தேடுதல்

கர்தினால் சார்ல்ஸ் மாங் போ. கர்தினால் சார்ல்ஸ் மாங் போ. 

தீமைகள் கூத்தாடும்போது, மௌனம் காப்பது குற்றமாகும்

தீமைகளுக்கு எதிராக மியான்மாரின் கத்தோலிக்கர்கள் எழுப்பும் குரல், பகைமையின் குரலாக அல்லாமல், அந்நாட்டின் மீது கொண்ட அன்பின் குரலாக இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு சவால்களை சந்தித்துவரும் மியான்மார் நாட்டில், கத்தோலிக்கர்கள் அனைவரும், நாட்டிற்காக குரல் எழுப்பவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ.

தீமைகளுக்கு எதிராக மியான்மாரின் கத்தோலிக்கர்கள் எழுப்பும் குரல், பகைமையின் குரலாக அல்லாமல், அந்நாட்டின் மீது கொண்ட அன்பால் எழுப்பப்பட்டதாக இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்த கர்தினால் போ அவர்கள், ஒன்பது மாதங்களாக கடும் அடக்குமுறைகளைச் சந்தித்துவரும் மியான்மாரில், மக்கள் தீமைக்கு எதிராக குரலை எழுப்பவேண்டிய நேரம் வந்துள்ளது என உரைத்தார்.

தீமைகள் தெருக்களில் கூத்தாடும்போது, மௌனம் காப்பது குற்றமாகும் என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் போ அவர்கள், ஆன்மீகக் குருடாகச் செயல்பட்டு வன்முறைகளின் பிறப்பிடமாக இருக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்பவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என உரைத்தார்.

கிறிஸ்துவைப்போல் மியான்மார் மக்களும் ஐந்து விதமான காயங்களை அனுபவித்துவருகிறார்கள், அவை, கோவிட் பெருந்தொற்று, மோதல்களும் குடிபெயர்தல்களும், பொருளாதார வீழ்ச்சி, காலநிலை பேரழிவு, மற்றும் நெருக்கடிமேல் நெருக்கடி எனவும் கவலையை வெளியிட்டார் கர்தினால் போ.

மியான்மார் நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், தங்கள் நடவடிக்கையை உடனே நிறுத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், யாங்கூன் பேராயர் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 14:45