தேடுதல்

Amoris laetitia ஆண்டு 2021-2022 Amoris laetitia ஆண்டு 2021-2022 

மகிழ்வின் மந்திரம் : வாக்களிக்கப்பட்டது, கற்பனையைத் தாண்டியது

எந்த குடும்பமும் வானுலகில் இருந்து முழுமையாக உருவாகி வரவில்லை, மாறாக, குடும்பங்கள் தொடர்ந்து வளர்ந்து, அன்புகூரும் திறனில் முதிர்ச்சியடைய வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம் ஆண்டவர் இயேசு (மத்.22:30), புனித பவுல் (1கொரி.7:29-31) ஆகிய இருவரின் திருமணம் பற்றிய படிப்பினைகள், தற்செயலாக அல்ல, மாறாக, நமது மனித இருப்பின் இறுதி மற்றும் உறுதியான பரிமாணத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிப்பினையின் வளத்தை, நாம் கட்டாயமாக மீண்டும் கண்டறியவேண்டும். இந்த படிப்பினைகளுக்குச் செவிமடுப்பதன் வழியாக, திருமணமான தம்பதியர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஆழமான அர்த்தத்தைக் கண்டுகொள்வார்கள். இந்த திருத்தூது அறிவுரை மடலில் அடிக்கடி குறிப்பிட்டுள்ளதுபோல், எந்த குடும்பமும் வானுலகில் இருந்து முழுமையாக உருவாகி வரவில்லை, மாறாக, குடும்பங்கள் தொடர்ந்து வளர்ந்து, அன்புகூரும் திறனில் முதிர்ச்சியடைய வேண்டும். மூவொரு கடவுளின் முழு ஒன்றிப்பு, கிறிஸ்துவுக்கும் அவருடைய திருஅவைக்கும் இடையே நிலவும் ஆழமான ஒன்றிப்பு, நாசரேத்தின் அன்பு சமுதாயமாகிய திருக்குடும்பம், மற்றும் வானுலகப் புனிதர்களிடையே நிலவும் தூய உடன்பிறந்த நிலை ஆகியவற்றால் பிறந்த ஒரு முடிவற்ற அழைப்பாகும் இது. நாம் இன்னும் அடையவேண்டிய நிறைவைப் பற்றிய நமது ஆழமான சிந்தனை, குடும்பங்களாக நாம் மேற்கொள்ளும் வரலாற்றுப் பயணத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க அனுமதிக்கிறது. மேலும், இந்த வழியில் நமது தனிப்பட்ட உறவுகளில் ஒரு முழுமை நிலையையும், நோக்கங்களில் புனிதத்துவத்தையும், நிலையானதன்மையையும் கட்டாயமாக எதிர்பார்ப்பதை நிறுத்த உதவுகிறது. இத்தகைய நிலைகளை, இறையரசு வரும்போதுதான் நாம் எதிர்கொள்வோம். பலவீனமான சூழல்களில் வாழ்பவர்களைக் கடுமையாகத் தீர்ப்பிடுவதிலிருந்தும் இது நம்மைத் தடுக்கிறது. நம்மையும் நம் குடும்பத்தையும்விட மேலான ஒன்றை நோக்கித் தொடர்ந்து பாடுபட நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம், மேலும், ஒவ்வொரு குடும்பமும் இந்த தொடர்ச்சியான தூண்டுதலை தங்களுள் உணரவேண்டும். குடும்பமாக இந்த பயணத்தை மேற்கொள்வோம், ஒன்றாக இணைந்து நடப்போம். நமக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது, நாம் கற்பனை செய்வதைவிட மேலானது. நமக்கிருக்கும் தடைகள், மற்றும் குறைகள் காரணமாக நாம் ஒருபோதும் மனம் தளராமல் செயல்படுவோமாக. கடவுள் நமக்கென வைத்திருக்கும் ஒன்றிப்பு, மற்றும் அன்பின் முழுமையை நாடுவதை நிறுத்தாதிருப்போமாக.(அன்பின் மகிழ்வு 325)

24 November 2021, 14:03