தேடுதல்

கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo 

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சத்துணவு கொடுங்கள்

இந்தோனேசியாவில், பெருந்தொற்றால் ஏறத்தாழ 2 கோடியே 94 இலட்சம் நிரந்தர மற்றும், பகுதிநேரத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும், தேவையில் இருப்போருடன் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுமாறு இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராயர் கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அக்டோபர் 16, கடந்த சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக உணவு நாளுக்கென்று, “அதிகமதிகமாக நன்றிகூருங்கள் மற்றும், சத்துணவைப் பகிர்வதன் வழியாக, ஓர் ஆசீர்வாதமாக இருங்கள்” என்ற தலைப்பில், கர்தினால் Hardjoatmodjo அவர்கள் வெளியிட்ட நான்கு பக்க மேய்ப்புப்பணி அறிக்கை, ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் 66 பங்குத்தளங்களிலும் அக்டோபர் 17 இஞ்ஞாயிறு திருப்பலியில் வாசிக்கப்பட்டது.

உதவிகள் அதிகம் தேவைப்படும் நம் அயலவர்கள், மற்றும் நம் சகோதரர், சகோதரிகளை அன்புகூருகிறோமா, அவர்களின் சுமைகளை இலகுவாக்க நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ள கர்தினால் Hardjoatmodjo அவர்கள், உணவைப் பகிர்ந்துகொள்ளும்போது, சுத்தமான மற்றும், சத்துள்ள உணவைக் கொடுப்பதை உறுதிசெய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

பெருந்தொற்றால் இந்தோனேசியாவில் எத்தனையோ பேர் வேலைகளை இழந்துள்ளனர் எனவும், துன்புறும் அம்மக்களுக்கு, தன்னார்வத்தோடு உணவு வழங்கும் தனியாட்கள் மற்றும் குழுக்களைப் பார்த்திருக்கிறேன் என்றும் கூறியுள்ள கர்தினால் Hardjoatmodjo அவர்கள், பொதுநலன் மற்றும், மனித மாண்பைக் காக்கும்வண்ணம் நலமான உணவை வழங்கி ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துங்கள் என்று, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவில், பெருந்தொற்றால் ஏறத்தாழ 2 கோடியே 94 இலட்சம் நிரந்தர மற்றும், பகுதிநேரத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2021, 14:29