தேடுதல்

“ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” -  மாற்கு 10,51 “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” - மாற்கு 10,51 

பொதுக்காலம் 30ம் ஞாயிறு: உலக மறைபரப்புப்பணி நாள்

95வது உலக மறைப்பரப்புப்பணி நாளை சிறப்பிக்கும் வேளையில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமை, நற்செய்தியாக (மாற்கு 10: 46-52) நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு – உலக மறைபரப்புப்பணி நாள்

ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறை, World Mission Day, அதாவது, உலக மறைபரப்புப்பணி நாள் என்று சிறப்பிக்கிறோம். அக்டோபர் 24, இஞ்ஞாயிறன்று, 95வது உலக மறைப்பரப்புப்பணி நாளை சிறப்பிக்கும் வேளையில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமை, நற்செய்தியாக (மாற்கு 10: 46-52) நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு வாய்ப்பாக, ஓர் அழைப்பாக ஏற்று நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இந்த நற்செய்திப் பகுதியில், இயேசுவுக்கும், பார்வையற்ற பர்த்திமேயுவுக்கும் இடையே நிகழும் உரையாடல், நம் சிந்தனைகளைத் துவக்கி வைக்கின்றது. “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்கும் இயேசுவிடம்,  “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்று பதிலளிக்கிறார் பர்த்திமேயு. அவர், இயேசுவிடம், "நான் பார்வை பெறவேண்டும்" என்று சொல்லாமல், "நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்று சொல்வது, சிந்திக்கத் தகுந்த ஒரு விண்ணப்பம். அதாவது, பர்த்திமேயு அவர்கள், பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல, மாறாக, ஏதோ ஒரு தருணத்தில், அல்லது, சிறிது, சிறிதாக தன் பார்வையை இழந்தவர் என்றும், அதனால், அவர் இயேசுவிடம், "நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்று விண்ணப்பித்தார் என்றும் நாம் ஊகிக்க முடியும்.

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்தால், பர்த்திமேயு, நம் அனைவரின் பிரதிநிதியாக, இயேசுவின் முன் விண்ணப்பிக்கிறார் என்று எண்ணிப்பார்க்கலாம். நாமும், வாழ்வின் பல உண்மைகளை, குழந்தைப் பருவத்தில், இயல்பான கண்ணோட்டத்தில் கண்டு, பயனடைந்திருப்போம். ஆனால், வளர, வளர, அந்த உண்மைகளைக் காணும் நம் திறன் சிறிது சிறிதாக குறைந்து, அல்லது, குறைக்கப்பட்டு, அந்த உண்மைகளைக் காண்பதில் நாம் பார்வை இழந்திருக்கலாம். இன்று, இந்த திருவழிபாட்டில் (ஞாயிறு சிந்தனை நேரத்தில்) "நாம் மீண்டும் தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும்" என்ற வேண்டுதலை இறைவனிடம் எழுப்புவோம்.

உலக மறைபரப்புப்பணி நாளன்று, இந்த நற்செய்தி நம்மை வந்தடைந்திருப்பதால், மறைபரப்புப்பணி என்றால் என்ன என்பது குறித்தும், மறைபரப்புப்பணியாளர் யார் என்பது குறித்தும், நாம் 'மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மறைபரப்புப்பணியைப் பற்றிய நம் பார்வையைத் தெளிவாக்க, அக்டோபர் 16, சனிக்கிழமை, ஹெயிட்டி நாட்டில் நடந்த ஆள் கடத்தல் நிகழ்வைக் குறித்த ஒரு செய்தி உதவியாக உள்ளது.

"17 அமெரிக்க மறைபரப்புப்பணியாளர்கள் ஹெயிட்டியில் கடத்தப்பட்டனர்" என்று இச்செய்திக்கு வழங்கப்பட்டத் தலைப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. இந்தத் தலைப்பை வாசித்ததும், கடத்தப்பட்ட 17 பேரும், மறைப்பரப்புப்பணியாற்றும் போதகர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.

பொதுவாகவே, 'மறைபரப்புப்பணி' என்றதும், அதை ஆற்றக்கூடியது, அருள்பணியாளர்கள், துறவியர், கிறிஸ்தவ சபைகளின் போதகர்கள் என்ற எண்ணமே மனதில் எழுகிறது. ஆனால், ஹெயிட்டியில் கடத்தப்பட்ட மறைபரப்புப்பணியாளர்களைப் பற்றிய விவரங்களை வாசிக்கும்போது, மறைபரப்புப்பணியை நாம் அனைவரும் ஆற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்ற தெளிவு கிடைக்கிறது.

கடத்திச் செல்லப்பட்டுள்ள 17 பேரில், 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள், மற்றும் 5 பேர் குழந்தைகள். கடத்தப்பட்ட அக்குழுவிலிருந்த ஆண், பெண், குழந்தை அனைவரையும் ஒட்டுமொத்தமாக 'மறைபரப்புப்பணியாளர்கள்' என்று செய்திகள் கூறியுள்ளன. வசதியைக் கருதி, ஊடகங்கள் இக்குழுவினருக்கு ஒரே அடையாளத்தை வழங்கியிருந்தாலும், ஆழமாக சிந்தித்தால், கிறிஸ்தவ மறையில், மறைபரப்புப்பணியாளரின் இலக்கணம் இதுதான் என்பதை புரிந்துகொள்ளலாம். உலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும், நமக்கே உரிய வழிகளில், மறைபரப்புப்பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பது, நாம் பெறவேண்டிய முதல் பார்வைத் தெளிவு.

அடுத்து, இக்குழுவினர், ஹெயிட்டி நாட்டில் செய்துவந்த பணி என்ன என்பதை இச்செய்தியில் வாசிக்கும்போது, மறைபரப்புப்பணியைப்பற்றி இன்னும் தெளிவான பார்வையை நாம் பெறுகிறோம்.

மறையைப் பரப்புதல் என்றதும், ஆலயங்களிலும், மேடைகளிலும் நின்று பிரசங்கம் செய்து, அதன் பயனாக, மக்களை மனம் மாற்றுவதை நாம் எண்ணிப்பார்க்கக் கூடும். இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், மறைபரப்புப்பணியை, பிரசங்கம் செய்தல், மக்களை மதமாற்றம் செய்தல் என்ற கோணத்திலிருந்து சிந்திப்பதால், பிரச்சனைகள் எழுகின்றன.

ஹெயிட்டி நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட 17 மறைப்பரப்புப்பணியாளர்கள் செய்துவந்தது, பிரசங்கம் வைப்பது, மக்களை மதம் மாற்றுவது போன்ற பணிகள் அல்ல. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஹெயிட்டி நாட்டை நிலைகுலையச் செய்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டித்தருவது, அவர்களது நலவாழ்வைப் பராமரிப்பது, குழைந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்ற பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் 16, சனிக்கிழமை, ஹெயிட்டியின் மிக ஏழ்மைப்பட்ட ஒரு பகுதியில், இக்குழுவினர் கட்டியிருந்த ஓர் அனாதை இல்லத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, இவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவர்களைக் கடத்திச் சென்ற 400 Mawozo என்ற குழுவைச் சார்ந்தோர், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், கத்தோலிக்க அருள்பணியாளர்களையும், துறவியரையும் கடத்திச் சென்று, ஒரு சில வாரங்களுக்குப்  பின் விடுதலை செய்தனர். ஹெயிட்டி நாட்டில் கடத்தப்பட்டிருக்கும் 17 மறைபரப்புப்பணியாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி, மீண்டுவரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் ஞாயிறு சிந்தனையைத் தொடர்வோம்.

மறைபரப்புபணியாளரையும், மறைபரப்புப்பணியையும் குறித்து ஓரளவு தெளிவான பார்வை பெற்றுள்ள நாம், தொடர்ந்து, இந்த ஞாயிறன்று நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள, பார்வை பெறும் புதுமையைக் குறித்து சிந்திக்கும்போது, பெயர் சொல்லி அழைப்பது,  தெளிவான பார்வை பெறுவது என்ற இரு உண்மைகளை சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு இயேசு பார்வை தந்த புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மாற்கு மட்டும், பார்வை இழந்த பிச்சைக்காரருக்குப் பெயர், முகவரி எல்லாம் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய புதுமைகளில், பிச்சைக்காரர் ஒருவருக்கு மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இயேசு கூறிய உவமைகளில் பிச்சையெடுத்துவந்த இலாசருக்கு மட்டுமே பெயர் தரப்பட்டுள்ளது (லூக்கா 16:19-31) கவனத்திற்குரியது.

மனிதராய் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும், பிறந்த  சில நாட்களில் கிடைக்கும் ஒரு முக்கிய அடையாளம், நமக்கு வழங்கப்படும் பெயர். இந்த ஓர் அடையாளத்தை மட்டும் நாம் வாழ்நாளெல்லாம் கொண்டிருக்கிறோம். நம்மை வந்தடையும் பிற அடையாளங்கள், வரும், போகும்... ஆனால், நமது பெயர், நமக்குக் கிடைக்கும் முதல் மரியாதை.  நம்முடன் என்றும் தங்கும் மரியாதை. அவரவருக்குரிய இந்த மரியாதையைத் தருவதில்தான் நமக்குள் எத்தனை வேதனை தரும் வேறுபாடுகள்! வேறு பல தேவையற்ற எண்ணங்களால், நமது மனக்கண்கள் பார்வை இழக்கும்போது, ஒருவருக்கு உரிய அடிப்படை மரியாதையையும் வழங்க நாம் மறுத்துவிடுகிறோம்.

பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள். ஒருவருக்குரிய உண்மையான மதிப்பை வழங்கும்வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம் பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் இருள் சூழ்ந்த பக்கம்.

ஒரு சிலருக்கு, அவர்கள் செய்யும் தொழில், அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில், உயர்வான தொழில் என்று இவ்வுலகம் கூறினால், அந்தத் தொழிலுக்குரிய அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவத் தொழிலில் இருப்பவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது கூடுதலான மரியாதை. இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்றெல்லாம் அழைக்கும்போது சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும் தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதைவிட மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். இவைபோன்ற அடைமொழிகள், ஒருவரை, தலைநிமிர்ந்து நிற்கவைக்கும். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.

இனி சிந்திக்க இருப்பது, இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்கள் சமுதாயத்திற்காக ஆற்றும் மிக முக்கியமான தொழிலுக்கு மதிப்பளிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளாததால், இவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அடைமொழிகளைப் பயன்படுத்தும்போது அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எல்லாருமே, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களுக்கு ஆளானவர்கள். இந்திய சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் மற்றொரு சாபம், சாதி முறைகள். இதன் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர்சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.

பார்வை பெறவேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடலளவில் பார்வை பெற விழைந்தார், பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில், அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார். இயேசுவை அகக்கண்களால் "தாவீதின் மகன்" என்று அவர் ஏற்கனவே கண்டிருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு, முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, ஆனால் உள்ளத்தளவில் தெளிவானப் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.

கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் இருந்த ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில் மிக அழகானவற்றை, கண்ணால் காணமுடியாது, தொட்டும் உணரமுடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெறவேண்டும். சரியான பார்வை பெறவேண்டும். சன்னலை மையப்படுத்தி சொல்லப்படும் ஒரு கதை இந்த உண்மையை விளக்குகிறது. கணவனும், மனைவியும் ஒரு வீட்டில் புதிதாக குடியேறினர். தினமும் அந்தப் பெண்மணி, காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே, அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்து, "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." என்று கணவனிடம் முறையிட்டார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு" என்று வியந்து பாராட்டினார்.

கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுல ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னாராம்.

பார்வை பெறவேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெறவேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான அன்பை, நம் வாழ்வின் வழியே பறைசாற்றும் மறைபரப்புப்பணியாளர்களாய் வாழவும், இறையருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2021, 10:54