தேடுதல்

மருத்துவரின் சேவை மருத்துவரின் சேவை 

கருணைக் கொலைக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் மறுப்பு

நோயாளிகளின் தற்கொலைக்கு உதவும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், பொதுவாக, நோயாளிகள், மருத்துவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் உதவ வழிச்செய்யும் புதிய சட்டம் குறித்த முன்னேற்பாடுகள், வரும் வாரம் இங்கிலாந்து நாட்டின் பிரபுக்கள் அவையில் இடம்பெறவுள்ள நிலையில், அத்தகைய சட்ட அனுமதி வழங்கப்பட்டால், அந்நோயாளிகளுக்கு உதவ மறுப்போம் என, அந்நாட்டின் 1700 மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

இந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தின் மருத்துவ மற்றும் சமூக அக்கறை அமைச்சர் Sajid Javid அவர்களுக்கு அனுப்பியுள்ளக் கடிதத்தில், மருத்துவப்பணியாளர்கள் என்ற முறையில், தங்களின் பணி, நோயாளிகளை காப்பதாகுமே ஒழிய, கொல்வதல்ல எனவும், தற்கொலைக்கு உதவும் சட்டம் குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.

வாழ்வைப் பாதுகாப்பது என்ற நிலையிலிருந்து வாழ்வைப் பறிப்பது என்ற நிலைக்கு மாறுவது என்ற பெரிய விடயத்தை எளிதாக எண்ணிவிடக்கூடாது என தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இம்மருத்துவக்குழு, மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதால், அனைத்து நாகரீகமான சமுதாயங்களிலும், கொலை புரிவது, பெரும் குற்றமாகவே கருதப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

தற்கொலைக்கு உதவுவதை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கும் சட்டத்தை எந்த அரசும் செயல்படுத்தக்கூடாது எனக் கூறும் அம்மருத்துவக்குழு, இத்தகையச் சட்டங்கள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, கனடா நாடு, கடந்த ஐந்தாடுகளில் கண்டு வந்துள்ளது என, தங்கள் கடிதத்தில், மேலும் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளின் தற்கொலைக்கு உதவும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், பொதுவாக,  நோயாளிகள், மருத்துவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படுவதுடன், சக்தியற்றவர்கள் தவறாக நடத்தப்படவும் வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளனர், 1700 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய இந்த குழுவினர்.

2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அவ்வாண்டில் தற்கொலைச் செய்தவர்களுள், பாதிக்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பவில்லை என்ற காரணத்தைக்கூறி தற்கொலை செய்துகொண்டதாகவும், 7.4 விழுக்காட்டினர், பெருளாதார அச்சத்தினால், உயிர்களை மாய்த்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

பெல்ஜியம் நாட்டில், 60 நோயாளிகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில், அவர்களின் விருப்பம் கேட்கப்படாமலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர், அவர்களின் பயனற்ற நிலையை முன்னிட்டு கருணைக்கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருத்துவர்கள், தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2021, 15:20