தேடுதல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன (திருப்பாடல் 19:1) வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன (திருப்பாடல் 19:1) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 19 - படைப்பில் கடவுளின் மாட்சி

COP26 காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில், "படைப்பில் கடவுளின் மாட்சி" என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 19வது திருப்பாடலில் நாம் விவிலியத்தேடலை துவக்குகிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 19 - படைப்பில் கடவுளின் மாட்சி

கடவுள், கனிவுடனும், கவனத்துடனும் படைத்து, மனிதர்களின் பொறுப்பில் ஒப்படைத்த இந்த பூமிக்கோளத்தையும், சுற்றுச்சூழலையும் பேணிக்காக்க மறந்துவிட்ட, அல்லது, மறுத்துவிட்ட நாம், தற்போது, இவ்வுலகையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பதைக் குறித்து கவலைப்படுகிறோம். காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்களை குறைப்பது குறித்து, நம் சார்பில் சிந்திக்க, உலக நாடுகளின் தலைவர்கள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், COP26 மாநாட்டை மேற்கொண்டுள்ளனர். அக்டோபர் 31ம் தேதி முதல், நவம்பர் 12ம் தேதி முடிய, COP26 காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில், "படைப்பில் கடவுளின் மாட்சி" என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 19வது திருப்பாடலில் நாம் விவிலியத்தேடலை துவக்குகிறோம். இதனை, நமக்கும், குறிப்பாக, COP26 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கும், இறைவன் வழங்கும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது (திருப்பாடல் 19:1) என்ற அழகான அறிக்கையுடன் ஆரம்பமாகும் இத்திருப்பாடல், படைப்பைக்குறித்து முதல் பகுதியிலும், படைத்தவரான இறைவன் வழங்கியுள்ள திருச்சட்டம் குறித்து இரண்டாவது பகுதியிலும் பேசுகின்றது. படைப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப்பற்றி சிந்திக்க அமர்ந்திருக்கும் தலைவர்களின் ஆழ்மனதில், இப்பாடலின் வரிகள் விழவேண்டும், அவர்களது எண்ணங்களை, படைப்பின் முழுமுதல் காரணமான இறைவனை நோக்கித் திருப்பவேண்டும், என்ற வேண்டுதல்களுடன் நம் தேடலைத் தொடர்வோம்.

முதலில், 19வது திருப்பாடலின் அமைப்பைப் புரிந்துகொள்ள முயல்வோம். இத்திருப்பாடலை, ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருத்தப்பட்ட மூன்று வளையங்கள் என்ற அமைப்பில் நாம் காணலாம். இம்மூன்று வளையங்களில், வெளிப்புற வளையம், 'படைப்பில் கடவுளின் மாட்சி'யைப்பற்றி விவரிக்கும் முதல் 6 இறைவாக்கியங்கள்.

இந்த வெளிப்புற வளையத்திற்கு உள்ளே பொருத்தப்பட்டுள்ள நடு வளையம், 'ஆண்டவரின் திருச்சட்டம்' எத்தகையது என்பதுபற்றி கூறுகிறது. 7 முதல் 10 முடிய உள்ள 4 இறைவாக்கியங்களில், ஆண்டவர் வழங்கிய திருச்சட்டத்தின் பெருமைகள் பறைசாற்றப்பட்டுள்ளன. 'தோரா' என்றழைக்கப்படும் 'திருச்சட்டம்' பற்றி, திருப்பாடல்கள் நூலில், 1,19,119 ஆகிய மூன்று திருப்பாடல்கள் பதிவாகியுள்ளன.

மூன்று வளையங்கள் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள 19வது திருப்பாடலின் உள் வளையமாக அமையும் இறுதி நான்கு இறைவாக்கியங்கள், ஓர் இறைவேண்டல் வடிவில் அமைந்துள்ளன.

படைப்பில் கடவுளின் மாட்சியை எவ்வாறு காண்பது என்பதை, தாவீது இத்திருப்பாடலின் துவக்கத்தில் சொல்லித்தருகிறார். சிறுவயதுமுதல், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது, பகலிலும், இரவிலும், வானில் தெரிந்த பல்வேறு அற்புதங்களைக் கண்டு வியந்திருக்க வேண்டும். இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த தாவீது, படைப்பில் தான் கண்ட அற்புதங்களை உருவாக்கிய கலைஞரான இறைவனை மனதாரப் புகழ்ந்து பாடியிருக்கவேண்டும். அவர் பாடிமகிழ்நத புகழ் பாடல்களின் ஒரு சில வரிகளே, 19வது திருப்பாடலின் முதல் 6 இறைவாக்கியங்களாக பதிவாகியுள்ளன என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

மன்னர் தாவீது, அரியணையில் அமர்ந்தபின் இப்பாடல்களை உருவாக்கினார் என்பது, பொதுவான கருத்து. அரசராக அரியணையில் அமர்ந்தபின்னரும், அதிகார மயக்கத்தில், தானே அனைத்தையும் ஆட்சி செலுத்துவதாகக் கருதாமல், ஆண்டவருக்கு மட்டுமே படைப்பின் மீது முழு அதிகாரமும் உண்டு என்பதை தாவீது நன்கு உணர்ந்திருந்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பல தலைவர்கள், அரியணையில் அமர்ந்ததும், தங்கள் நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் அவர்களுக்கே சொந்தம் என்ற மமதையில், அந்த வளங்கள் அனைத்தையும், தங்கள் சுயநலத்திற்காக சூறையாடியுள்ளதை, வரலாறு, மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது. தற்போது, COP26 உச்சி மாநாட்டில் பங்கேற்றுவரும் தலைவர்களும் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பதை அறிவோம். இவர்கள் அனைவரும், படைப்பின் மீது இறைவனுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு என்ற உண்மையை, மன்னர் தாவீதைப்போல் உணர்ந்திருந்தால், இறைவனின் படைப்பை இவ்வளவு தூரம் அழிவுக்குக் கொணர்ந்திருக்கமாட்டார்கள். தாவீதைப்போல், இறைவனுக்குரிய மாட்சியை வழங்குவதற்கு, நம் தலைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம், பணிவு.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராய் இருந்த Franklin Roosevelt அவர்கள், தன் வாழ்வில் கடைபிடித்த ஒரு பழக்கம், உலகத்தலைவர்களுக்கு பணிவு பாடத்தைச் சொல்லித்தரக் கூடும். அரசுத்தலைவர் Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும், ஒருநாள், வெள்ளைமாளிகையில் சந்தித்து, நாள்முழுவதும், உலகின் பல பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு, அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களை, சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்கள், இவ்வாறு கூறியதன் காரணத்தை, நண்பரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவர் உடன்சென்றார். அவர்கள் இருவரும் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும், அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச்செல்வோம்" என்று சொன்னார்.

உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இருந்ததால், இவ்வுலகம் முழுவதையும், தானே சுமப்பதுபோல், Roosevelt அவர்கள் உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில், உறங்கச்செல்வதற்கு முன், அவர் மேற்கொண்ட இந்த சிறு பழக்கத்தின் வழியே, தன்னைப்பற்றிய உண்மையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள் செய்தது, குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரியலாம். ஆனால், பரந்து விரிந்த வானத்தை, ஒருசில நிமிடங்கள், ஆழ்நிலை தியான உணர்வுடன் பார்த்தது, Roosevelt அவர்களுக்கு, அவரது உண்மை நிலையை, தெளிவாக உணர்த்தியிருக்கவேண்டும். அத்தகைய மனநிலையோடு Roosevelt அவர்கள் உறங்கச்சென்றது, அவர் தனக்குத்தானே வழங்கிக்கொண்ட பணிவுப் பாடம்.

இன்றைய உலகத்தலைவர்கள் பலருக்குத் தேவையான இந்தப் பணிவுப்பாடத்தை மன்னர் தாவீது, 19வது திருப்பாடலின் அறிமுக வரிகளில் அழகாகக் கூறியுள்ளார்:

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது (திருப்பாடல் 19:1)

இன்றைய உலகத்தலைவர்களில் பலர், தாங்கள் ஆற்றும் ஒவ்வொரு சிறு செயலையும், ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான விளம்பரங்களில் வெளிப்படுத்துவதை அறிவோம். அதற்கு முற்றிலும் மாறாக, இறைவனின் மாட்சியும், அவர்தம் வேலைப்பாடும், அமைதியாக வெளிப்படுவது நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமையவேண்டும். எடுத்துக்காட்டாக, இறைவனின் மிக அழகிய வேலைப்பாடுகளில் ஒன்றான விடியற்காலை, எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி, மௌனமாகப் புலர்கிறது. ஒவ்வொரு விடியலும், வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் இறைவனின் கலைத்திறனை, கீழ்வானில் பதிக்கின்றது. இத்தகைய அமைதியான வெளிப்பாட்டை, தாவீது 19வது திருப்பாடலின் அடுத்த வரிகளில் உணர்த்துகிறார்:

ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.  ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, (திருப்பாடல் 19:2-4)

இறைவன் இயற்கை வழியே வழங்கும் அமைதியான செய்திகளை உணர மறுக்கும் மனிதர்களாகிய நாம், அவரது வேலைப்பாடுகளைச் சிதைத்துவருகிறோம். நம் கரங்களில் சிக்கி, மூச்சுவிடவும் இயலாமல் தவிக்கும் படைப்பும், அதன் விளைவாக துன்புறும் நாமும், மீண்டும் கடவுளின் உண்மையான மாட்சியைக் காண விழைவதை, பேறுகால வேதனைக்கு ஒப்பிட்டு, திருத்தூதர் பவுல் பேசியுள்ளார்:

உரோமையர் 8: 18-22

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது... அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள்வரை, படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

மனிதர்களாகிய நம் கரங்களில் சிக்கியிருக்கும் படைப்பை, மேலும், மேலும் நாம்  சிதைக்கும்போது, சூறாவளி, நிலநடுக்கம், எரிமலை என்று, ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான எச்சரிக்கைகளும், அவ்வப்போது வெளிப்படுகின்றன. இந்த எச்சரிக்கைகளை, அண்மைய ஆண்டுகளில், மிக அதிக அளவில் உணர்ந்துவரும் நாம், காலநிலை மாற்ற உச்சி மாநாடுகள் வழியே நம் பதிலிறுப்பை வழங்க முயல்கிறோம்.

புதைப்படிவ எரிபொருளுக்கு எதிராக போராட்டம்
புதைப்படிவ எரிபொருளுக்கு எதிராக போராட்டம்

நம் பதிலிறுப்புகளில் ஒன்றாக, நாம் அண்மைய ஆண்டுகளில் சிந்தித்து வருவது, இயற்கை சார்ந்த சக்திகளின் பயன்பாடு. புதைபடிவ எரிபொருள்கள், மற்றும், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழியே இறைவன் வழங்கியுள்ள வேறு பல சக்திகளைப் பயன்படுத்துவது பற்றி சிந்தித்து வருகிறோம். இந்த இயற்கை சக்திகளில் முதன்மையானதாக நாம் கருதுவது, சூரிய ஒளி. இறைவன் படைத்திருக்கும் இந்த பிரம்மாண்டமான சக்தி ஊற்றைக் குறித்து, மன்னர் தாவீது, பல்வேறு உருவகங்களுடன், 19வது திருப்பாடலில் சித்திரித்துள்ளார்:

இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது. அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. (திருப்பாடல் 19:4-6)

19வது திருப்பாடலின் முதல் 6 இறைவாக்கியங்களில், படைப்பைப்பற்றி மன்னர் தாவீது உணர்த்தியுள்ள உண்மைகளை, நாம் அனைவரும், குறிப்பாக, COP26 மாநாட்டில் பங்கேற்றுவரும் தலைவர்கள் அனைவரும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றையத் தேடலை நிறைவுசெய்வோம். இத்திருப்பாடலின் அடுத்த வரிகளில், ஆண்டவரின் திருச்சட்டம் பற்றி மன்னர் தாவீது பதிவுசெய்துள்ள கருத்துக்களை, அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2021, 13:48