தேடுதல்

திருவருகைக் காலம் திருவருகைக் காலம் 

விண்மீன் காட்டும் பாதையில்... இலக்கில் கவனம்

வாழ்வில் உயர்ந்த சிந்தனைகளும் ஆசைகளும் வரும்போது அவற்றைத் தகர்த்தெறியும் அளவுக்கு துன்பங்கள் நேரிடினும், அவற்றுக்கு மத்தியில் நம்மால் வாழ்ந்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கையில் வீறுகொண்டு எழுந்துநிற்கும் சக்தி நமக்கு உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

கருத்தரங்கு ஒன்றில் பேச எழுந்த பிரபலப் பேச்சாளர் ஒருவர், தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தைத் தூக்கிக் காட்டி, இது சுத்தமான 22 கேரட் தங்க மோதிரம், இதைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் யார் என்று கேட்டார். அரங்கத்திலிருந்த அனைவரது கைகளுமே உயர்ந்தன. பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றை எரியச் செய்து அந்தச் சுவாலையில் அந்த மோதிரத்தைக் காட்டினார். சிறிதுநேரத்தில் அந்த மோதிரம் முழுவதும் கறுப்பானது. இப்பொழுது இது யாருக்குத் வேண்டும் என்று அவர் கேட்க, எல்லாருமே கைகளை உயர்த்தினர். பின்னர் அதை கீழே போட்டு காலால் மிதித்து தேய்த்த பின்னரும், அதேபோல் அவர் கேட்க, அப்போதும் அனைவரது கைகளுமே உயர்ந்தன. பின்னர் அதை ஒரு சுத்தியலால் அடித்து தகர்த்து உருக்குலையச் செய்த பின்னர் மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்டார். இப்போதும் அனைவரது கைகளுமே உயர்ந்தன. பின்னர் அவர், அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார் – நண்பர்களே நான் இந்த தங்க மோதிரத்தை எவ்வளவு வதைத்துத் துன்புறுத்தினாலும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவே விரும்பினீர்கள். ஏனெனில் நான் அதை எவ்வளவு சித்ரவதைப்படுத்தினாலும், அதன் மதிப்பு எந்த விதத்திலும் குறையவே இல்லை. அதேபோல் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் அல்லது எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக, இந்த மோதிரத்தைப்போன்று நடத்தப்பட்டாலும், உங்களை நீங்கள் ஒருபோதும் குறைவாக, தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் எந்நிலையிலும் உங்கள் மதிப்பு ஒருபோதும் குறைவுபடுவதில்லை. ஆண்டவர் இயேசுவைப் போன்று, அவரின் முதல் சீடராகிய திருத்தூதர் அந்திரேயாவும் தனது இலக்குக்காக வாழ்ந்துவந்தார். ஆனால் அதற்காக அவர் சித்ரவதைக்குள்ளானார், சிலுவையில் குறுக்குநெடுக்காக அறையப்பட்டு கொல்லப்பட்டார். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியும், இன்றும் அவர் புகழ் குறையவே இல்லை. புனித அந்திரேயா, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். எனவே நம் வாழ்க்கையிலும் எவ்வளவு இடர்கள் நேரிடினும் நம் இலக்கையும் மதிப்பையும் இழக்காமல் வாழ்வோம். வாழ்வில் உயர்ந்த சிந்தனைகளும் ஆசைகளும் வரும்போது அவற்றை நிலைநாட்டத் துடிக்கவேண்டும். அவற்றைத் தகர்த்தெறியும் அளவுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அவற்றுக்கு மத்தியில் நம்மால் வாழ்ந்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கையில் வீறுகொண்டு எழுந்துநிற்கும் சக்தி நமக்கு உள்ளது என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். நமது மதிப்பு மிதிக்கப்பட்டாலும் அவமதிக்கப்பட்டாலும் அது ஒரு துளியளவும் குறைவதில்லை என்ற நம்பிக்கை எப்போது நம்மில் இருக்கிறதோ அப்போது நாம் வெல்லப் பிறந்தவர்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஆண்டவர் இயேசுவும், அவரது சீடர்களும், இதையே எல்லா நேரங்களிலும் இவ்வுலகில் வாழ்ந்து காட்டினர். நவம்பர் 30, இச்செவ்வாய் திருத்தூதர் புனித அந்திரேயாவின் திருநாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2021, 14:49