தேடுதல்

"தெளிந்து தெரிவு செய்தல்: ஓர் இயேசு சபை துறவிக்கும், மேலாளருக்கும் இடையே உரையாடல்" - புதிய நூல் "தெளிந்து தெரிவு செய்தல்: ஓர் இயேசு சபை துறவிக்கும், மேலாளருக்கும் இடையே உரையாடல்" - புதிய நூல் 

"இயேசு சபை துறவிக்கும், மேலாளருக்கும் இடையே உரையாடல்"

நலவாழ்வு பராமரிப்பின் இலக்கு, இலாபம் தேடுவது அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை மையப்படுத்தி, புதிய நூல் வெளியீடு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"தெளிந்து தெரிவு செய்தல்: ஓர் இயேசு சபை துறவிக்கும், மேலாளருக்கும் இடையே உரையாடல்" என்ற தலைப்பில், புதிய நூல் ஒன்று, அக்டோபர் 20, இப்புதனன்று உரோம் நகரில் வெளியானது.

கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பேராசிரியராகவும், ஓர் எழுத்தாளராகவும் பணியாற்றிவரும், இயேசு சபை அருள்பணி Francesco Occhetta அவர்களும், உரோம் நகரில் இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Mariella Enoc அவர்களும், இணைந்து உருவாக்கியுள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவில், வத்திக்கான் நகரின் பொறுப்பாளரான கர்தினால் Mauro Gambetti அவர்களும், இத்தாலிய நலத்துறை அமைச்சர் Roberto Speranza அவர்களும் பங்கேற்றனர்.

திருத்தந்தையுடன் குழந்தை இயேசு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Mariella Enoc
திருத்தந்தையுடன் குழந்தை இயேசு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Mariella Enoc

நலவாழ்வு பராமரிப்பின் இலக்கு, இலாபம் தேடுவது அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை மையப்படுத்தி, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று, இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவரான, Mariella Enoc அவர்கள் கூறினார்.

தனிமனித வாழ்வுக்கும், சமுதாய வாழ்வுக்கும் அடித்தளமாக விளங்கும் நலவாழ்வு பராமரிப்பு என்ற கருத்தை மையப்படுத்தி, Mariella Enoc அவர்களும், அருள்பணி Francesco Occhetta அவர்களும் மேற்கொண்ட ஓர் உரையாடலின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது.

போட்ட முதலீட்டை இலாபத்துடன் திரும்பப் பெறவேண்டும் என்ற நோக்கத்தை விடுத்து, இந்த முதலீட்டால், பயனடைவோரை மையப்படுத்துவதே நலவாழ்வு பராமரிப்பு என்ற பணியின் தலையாய நோக்கம் என்று, இந்நூல் எடுத்துரைக்கிறது.

கோவிட்-19 என்ற பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து வெளியேறிவரும் இவ்வுலகம், நலவாழ்வு பராமரிப்பைக் குறித்த சரியான கண்ணோட்டம் கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல், வரலாற்றின் இத்தருணத்தில் வெளியாகிறது என்று இந்நூல் வெளியீட்டின்போது கூறப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 13:57