியை இந்நாட்டில் அறிக்கையிட, அனைத்து சச்சரவுகளையும் தீர்க்க, அனைத்து காயங்களையும் குணமாக்க, ஞானம் மிகுந்த மன்னர் ஹம்முராபி அவர்கள் உருவாக்கிய நீதியின் சட்டங்கள்"
மனித வரலாற்றில் எழுத்துவடிவில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான ஹம்முராபி சட்டங்களுக்கு அடுத்தபடியாக, பத்துக்கட்டளைகள், மிகப் பழமைவாய்ந்த சட்டங்கள் என்று சொல்லப்படுகின்றன. ஹம்முராபி சட்டங்களுக்கும், பத்துக்கட்டளைகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை, வேற்றுமைகள், பல்வேறு விவிலிய ஆய்வாளர்களால் விளக்கப்பட்டுள்ளன.
ஆண்டவர், மோசேக்கு பத்துக்கட்டளைகளை வழங்கிய நிகழ்வு, பழைய ஏற்பாட்டில், இருமுறை பதிவாகியுள்ளது. ஆண்டவர், சீனாய் மலையில், மோசேயைச் சந்தித்து, அவரிடம் பத்துக்கட்டளைகளைத் தந்த நிகழ்வு, விடுதலைப்பயண நூல், 19 மற்றும் 20 ஆகிய இரு பிரிவுகளில் பதிவாகியுள்ளது. அந்த நிகழ்வை, மோசே மீண்டும் மக்களிடம் எடுத்துச் சொல்லும்போது, ஆண்டவர் ஓரேபு மலையில் பத்துக் கட்டளைகளைத் தந்தார் என்று கூறி, அனைத்து விவரங்களையும் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு நினைவுறுத்தினார். இது, இணைச்சட்ட நூல் 5ம் பிரிவில் பதிவாகியுள்ளது. இப்பிரிவைத் தொடர்ந்து, இணைச்சட்ட நூல், 6ம் பிரிவில், இஸ்ரயேல் மக்கள், ஆண்டவரின் கட்டளைகளை தங்கள் வாழ்வில் எவ்வாறு கடைபிடிக்கவேண்டும் என்பதை, மோசே மிகத்தெளிவாகக் கூறியுள்ளார்:
இணைச்சட்டம் 6:4-9
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.
ஆண்டவர் வழங்கிய கட்டளைகளை, இஸ்ரயேல் மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் எழுதவேண்டும் என்று மோசே கூறியிருப்பது, ஒரு சில சிந்தனைகளை தூண்டுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்படுவதற்கு முன், 'எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும்' ஆண்டவர் கொள்ளை நோய் வழியே சாகடித்தபோது, இஸ்ரயேல் மக்களின் இல்லங்களை அந்தக் கொள்ளைநோய் கடந்துசெல்வதற்கு அடையாளமாக, அவர்கள் இல்லங்களின் கதவுகளில் செம்மறியின் இரத்தம் பூசப்பட்டது என்பதை அறிவோம். (காண்க. விடுதலைப்பயணம் 12)
எகிப்திலிருந்து வெளியேறிய அந்த பாஸ்கா இரவில், செம்மறியின் இரத்தத்தை தங்கள் இல்லங்களின் கதவு நிலையில் பூசும்படி பணித்த மோசே, ஆண்டவர் தந்த கட்டளைகளை, அவர்கள் தங்கள் இல்லங்களின் நுழைவாயிலில் எழுதவேண்டும் என்று பணிக்கிறார். செம்மறியின் இரத்தம், கொள்ளைநோயிலிருந்து இஸ்ரயேல் மக்களை காத்ததுபோல், அவர்கள் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேல் மக்களின் இல்லங்களை ஆண்டவரின் கட்டளைகள் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்த, இந்த புதிய வழிமுறையை மோசே கூறுகிறார். அதேவண்ணம், ஆண்டவரின் கட்டளைகளை, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கரங்களிலும், நெற்றியிலும் அடையாளமாகக் கட்டிக்கொள்ளவேண்டும் என்று மோசே பணித்தார். இந்தப் பழக்கங்கள், இன்றும், யூதர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஆண்டவரின் திருச்சட்டங்களை கடைபிடிப்பதால், வாழ்வையும், அவற்றை விட்டு விலகிச்செல்வதால், அழிவையும் இஸ்ரயேல் மக்கள் பெறுவர் என்பதையும், மோசே ஓர் எச்சரிக்கையாக வழங்கியுள்ளார்:
இணைச்சட்டம் 30:16-18
உன் கடவுளாகிய ஆண்டவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார். ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.
வாழ்வை வழங்கும் சக்திபெற்ற ஆண்டவரின் திருச்சட்டத்தைப் பற்றி தாவீது 19வது திருப்பாடலில் பதிவுசெய்துள்ள எண்ணங்களை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்