தேடுதல்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்  

மகிழ்வின் மந்திரம்: மேய்ப்புப்பணியில் கருணை, பொறுமை

திருஅவையின் மேய்ப்பர்கள், திருஅவைப் போதனையை தன் நம்பிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கும்போது, அவர்கள், பலவீனர்களை, அவசர அவசரமாகத் தீர்ப்பிடாமலும், புண்படுத்தாமலும், பரிவன்போடு நடத்துவதற்கு உதவவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

மரபுவழி ஏற்கப்படாத மணவாழ்வை மேற்கொண்டுள்ள தம்பதியருக்கு திருஅவை ஆற்றுகின்ற மேய்ப்புப்பணியில், கருணை மற்றும், பொறுமையைக் கடைப்பிடித்து, அவர்களது வளர்ச்சியில் உடன்பயணிக்கவேண்டும். இக்கருத்தின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், “மேய்ப்புப்பணி கருணையின் அறிவுசார் விளக்கம்” என்ற துணைதலைப்பில் 307, மற்றும் 308ம் பத்திகளில், தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார்.

திருமண அருளடையாளம், தம்பதியரிடையேயுள்ள அன்பை வளப்படுத்தும், கிறிஸ்துவின் அருளால் அதில் நிலைத்திருக்க உதவும் மற்றும், திருஅவையின் வாழ்வில் முழுமையாய்ப் பங்குபெற வாய்ப்பும் கிடைக்கும் என்ற கருத்தியலை, கத்தோலிக்க இளையோர் புரிந்துகொள்ளுமாறு, அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். மேய்ப்புப்பணியில் இவ்வாறு செயல்பட தயக்கம்காட்டும் மனநிலை, நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருப்பதும், திருஅவை இளையோர் மீது அக்கறை காட்டுவதும் குறைவுபடுவதை எடுத்துரைக்கின்றது. அசாதாரணச் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதை வெளிப்படுத்துவது, திருமணம் பற்றிய கடவுளின் திட்டத்தின் முழுமையான கருத்தியலின் ஒளியை மங்கச் செய்வதாக ஒருபோதும் நோக்கப்படாது. இக்காலக்கட்டத்தில், திருமணங்கள் நிலைத்திருப்பதற்கு மேய்ப்புப்பணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியது மிக முக்கியம். இது திருமணங்கள் முறிவுபடுவதைத் தடுக்க உதவும். அதேநேரம், முறையற்ற வாழ்வை வாழும் தம்பதியிரின் உளவியல், வரலாற்றுயியல், உயிரியல் போன்ற சூழல்களைப் புரிந்துகொண்டு, ஆண்டவரின் கருணை அவர்கள்  வாழ்வில் செயல்பட இடமளித்து, அவர்களின் வளர்ச்சியில், கருணை மற்றும், பொறுமையோடு தோள்கொடுக்கவேண்டும்.

குழப்பத்திற்கு இடமளிக்காமல் மிக ஆர்வத்தோடு மேய்ப்புப்பணியாற்ற விரும்புவோரைப் புரிந்துகொள்கிறேன். ஆயினும், மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் நன்மைத்தனத்தை விதைக்கும் தூய ஆவியாரின் குரலுக்கு, கவனமுடன்  செவியாய்க்கும் ஒரு திருஅவையையே இயேசு விரும்புகிறார் என்பதை நான் நம்புகிறேன். திருஅவை திருமணம் பற்றிய தன் போதனைகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் அதேநேரம், அவற்றுக்கு மாறாக வாழ்வோருக்கு ஆற்றுகின்ற மேய்ப்புப்பணியில், தெருக்களின் சகதியால் தன் காலணிகளை அழுக்காக்கினாலும்கூட, அது எப்போதும் நல்லதையே செய்யும் ஓர் அன்னையாக இருக்கின்றது. திருஅவையின் மேய்ப்பர்கள், நற்செய்தியின் முழுமையான கருத்தியல் மற்றும், திருஅவைப் போதனையை தன் நம்பிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கும்போது, அவர்கள், பலவீனர்களை, அவசர அவசரமாகத் தீர்ப்பிடாமலும், புண்படுத்தாமலும், பரிவன்போடு நடத்துவதற்கு உதவவேண்டும். நற்செய்தியுமே தீர்ப்பளிக்காதீர்கள் (காண்க.மத்.7:1; லூக். 6:37) என்றே நம்மிடம் கூறுகிறது. பெரும் துன்பங்களில் நமக்கு அடைக்கலம் அளிக்கும் பதுங்கிடங்களைத் தேடுவதை நிறுத்தி, மற்றவரின் உண்மையான வாழ்வு நிலையில் நுழைந்து, அவர்கள் கனிவன்பின் வல்லமையை அறியச்செய்யுமாறு இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார். இவ்வாறு செய்யும்போது நம் வாழ்வு வியப்புக்குரியதாய் மாறும். (அன்பின் மகிழ்வு 307,308)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 14:47