தேடுதல்

வாழ்வு தேடி குடிபெயரும் ஒரு குடும்பம் வாழ்வு தேடி குடிபெயரும் ஒரு குடும்பம்  

மகிழ்வின் மந்திரம் – திருஅவை, சுங்கச்சாவடியல்ல

இரக்கம் குறைபட்டதாக திருஅவையின் போதனைகளோ, இவ்வுலகிற்குரிய அதன் சான்று வாழ்வோ இருத்தலாகாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், “மேய்ப்புப்பணி கருணையின் அறிவுசார் விளக்கம்” என்ற துணைதலைப்பில் 310ம் பத்தியில் கூறியிருப்பதன் தொகுப்பு இதோ:

"இரக்கம் என்பது, இறைவனின் செயல்பாடு மட்டுமல்ல, அவரது உண்மையான குழந்தைகள் யார் என்பதை அறிய இது ஒரு அளவுகோலுமாகும். ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், கருணை முதலில் நமக்குக் காட்டப்பட்டதால், நாமும் கருணை காட்ட அழைக்கப்படுகிறோம்" என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இது, ஒரு கற்பனைக்கதையோ, இறையன்பிற்கு நாம் மேலோட்டமாக வழங்கும் பதிலுரையோ அல்ல. எது உயர்வானதோ அதையே இறையன்பு நமக்கு வழங்குகிறது, ஏனெனில் திருஅவை வாழ்வின் அடிப்படையே இரக்கம்தான். திருஅவையின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் அனைத்தும், திருஅவை நம்பிக்கையாளர் மீது காட்டும் கனிவான மென்மை நடவடிக்கைகளால் நிறைந்திருக்கவேண்டும். இரக்கம் குறைபட்டதாக திருஅவையின் போதனைகளோ, இவ்வுலகிற்குரிய அதன் சான்று வாழ்வோ இருத்தலாகாது. ஆனால், நாம் பலவேளைகளில் அருளை வழங்க உதவும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுவதற்கு பதிலாக, அருளின் நடுவர்களாக செயல்படுகிறோம். திருஅவை என்பது, ஒரு சுங்கச்சாவடி அல்ல, மாறாக, அது நம் இறைத்தந்தையின் இல்லம், அங்கு அனைவருக்கும், தங்கள் பிரச்சனைகளுடன் வரும் அனைத்து மக்களுக்கும் இடமுண்டு. (அன்பின் மகிழ்வு 310)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2021, 14:40