தேடுதல்

பங்களாதேஷில் இந்து மதத்தினர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்திய இந்துக்கள் போராட்டம் பங்களாதேஷில் இந்து மதத்தினர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்திய இந்துக்கள் போராட்டம்  

இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 300 தாக்குதல்கள்

இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்படும் வன்முறைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புக்கு எதிராகச் செல்வதால், அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், அதில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என, இந்தியாவில், மனித உரிமைகளை மேம்படுத்த முனையும் பணியில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளர்கள், துறவிகள், மற்றும் அருள்சகோதரிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்வாண்டு, இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 300க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக, அரசுசாரா அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கையைப்பற்றி, இந்தியாவில், மனித உரிமைகளுக்காகப் போராடும் இயேசுசபை அருள்பணி Cedric Prakash அவர்கள், கருத்து வெளியிட்டபோது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் என்பது, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில், கடந்த 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது, இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்றார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்துவந்தாலும், 2014ம் ஆண்டின் இந்துத்துவ தேசியவாதத்தோடு  தொடர்புடைய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தால், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளதாக அருள்பணி பிரகாஷ் அவர்கள் கூறினார்.

நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மக்களாட்சி கோட்பாடுகளுக்கும் எதிராகச் செல்லும் இந்த வன்முறைகள் குறித்து எவ்வித தண்டனை அச்சமும் இன்றி தலைவர்கள் தொடர்வதாக அருள்பணி பிரகாஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியதுடன், இத்தகைய அடிப்படைவாதத்திற்கு எதிராக, மக்கள் குரல் எழுப்பவில்லையெனில், இது கட்டுப்படுத்தமுடியாத ஆபத்தாக மாறிவிடும் என, மேலும் தெரிவித்தார்.

'இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்' என்ற தலைப்பில் இம்மாதம், 21ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி ஆகிய இடங்களிலேயே அதிக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இந்த வன்முறைகளை தடுக்கவேண்டியதில், இந்திய தேசிய மனித உரிமைகள் அவையின் பங்கு குறித்தும், உள்துறை அமைச்சகத்தின் தோல்வி குறித்தும் கேள்விகள் தலைதூக்குகின்றன என்று கூறிய, கிறிஸ்தவ அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மைக்கிள் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 49 புகார்களின் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்திய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் இல்லாத நிலையில், அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் குறைந்துவரும் நிலையில், கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றார், 'கிறிஸ்துவில் ஒன்றிப்பு' என்ற கிறிஸ்தவ சபை அமைப்பின் பொதுச்செயலர் Minakshi Singh.

வழக்குரைஞரும் மனித உரிமை நடவடிக்கையாளருமான அருள்பணி Ajaya Kumar Singh அவர்கள் கூறுகையில், மதமாற்றத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை, கிறிஸ்தவர்களையும், வழிபாட்டுத்தலங்களையும் தாக்குவதற்குரிய கேடயமாக இந்து தீவிரப்போக்குடையோர் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2021, 13:49