தேடுதல்

அறநெறி இறையியல் அறநெறி இறையியல்  

மகிழ்வின் மந்திரம்:அறநெறியியல் போதனையில் பிறரன்புக்கு முன்னுரிமை

திருஅவையின் அறநெறி இறையியல் போதனைகளுக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்பது முற்றிலும் சரியே. இருந்தபோதிலும், அப்போதனையில், நற்செய்தியின் மிக உன்னத விழுமியமான பிறரன்பு காட்டப்பட எப்போதும் வலியுறுத்தப்பட வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வை முன்னிறுத்திக் காட்டுவது, அதன் கருணை நிறைந்த பண்பாகும். திருஅவையின் போதனைகளின்படி வாழாத தம்பதியருக்கு ஆற்றுகின்ற மேய்ப்புப்பணியிலும், இந்தப் பண்பு அதிகமாக வெளிப்படுத்தப்படுவதற்கு, அறிவுசார்ந்த முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், 307ம் பத்தி முதல் (307-312) ஆறு பத்திகளில் விளக்கியுள்ளார். 311ம் பத்தியில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ...

திருஅவை என்பது, இறைத்தந்தையின் இல்லம், அங்கு பிரச்சனைகளுடன் வருவோர் உள்ளிட்ட எல்லாருக்கும் இடமுள்ளது. திருஅவையின் அறநெறி இறையியல் போதனையில் இதனைக் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது. அதேநேரம், திருஅவையின் அறநெறி இறையியல் போதனைகளுக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்பது முற்றிலும் சரியே. இருந்தபோதிலும், அப்போதனையில், நற்செய்தியின் மிக உன்னத மற்றும், மிக முக்கிய விழுமியங்களை, குறிப்பாக, நம் தகுதியைப் பாராமல் வழங்கப்படும் கடவுளின் பேரன்புக்குப் பதிலளிப்பதாய் அமைகின்ற பிறரன்பு காட்டப்பட, எப்போதும் வலியுறுத்தப்படவும், ஊக்கப்படுத்தப்படவும் வேண்டும் என்பதை மறத்தலாகாது. சில நேரங்களில், நம் மேய்ப்புப்பணியில், கடவுளின் வரையரையற்ற அன்புக்கு இடமளிப்பதை மிகவும் கடினமாக உணர்கின்றோம். இரக்கத்திற்கு பல வரையறைகளை வைக்கின்றோம். இதனால் அதன் தெளிவான அர்த்தம் மற்றும், உண்மையான முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகின்றோம். இது, நற்செய்தியின் சாரத்தைக் குறைக்கின்ற மிக மோசமான செயலாகும். இரக்கம், நீதி மற்றும் உண்மையை ஒதுக்குவதில்லை என்பது உண்மையே, ஆனால், இரக்கம் என்பது, நீதியின் முழுமை மற்றும், கடவுளின் உண்மையை அதிகமாக ஒளிருமாறு வெளிப்படுத்துவது என்பதே முதலும், முக்கியமுமானது என்று நாம் கூறவேண்டும். இந்தக் கருத்தைப் போதுமான அளவு வெளிப்படுத்தாத எந்தவோர் இறையியல் கருத்தியலும், கடவுளின் பேராற்றலையும், குறிப்பாக அவரது இரக்கத்தையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குவதற்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் எப்போதும் நினைவில் இருத்தவேண்டும். (அன்பின் மகிழ்வு 311)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2021, 10:57