தேடுதல்

“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். ” (மாற்கு 10:43) “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். ” (மாற்கு 10:43) 

பொதுக்காலம் 29ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

சிலுவையைப் பற்றி இயேசு பேசிமுடித்ததும், சிம்மாசனத்தைப் பற்றி இரு சீடர்கள் பேசினர். சிம்மாசனத்திற்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

கடந்த வாரம் அக்டோபர் 9,10 ஆகிய இரு நாள்கள், வத்திக்கானில் கூடியிருந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரோடும் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் 16வது ஆயர்கள் மாமன்றத்தைத் துவக்கிவைத்தார். இதுவரை நடைபெற்ற மாமன்றங்கள், பொதுவாக, வத்திக்கானில், குறிப்பிட்ட சில வாரங்கள், உலக ஆயர்களின் பிரதிநிதிகள் கூடிவந்து, பல்வேறு கருத்துக்களை விவாதிக்கும் கூட்டங்களாக நடைபெற்றுவந்தன. இம்முறையோ, இந்த மாமன்றப்பணிகள், தலத்திருஅவைகளில், மக்களின் பங்கேற்புடன் பெருமளவு நடைபெற்று, அவற்றின் இறுதி நிகழ்வாக, வத்திக்கான் கூட்டம் நடைபெறவேண்டும் என்ற எண்ணத்துடன், 2021 அக்டோபர் துவங்கி, 2023 அக்டோபர் முடிய நடைபெறும் ஈராண்டு முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

வத்திக்கானில் சென்ற வார இறுதியில் ஆரம்பமான இம்முயற்சிகளின் அடுத்த முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 16, 17 ஆகிய இருநாள்கள், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், 16வது உலக ஆயர்கள் மாமன்ற கூட்டங்கள் ஆரம்பமாகின்றன. கத்தோலிக்கத் திருஅவையானது, இறைமக்களின் கூட்டமைப்பு என்ற எண்ணத்தை நம் உள்ளங்களில் ஆழப்பத்திக்க, இவ்விரு ஆண்டுகளும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும், இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்தவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்குவோம்.

'மாமன்றம்' என்று தமிழில் நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல், 'Synod'. இச்சொல்லின் அடிப்படையான பொருள், 'இணைந்து நடத்தல்'. இவ்வுலக வாழ்வு ஒரு பயணம் என்பதையும் அப்பயணத்தில் நாம் அனைவரும் 'தான்' என்ற அகந்தையுடன் தனித்தனியே நடக்காமல், இணைந்து நடப்பது ஒன்றே நம்மை மீட்பின் பாதையில் அழைத்துச்செல்லும் என்பதையும், நாம் மேற்கொண்டுள்ள 'இணைந்து நடத்தல்' முயற்சி நமக்கு சொல்லித்தருவதாக!

19ம் நூற்றாண்டில் (1819-1900) வாழ்ந்த ஆங்கிலேய எழுத்தாளர் ஜான் இரஸ்கின் (John Ruskin) அவர்கள், ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவரின் வாழ்வுப்பயணமும் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை ஓர் அழகிய உருவகத்தின் வழியே கூறியுள்ளார். அந்த உருவகம், நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்க உதவியாக உள்ளது.

ஜான் இரஸ்கின் அவர்கள், ஒரு நாள், நண்பர் ஒருவருடன், தன் வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். பகலவன் மறைந்து, இருள் சூழ்ந்துவந்த நேரம் அது. அவரது வீட்டுக்குமுன் அமைந்திருந்த ஒரு குன்றில், தெரு விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சுடர்விடத் துவங்கின. மின்சக்தி இல்லாத காலம் என்பதால், தெரு விளக்குகளை ஏற்றியபடி ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவர் யார் என்று, இரஸ்கின் அவர்கள் வீட்டிலிருந்து பார்க்கமுடியவில்லை. ஆனால், அவர் கையில் ஏந்திச் சென்ற விளக்கும், அவர் தெருவில் ஏற்றிவைத்த விளக்குகளும் இருளில் ஒளிர்ந்தன. அதைக் கண்ட ஜான் இரஸ்கின் அவர்கள், தன் நண்பரிடம், "தெருவிளக்கை ஏற்றும் அவர்தான், உண்மையான கிறிஸ்தவருக்கு எடுத்துக்காட்டு. அவர் யாரென்று நம்மால் பார்க்கமுடியவில்லை என்றாலும், அவர் செல்லுமிடத்தையெல்லாம் ஒளிமயமாக மாற்றுகிறார். அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்களும், தங்களை, வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை ஒளிமயமாக்குகின்றனர்" என்று கூறினார்.

தங்கள் மீது ஒளி வட்டம் (spot light) விழாமல், அதே நேரம், பிறர் வாழ்வில் ஒளியேற்றியபடி, வாழ்க்கை எனும் வீதியை ஒளிமயமாக்குவதே, கிறிஸ்தவர்களின் வாழ்வுப்பயணம் என்று, ஜான் இரஸ்கின் போன்றோர் கூறியுள்ள சிந்தனைகளுக்கு எதிர்மாறான சிந்தனைகளை இவ்வுலகம் சொல்லித்தருவதை நாம் அறிவோம். தாங்கள் எங்கு சென்றாலும், ஒளி வட்டம் தங்களை மட்டுமே சூழ்ந்திருக்கவேண்டும், அரியணைகள் தங்களுக்காகக் காத்திருக்கவேண்டும், மாலைகளும், மரியாதைகளும், தங்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற வேட்கையைத் தூண்டிவிடும், இன்றைய உலகப்போக்கிற்கு சவால்விடும் வண்ணம், இன்றைய ஞாயிறு வாசகங்கள் அமைந்துள்ளன.

மக்களை நேர்மையாளர்களாக மாற்ற, “ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்” என்று இறைவாக்கினர் எசாயா கூறுவதை, இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 53, 10-11) கேட்கிறோம்.

‘ஆண்டவரின் துன்புறும் ஊழியனாக’ தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, தான் எவ்வாறு சிலுவை மரணத்திற்கு உள்ளாவோம் என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு கூறியதையும், அதைப் புரிந்துகொள்ளாமல், சீடர்கள் சுயநலம் நிறைந்த எண்ணங்களில் உலவி வந்தததையும் நற்செய்தியாளர் மாற்கு, மூன்று முறை குறிப்பிட்டுள்ளார்.

துன்புறும் ஊழியனாக, தான் சந்திக்கப்போகும் துன்பங்களையும், மரணத்தையும் குறித்து, இயேசு, தன் சீடர்களிடம், முதல் முறை, பேசிய வேளையில், பேதுரு அவரைத் தனியே அழைத்து கடிந்துகொண்டார் என்பதையும், அவரிடம் இயேசு, "என் கண் முன் நில்லாதே சாத்தானே!" (மாற்கு 8:33) என்று கூறியதையும், பொதுக்காலம், 24ம் ஞாயிறு நற்செய்தியில் கேட்டோம் (மாற்கு 8:27-35). இரண்டாம் முறை, இயேசு, தன் மரணத்தைக் குறித்து பேசியபோது, அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், யார் தங்களுக்குள் பெரியவர் என்ற விவாதத்தில் சீடர்கள் ஈடுபட்டனர் என்பதை, பொதுக்காலம் 25ம் ஞாயிறு நற்செய்தியில் கேட்டோம் (மாற்கு 9:30-37). இயேசு மூன்றாம் முறையாக, தன் நெருங்கிவரும் மரணத்தைக் குறித்து பேசியதைத் தொடர்ந்து, உடனடியாக, செபதேயுவின் மக்கள், யாக்கோபும், யோவானும், இயேசுவுக்கு இருபுறமும், அரியணையில் அமரும் வாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பிப்பதை இன்றைய நற்செய்தியாகக் கேட்கிறோம். (மாற்கு 10:35-45)

சிலுவையைப் பற்றி இயேசு பேசிமுடித்ததும், சிம்மாசனத்தைப் பற்றி இரு சீடர்கள் பேசினர். சிலுவை, சிம்மாசனம் இரண்டும் அரியணைகள். சிம்மாசனம் என்ற அரியணைக்காக உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு. சிலுவையில் உயிரைத் தந்தவர்களும், உயிரை எடுத்தவர்களும் உண்டு.

இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த இரு சீடர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை” (மாற்கு 10:38) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் சொற்கள், இன்றையத் தலைவர்கள் பலருக்கு, பொருத்தமான சொற்கள். அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும், தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், நம்மை, அதிர்ச்சியிலும், அவமானத்திலும், ஆழ்த்துகின்றன. இவர்கள் அறியாமல் செய்கிறார்களா, அல்லது மதியிழந்து செய்கிறார்களா, என்ற கேள்வியை எழுப்புகின்றன. மரியாதை, அதிகாரம் என்பனவற்றை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள், அறியாமையில் செய்கிறார்கள் என்று, இயேசு பெருந்தன்மையுடன் சொல்கிறார். இந்த அறியாமையின் உச்சக்கட்டமாக, இயேசுவை, இத்தலைவர்கள், சிலுவை என்ற அரியணையில் ஏற்றியபோது, மீண்டும் இயேசு, 'இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று தந்தையிடம் வேண்டியது, நம் நினைவுக்கு வருகிறது.

செபதேயுவின் மக்களான யாக்கோபும், யோவானும், இரு அரியணைகளில் அமர்வதற்கு விடுத்த இந்த விண்ணப்பம், மற்ற சீடர்களுக்குக் கோபத்தை மூட்டியது. பேராசை, பொறாமை, கோபம் என்ற இந்தச் சங்கிலித்தொடர், தன் சீடர்களை, கட்டிப்போடும் ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்த இயேசு, உண்மையான மதிப்பு என்றால் என்ன, மரியாதை பெறுவது எவ்விதம், என்ற பாடங்களை அவர்களுக்குச் சொல்லித்தருகிறார். “உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்” (மாற்கு 10:43-44) என்று இயேசு சொல்லித்தரும் பாடம், நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. இயேசுவின் இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு பணியாளர் தலைமைத்துவம் (Servant Leadership) என்ற கருத்து, தற்போது, மேலாண்மைப் பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது.

இயேசு சொல்லித்தந்த பணியாளர் தலைமைத்துவம் என்ற பாடத்தை வாழ்ந்துகாட்டியத் தலைவர்களை வரலாற்றில் சந்திக்கிறோம். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதை இது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரம். ஒரு நாள், அரசுத்தலைவர், ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், சாதாரண உடையணிந்து, தன் குதிரையில் ஏறிச்சென்றார். போகும் வழியில், ஒரு தளபதியின் குதிரைவண்டி சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச் சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று கொண்டிருந்தனர். தளபதியோ, அருகில் நின்று, அவர்களுக்கு கட்டளைகள் கொடுத்துக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற வாஷிங்டன் அவர்கள், தளபதியிடம், "ஏன், நீங்களும் இறங்கி உதவிசெய்தால், வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன் அவர்கள், குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சிசெய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர், அவர், தளபதியிடம், "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உங்கள் அரசுத்தலைவரைக் கூப்பிடுங்கள். வந்து உதவிசெய்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவர், அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.

இறையியல் ஆசிரியராகப் பணியாற்றும் ஜான் ஃபுல்லன்பாக் (John Fullenbach) என்ற அருள்பணியாளர், தன் வாழ்வில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். ஜான் அவர்கள், கொல்கத்தாவில், அன்னை தெரேசா அவர்கள் நடத்திவந்த ஓர் இல்லத்தில், பணிசெய்யச் சென்றிருந்தார். கொல்கத்தாவில் பணியை ஆரம்பித்த முதல் நாள், ஓர் அருட்சகோதரியுடன், கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதியில் அவர்கள் நடந்துகொண்டிருந்தபோது, உடல் நலம் மிகவும் நலிந்த ஒரு வயதானப் பெண்மணி அவர்களிடம், "தயவுசெய்து என் வீட்டுக்கு வாருங்கள். என் கணவர் சாகக்கிடக்கிறார்" என்று வேண்டினார். அருள்பணி ஜான் அவர்களும், அந்தச் சகோதரியும், மிகவும் அழுக்காய் இருந்த ஒரு குடிசைக்குள் சென்றனர். அங்கே, பலநாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரைக் கண்டனர். இவ்வளவு மோசமான நிலையில் ஒரு மனிதர் இருக்கமுடியுமா என்று, ஜான் அவர்கள், அதிர்ச்சியில் உறைந்துநின்றார். அவ்வளவு நாற்றம் அங்கே. அம்மனிதரை, தங்கள் இல்லத்திற்கு கொண்டுசெல்லலாம் என்று சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்கமுயன்றபோது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த மனிதர், ஜான் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம் ஜானைத் தாக்கின. ஓரளவு சமாளித்துக்கொண்டு, அந்த மனிதரை அன்னையின் இல்லத்திற்கு கொண்டுபோய் சேர்த்தார். தொடர்ந்து அவர் அங்கே தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள், பல உண்மைகளைச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.

இவ்விதம் பணியாற்றிய புனித அன்னை தெரேசாவைப் போல், எத்தனையோ தன்னலமற்ற பணியாளர்கள், குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்த பணியாளர்கள், மக்களின் மனங்களில் அரியணை கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாறாக, அரியணை ஏறுவதற்காக, மக்களைப் படிகற்களாகப் பயன்படுத்திய பல தலைவர்களை, வரலாறு மறந்துவிட்டது, மக்களும் மறந்துவிட்டனர்.

சிம்மாசனம், சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம். நாம் மட்டும் சுகம் காணலாம் என்று, அரியணை மீது ஏறி அமர்ந்தால், சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை மதிக்கமாட்டார்கள். நிச்சயம், நேசிக்கமாட்டார்கள். ஆனால், பலருக்கும் சுகம் தருவதற்கு, சிலுவை என்ற அரியணையில் ஏறினால், பல நூறு ஆண்டுகளுக்கும், மக்கள் மனதில் மதிப்போடும், அன்போடும் அரியணை கொள்ளமுடியும்.

சிம்மாசனமா? சிலுவையா? தெளிவாக சிந்தித்து, தெரிவுசெய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2021, 13:36