தேடுதல்

Vatican News
திருத்தந்தை இரண்டாம் உர்பான் திருத்தந்தை இரண்டாம் உர்பான் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் உர்பான்

தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 6 ஆண்டுகள், திருத்தந்தைக்குரிய இல்லத்தில் அமர முடியாமல் இத்தாலிக்குள் பல்வேறு இடங்களில் அடைக்கலம் தேடி அலைந்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

 திருத்தந்தை பதவியே வேண்டாம் எனப் போராடியும், வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, பின்னர் திருத்தந்தையாகியும் தொடர்ந்து பணிபுரிய முடியாமல் மன்னராலும், எதிர்திருத்தந்தையாலும் உரோம் நகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்தபின், 1087ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ந்தேதி உயிரிழந்த திருத்தந்தை 3ம் விக்டருக்குப்பின் பணியேற்றார் திருத்தந்தை இரண்டாம் உர்பான். இவர் Otto என்ற இயற்பெயரைக் கொண்டவர்.

      பிரான்ஸ் நாட்டின் Champagne மாவட்டத்தில் 1042ம் ஆண்டு பிறந்த Otto, கர்த்தூசியன் சபையை பின்னர் உருவாக்கிய புனித Brunoவின்கீழ் கல்வி பயின்று, தலைமை திருத்தொண்டரானார். ஏறக்குறைய 1070ம் ஆண்டு குளூனி சபையில் இணைந்து, புனித Hugh அவர்களின் கீழ் துறவியானார். அங்கு துறவு இல்ல அதிபராகவும் இருந்தபின், புனித Hugh அவர்களாலேயே, திருத்தந்தை ஏழாம் கிரகரிக்கு உதவிபுரிய அனுப்பப்பட்டார். திருஅவையை பல்வேறு வழிகளில் சீர்திருத்த விரும்பிய திருத்தந்தைக்கு பக்கப்பலமாக நின்று உதவியவர் Otto. இவரை 1078ம் ஆண்டு கர்தினாலாகவும் தன் முதன்மை ஆலோசகராகவும் நியமித்தார் திருத்தந்தை ஏழாம் கிரகரி. 1082ம் ஆண்டு முதல் 85 வரை ஜெர்மனி, மற்றும் பிரான்சில் திருப்பீடப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார் கர்தினால் Otto.  

  ஒரு முறை, 1083ம் ஆண்டு இவர் உரோம் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பேரரசர் நான்காம் ஹென்றியால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். ஜெர்மனி மற்றும் பிரான்சில் திருப்பீடப் பிரதிநிதி பணியை நிறைவுசெய்து 1085ல் உரோம் திரும்புவதற்கு முன்னரே, திருத்தந்தை ஏழாம் கிரகரி இறந்து, மூன்றாம் விக்டர் தேர்வு செய்யப்பட்டார். முதலில், மூன்றாம் விக்டர் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டதை கர்தினால் Otto எதிர்த்தார். அவர் மீதுள்ள கோபத்தினால் அல்ல, மாறாக, விருப்பப்படாதவரை கட்டாயப்படுத்தி பதவியை அவர்மேல் திணித்ததை எதிர்ப்பதற்காக. திருத்தந்தை மூன்றாம் விக்டர் மீதான நல்லெண்ணத்தினாலேயே அவ்வாறு செய்தார் அவர். இதே திருத்தந்தை மூன்றாம் விக்டர் அவர்கள் காலமானபோது, அனைத்து ஆயர்கள் மற்றும், கர்தினால்களின் பார்வையும் கர்தினால் Otto மேலேயே திரும்பியது. ஏனெனில், முந்தைய திருத்தந்தை 7ம் கிரகரியும், மூன்றாம் விக்டரும் கர்தினால் Otto மீது பெருமதிப்பு வைத்திருந்தது அனைவருக்கும் தெரியும். கர்தினால் Ottoவும் திருஅவைத் தந்தையர்களின் விருப்பத்தை ஏற்று, இரண்டாம் உர்பான் என்ற புதுப்பெயருடன் திருத்தந்தையானார்.

   உரோமுக்கு வெளியே Terracinaவில் கூடிய ஆயர் அவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் 1088ம் ஆண்டு மார்ச் மாதம் 12ந்தேதி தேர்வுசெய்யப்பட்ட திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள், தற்போது உரோமுக்குள் நுழைவது பிரச்சனையானது. ஏனெனில், உரோமின் தலைமைப்பீடத்தில் எதிர்திருத்தந்தை Guibert, பேரரசரின் துணையுடன் அமர்ந்திருந்தார். புதிய திருத்தந்தைக்கு நார்மானியர்களும், பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஆட்சியாளர் Matildaவும்தான் உதவமுடியும். ஆனால், அவர்களோ உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அரசியல் ஆட்சியாளர்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கி, உதவியைப் பெற தென் பகுதியின் சிசிலி தீவு நோக்கி பயணமானார் புதிய திருத்தந்தை இரண்டாம் உர்பான். இரு ஆட்சியாளர்களிடையே அமைதி ஏற்பட்டதால், திருத்தந்தையும் அவர்கள் உதவியுடன் 1088ம் ஆண்டு நவம்பர் மாதம் உரோம் நகர் புகுந்தார். ஆனால், புனித பேதுரு பெருங்கோவிலையோ, திருத்தந்தையர்களின் இலாத்தரன் இருப்பிடத்தையோ இவர் தனக்குக்கீழ் கொண்டுவர முடியவில்லை. உரோம் நகரில் டைபர் நதியின் நடுவில் ஒரு சிறு தீவுபோல் காணப்படும் புனித பர்த்தலோமேயோ கட்டடத்தில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, இரு திருத்தந்தையர்களின் படைவீரர்கள் தங்களுக்கிடையே 3 நாட்கள் போரிட்டனர். இதில் எதிர்திருத்தந்தை Guibert தோல்வியடைந்து, உரோம்நகரை விட்டு வெளியேறினார். திருத்தந்தை இரண்டாம் உர்பானுக்கு ஓரளவு சுதந்திரம் கிட்டியது.

  இதற்கிடையில் 1089ம் ஆண்டு இத்தாலியின் தென் பகுதிக்குச் சென்று பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்துவிட்டு உரோம் நகர் திரும்பினார் திருத்தந்தை. ஆனால் அமைதி அதிக காலம் நீடிக்கவில்லை. திருத்தந்தைக்கு ஆதரவளித்த Matilda அரசு வட இத்தாலியில் பேரரசர் ஹென்றியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடனேயே, உரோம் மக்கள் பேரரசருக்கு ஆதரவளித்து, எதிர்திருத்தந்தை Guibertஐ உரோமுக்கு வரும்படி அழைத்தனர். ஏனெனில், பேரரசருக்கு ஆதரவானவர் எதிர் திருத்தந்தை. ஆகையால், எதிர்திருத்தந்தை அந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை கோலாகலமாக புனித பேதுரு பெருங்கோவிலில் கொண்டாட, உண்மை திருத்தந்தையோ உரோம் எல்லைச் சுவர்களுக்கு வெளியே தங்க வேண்டியதாகியது.

   இத்தோடு எல்லாம் முடியவில்லை. மூன்றாண்டுகள் இத்திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள், தென் இத்தாலியில் பல்வேறு இடங்களில் அடைக்கலம் தேடி வாழவேண்டியதாகியது. இவ்வேளையில் Matilda அவர்கள், Canossa எனுமிடத்தில் பேரரசர் ஹென்றியின் படைகளை தடுத்து நிறுத்தினார். பேரரசருக்கு அது பெரும் வீழ்ச்சியானது. அதுமட்டுமல்ல, பேரரசரின் மகன் Conrad, பேரரசரின் பாவச் செயல்களைவிட்டு விலகி, Matildaவின் துருப்புகளோடு இணைந்துகொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட, பேரரசரின் எதிர்துருப்புகள் Conradஐ மிலானின் மன்னராக முடிசூட்டினர். இதன் வழியாக, பேரரசரின் பலம் குறைந்தது. திருத்தந்தை இரண்டாம் உர்பானும் உரோம் நகருக்குத் திரும்ப வழிபிறந்தது.

   உரோம்நகர் திரும்பிய திருத்தந்தை என்னென்ன சவால்களை எதிர்நோக்கினார், எதிர் திருத்தந்தை எப்படி சமாளிக்கப்பட்டார் என்பது குறித்து வரும் வாரம் காண்போம்

27 October 2021, 14:30