தேடுதல்

Vatican News
மகிழ்வான குடும்பம் மகிழ்வான குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: கடவுளோடு ஆழமான உறவுக்கு குடும்ப ஒன்றிப்பு

மனிதரின் சமூகப் பரிமாணத்தில் திருமணமான தம்பதியரும் குடும்பமும், முதலும், முக்கியமுமான வெளிப்பாடு என்பதால், ஆன்மீகம், குடும்பத்தின் ஒன்றிப்பில் உருவாகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 9ம் பிரிவில், திருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் நிலவும் ஆன்மீகத்தின் ஒருசில பரிமாணங்களை 13 பத்திகளில் விளக்கியுள்ளார். அதன் 316ம் பத்தியில் திருத்தந்தை பதிவுசெய்துள்ள சிந்தனைகள் இதோ...

குடும்பத்தில் நிலவும் மகிழ்வான ஓர் ஒன்றிப்பு அனுபவம், கடவுளோடு ஆழமான ஒன்றிப்பு கொள்வதற்கு உதவுகின்றது. இது, ஒவ்வொரு நாளும் புனிதமடையவும், அதில் வளரவும் உண்மையான வழியாக உள்ளது. குடும்ப வாழ்வில் நிலவும் உடன்பிறந்த உணர்வு, ஒன்றிப்பு ஆகியவை, திறந்த மனதோடு இடம்பெறும் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளன. “தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர், மற்றும், இருளில் நடக்கின்றனர் (1யோவா.2:11); “இத்தகைய மனிதர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்” (1யோவா.3:14) மற்றும், “அவர்கள் கடவுளை அறிந்து கொள்ளவில்லை” (1யோவா.4:8). இறுதியில் அன்பு மட்டுமே, இருளில் வளரும் உலகில், தொடர்ந்து சுடர்விடும் விளக்காக உள்ளது. “நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் மட்டுமே, கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்” (1யோவா.4:12) என்று இறைவார்த்தை நமக்குக் கூறுகின்றது. மனிதர், ஓர் உள்ளார்ந்த சமூகப் பரிமாணத்தைக் கொண்டிருப்பதாலும், மனிதரின் அந்த சமூகப் பரிமாணத்தில் திருமணமான தம்பதியரும் குடும்பமும், முதலும், முக்கியமுமான வெளிப்பாடு என்பதாலும், ஆன்மீகம், குடும்பத்தின் ஒன்றிப்பில் உருவாகிறது. ஆகையால், ஆன்மீகத்தில் பேரார்வம் கொண்டிருப்போர், குடும்பம், ஆவியாரின் வாழ்வில் தங்களின் வளர்ச்சியை குறைக்கின்றது என உணரக் கூடாது. மாறாக, அது அவர்களை, மேலான ஒன்றிப்பின் உச்சத்திற்கு நடத்திச்செல்ல ஆண்டவர் அவர்களைப் பயன்படுத்தும் ஒரு வழி என்று, அதனை நோக்கவேண்டும் (அன்பின் மகிழ்வு 316)

11 November 2021, 15:06