தேடுதல்

குடும்ப ஆன்மீகம் குடும்ப ஆன்மீகம்  

மகிழ்வின் மந்திரம்: குடும்ப வாழ்வு, ஓர் ஆழமான ஆன்மீக அனுபவம்

நம் அன்புக்குரியவர்களுக்கு, நமது முழுமையான அக்கறையும், கவனமும் தேவைப்படுகின்றன. இதில் இயேசுவே நமக்கு முன்மாதிரிகை

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் 9ம் இறுதிப் பிரிவில், குடும்ப வாழ்வு, ஓர் ஆழமான ஆன்மீகம் அனுபவம் என்பதுபற்றி 323ம் பத்தியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ:

நம் அன்புக்குரிய உறவுகளை கடவுளின் கண்களோடு தியானிக்கவும், அவர்களில் கிறிஸ்துவைப் பார்க்கவும், குடும்ப வாழ்வு, ஓர் ஆழமான ஆன்மீக அனுபவத்தைக் கொடுக்கின்றது. இதற்கு, விடுதலையுணர்வும் திறந்த மனதும் அவசியம். இந்நிலை, அவர்களின் மாண்பின் மதிப்பை அறிந்து பாராட்டச் செய்கிறது. மற்ற எல்லாவற்றையும் மறந்து, மற்றவருக்கு நம்மையே முழுமையாக வழங்குவதால் மட்டுமே, நாம் அவர்களை உண்மையாகவே புரிந்துகொள்கிறோம், அவர்களை ஏற்கிறோம், நம் பிரசன்னத்தில் பாதுகாப்பு உள்ளது போன்ற உணர்வுகளை, அவர்களுக்குக் கொடுக்கிறோம். எனவே நம் அன்புக்குரியவர்களுக்கு, நமது முழுமையான அக்கறையும், கவனமும் தேவைப்படுகின்றன. இதில் இயேசுவே நமக்கு முன்மாதிரிகை. அவரோடு பேசவேண்டும் என்று மக்கள் அவரை அணுகியபோதெல்லாம், அவர் அவர்களை அன்பொழுக கூர்ந்து நோக்கினார் (காண்க.மாற்கு10:21) என்றும், அவரது பிரசன்னத்தில், தாங்கள்  புறக்கணிக்கபடவில்லை என எவருமே உணர்ந்ததில்லை என்றும், ஏனெனில் இயேசுவின் வார்த்தைகளும், சைகைகளும் அவ்வாறு இருந்தன என்றும் நற்செய்தியில் வாசிக்கிறோம். இயேசு, பர்த்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்?” (மாற்கு 10:51) என்றுதான் கேட்டார். இதையேதான் நாம் தினமும் குடும்ப வாழ்விலும் அனுபவிக்கின்றோம். குடும்பத்தில் நம்மோடு வாழ்கின்ற ஒவ்வொருவரும், இறைத்தந்தையின் அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் எல்லையற்ற மாண்பைக் கொண்டிருக்கின்றார் என்பதால், அவர்களுக்கு நம் முழுமையான கவனம் தேவைப்படுகின்றது. இது கனிவன்புக்கு இட்டுச்செல்கிறது, மற்றும், அன்புகூரப்படுவதில் உள்ள மகிழ்ச்சியை, மற்றவரில் ஏற்படுத்துகின்றது. பலவீனங்களில், குறிப்பாக, அவை வெளிப்படையாகத் தெரிகின்றபோது, அவர்களை அன்போடும் அக்கறையோடும் நடத்துவதன் வழியாக, இந்த கனிவன்பு, சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்படுகின்றது, (அன்பின் மகிழ்வு 323)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2021, 14:16