தேடுதல்

Vatican News
ஒரே குடையின்கீழ் ஒரு தம்பதி ஒரே குடையின்கீழ் ஒரு தம்பதி  

மகிழ்வின் மந்திரம் : உள்மன விடுதலை குறித்த எதிர்பார்ப்பு

தம்பதியர் ஒருவர் ஒருவரைப்பற்றிய எதிர்பார்ப்பில், ஓரளவு ஏமாற்றத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள, நம் ஆன்மீகப் பயணம் நமக்கு உதவ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலின் இறுதிப்பிரிவில், திருமணம், மற்றும் குடும்பத்தின் ஆன்மீகம் பற்றிப் பேசும்போது, 'தம்பதியரிடையே, ஒருவரையொருவர் சார்ந்தும், அதேவேளையில் சுதந்திரமாகவும் நிலவும் அன்பின் ஆன்மீகம்' குறித்து 319, 320 என்ற இரு பத்திகளில் கூறியுள்ளதில், 320ம் பத்தியின் தொகுப்பு இதோ:

ஒரு தம்பதியரின் அன்பு, அதன் சுதந்திரத்தின் உச்சநிலையை எட்டி, ஆரோக்கியமான சுயாட்சியின் அடிப்படையாக மாறும் ஒரு நிலை உருவாகிறது. தம்பதியருள் ஒவ்வொருவரும், மற்றவரை தனக்கு உரியவர் அல்ல, மாறாக, அவருக்கு இதையும் தாண்டிய முக்கியமான ஒரு தலைவர், அதாவது, கடவுள் இருக்கிறார் என்பதை உணரும்போது, இது ஏற்படுகிறது. அன்புகூர்பவரின், ஆழமான மற்றும் தனிப்பட்ட உள்மையத்தை, கடவுளைத் தவிர வேறு எவரும் எடுத்துக்கொள்ள முடியாது; அவர் மட்டுமே தம்பதியரின் வாழ்க்கையில் இறுதி மையமாக இருக்க முடியும். அதேவேளை, தம்பதியரில் ஒருவரால் மற்றவரின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள, ஆன்மீக யதார்த்தத்தின் கொள்கை நமக்கு அழைப்புவிடுக்கிறது.  Dietrich Bonhoeffer அவர்கள் அழகாகக் கூறுவதுபோல், தம்பதியர் ஒருவர் ஒருவரைப்பற்றிய எதிர்பார்ப்பில், ஓரளவு ஏமாற்றத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள, நம் ஆன்மீகப் பயணம் நமக்கு உதவவேண்டும், அதாவது, கடவுளின் அன்புக்கென ஒருவர் கொண்டுள்ளதை மற்றவர் எதிர்பார்ப்பதை நிறுத்தவேண்டும். இது, ஓர் உள்மன விடுதலையை எதிர்பார்க்கின்றது. தம்பதியர் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வில், கடவுளுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒதுக்கியுள்ள இடத்தின் வழியாக அவர்கள் தங்கள் வாழ்வின் துயர்களில் குணம்பெறவும், இறையன்பில், தங்கள் அன்பின் ஆழமான அர்த்தத்தைக் கண்டுகொள்ளவும் உதவுகிறது. இந்த உள்மன விடுதலையை சாத்தியமானதாக மாற்ற, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தூய ஆவியாரின் உதவியை நாடுவோம்.(அன்பின் மகிழ்வு 320)

17 November 2021, 13:30