தேடுதல்

செபிக்கும் குழந்தைகள் செபிக்கும் குழந்தைகள் 

போலந்தில் சிறார் மறைபரப்புப்பணி மாமன்றம் நோக்கி...

சிறார் தங்களின் மறைபரப்புப்பணி ஆர்வத்தைக் கண்டுணரவும், இறைவேண்டல், மற்றும், தியாகச்செயல்கள் வழியாக, உலகெங்கும் வாழ்கின்ற தங்களின் வயதையொத்த சிறாருக்கு உதவும் மனப்பான்மையைத் தூண்டவும் POSI உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, உலக அளவில் தலத்திருஅவைகள், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஈராண்டுத் தயாரிப்புப் பணிகளைத் துவக்கியுள்ளவேளை, சிறார் மறைப்பணியாளர் பாப்பிறை சபையின் (POSI) போலந்து நாட்டுக் கிளை, அந்த தயாரிப்பில் சிறாரையும் ஈடுபடுத்தும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

இச்சபை, பாப்பிறை சிறார் சபையாக அங்கீகரிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு 2022ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுதற்கு சிறாரைத் தயார்படுத்தும் முயற்சியின் ஒருகட்டமாக, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புக்களில் அவர்களை ஈடுபடுத்தும் பணிகள், போலந்து தலத்திருஅவையில் துவக்கப்பட்டுள்ளன என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

இந்த நூறாம் ஆண்டு யூபிலிக்கொண்டாட்டத்தில், திருத்தந்தையோடும், உலகெங்கிலும் இருக்கின்ற சிறாரோடும் தாங்களும் ஒருங்கிணைந்துள்ளோம் என்ற உணர்வை போலந்து சிறாரில் உருவாக்குவதற்கு, "மறைபரப்புப்பணி மாமன்றம்" என்ற தலைப்பில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

போலந்து நாட்டின் வார்சா நகரிலுள்ள கர்தினால் Stefan Wyszyński பல்கலைக்கழக வளாகத்தில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, அந்நாட்டு சிறாரின் "மறைபரப்புப்பணி மாமன்றம்" என்ற நிகழ்வு சிறப்பிக்கப்படும் என்று, போலந்து சிறார் மறைப்பணியாளர் பாப்பிறை சபையின் இயக்குனர் அருள்சகோதரி மோனிக்கா அறிவித்தார். (Fides)

சிறார் தங்களில் இருக்கின்ற மறைபரப்புப்பணி ஆர்வத்தைக் கண்டுணரவும், இறைவேண்டல், மற்றும், தியாகச்செயல்கள் வழியாக, உலகெங்கும் வாழ்கின்ற தங்களின் வயதையொத்த சிறாருக்கு உதவும் மனப்பான்மையைத் தூண்டவும், POSI எனப்படும் சிறார் மறைப்பணியாளர் பாப்பிறை சபை அல்லது பாலர் சபை உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2021, 15:41