தேடுதல்

பாக்தாத் நகரில் இளையோர் மாநாடு பாக்தாத் நகரில் இளையோர் மாநாடு 

ஈராக்கின் பாக்தாத் நகரில் இளையோர் மாநாடு

ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை திருஅவை வரலாற்றில், முதல்முறையாக இளையோரின் மாநாடு நடைபெறுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை திருஅவை வரலாற்றில், முதல்முறையாக இளையோரின் மாநாடு நடைபெறுவதாக பாக்தாத் துணை ஆயர், பாசெல் யால்டோ (Basel Yaldo) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கல்தேய வழிபாட்டு முறை திருஅவையைச் சேர்ந்த ஏழு மறைமாவட்டங்களில் வாழும் 18 வயதுக்கும், 35 வயதுக்கும் உட்பட்ட 450 இளையோர், நவம்பர் 18, இவ்வியாழன் முதல், 20, வருகிற சனிக்கிழமை முடிய, பாக்தாத் நகரில் மேற்கொள்ளும் கூட்டம், தலத்திருஅவையின் வரலாற்றில், முக்கியமான ஒரு நிகழ்வு என்று, ஆயர் யால்டோ அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு மார்ச் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, இளையோரைச் சந்தித்தவேளையில், வாழும் ஈராக் திருஅவையின் எதிர்காலம் இளையோரே என்று கூறியது, அவர்களில் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது என்று, ஆயர் யால்டோ அவர்கள் மேலும் கூறினார்.

பல்வேறு பாதுகாப்பு இடர்பாடுகள் ஈராக் நாட்டில் நிலவி வருவதால், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு, ஈராக் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும், பாக்தாத் தலத்திருஅவையும், பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ அவர்களது துவக்க உரையுடன் துவங்கியுள்ள இந்த கூட்டத்தில், கருத்தரங்குகள், வழிபாடுகள், மறைக்கல்வி உரைகள், சாட்சியங்கள் மற்றும் ஈராக் நாட்டின் பொது வாழ்வைக் குறித்த கருத்துரைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில உலகத் திருஅவையில், நவம்பர் 21, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் 36வது இளையோர் உலக நாளுக்கு தகுந்த ஒரு தயாரிப்பாக நடைபெறும் இந்த இளையோர் கூட்டத்தின் இறுதி சிறப்புத் திருப்பலியை, சனிக்கிழமை மாலை, முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ அவர்கள் நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2021, 14:27