தேடுதல்

தம்பதியருக்கு உதவுதல் தம்பதியருக்கு உதவுதல் 

மகிழ்வின் மந்திரம் - கருணையும் அன்பும் நிறைந்த மேய்ப்புப்பணி

பிரச்சனையிலிருப்போர் சொல்வதை, உணர்திறனுடனும், அமைதியுடனும் கேட்டு, அவர்களின் அவலநிலையையும், அவர்களின் கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள முயலவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் வாழ்விலும், தம்பதியருக்கு அது ஆற்றுகின்ற மேய்ப்புப்பணியிலும், கருணையின் முக்கிய இடம் குறித்து, தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், தெளிவாக விவரித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அப்பிரிவின் இறுதிப் பத்தியில், அதாவது, 312ம் பத்தியில் கூறியுள்ள கருத்துக்களின் தொகுப்பு:

இரக்கம் என்பது, நீதியின் முழுமை, மற்றும், கடவுளின் உண்மையை அதிகமாக ஒளிருமாறு வெளிப்படுத்துவது என்பதை நாம் புரிந்து, ஏற்றுக்கொள்ளும்போது, அது, அதிக உணர்ச்சிகரமான சிக்கல்களைக் கையாள்வதில், கனிவற்ற அதிகாரத்துவ ஒழுக்கத்தைத் தவிர்க்க உதவும் ஒரு கட்டமைப்பை நமக்கு வழங்குகிறது. மேலும், புரிந்துகொள்ளவும், மன்னிக்கவும், உடன்செல்லவும், நம்பிக்கையாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்கிணைக்கவும் எப்போதும் தயாராக இருக்கும் இரக்கத்துடன் கூடிய அன்பால் நிறைந்த மேய்ப்புப்பணி தெளிந்து தேர்தல் சூழலில் நம்மை இருத்துகிறது. சமூகத்தின் வெளிப்புற விளிம்புகளில் வாழ்பவர்களுக்கு நம் இதயங்களைத் திறக்க, இத்தகைய மனநிலையே திருஅவைக்குள் நிலவி, நம்மை வழிநடத்தவேண்டும். சிக்கலானச் சூழல்களில் வாழும் மக்கள், மனத்துணிவுடன், தங்கள் மேய்ப்பர்களுடனோ, அல்லது, கடவுளுக்கென தங்களை அர்ப்பணித்து வாழும் உடன்வாழ் பொதுநிலையினருடனோ இது குறித்து கலந்துரையாட நான் ஊக்கமளிக்கிறேன். இத்தகைய சந்திப்புகளில், அவர்கள், தங்கள் சொந்த எண்ணங்கள், மற்றும் விருப்பங்களின் உறுதிப்படுத்தலை அவர்களில் காணமாட்டார்கள், ஆனால், அவர்கள் தங்கள் சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளவும், தனிப்பட்ட வளர்ச்சிக்குரிய பாதையைக் கண்டறியவும் உதவுவதற்கு நிச்சயமாக சில ஒளியைப் பெறுவார்கள். சிக்கலில் இருப்போர் சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும், திருஅவையில் தங்களுக்குரிய இடத்தை அடையாளம் காணவும் உதவுவதற்காக, திருஅவையின் மேய்ப்பர்கள், அவர்கள் சொல்வதை உணர்திறனுடனும் அமைதியுடனும் கேட்டு, அவர்களின் அவலநிலையையும், அவர்களின் கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என, நான் ஊக்கமளிக்கிறேன். (அன்பின் மகிழ்வு 312)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2021, 15:11