தேடுதல்

COP 26 உச்சி மாநாட்டை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற பல்சமயக் கூட்டம் - கோப்புப் படம், அக்டோபர் 4, 2021 COP 26 உச்சி மாநாட்டை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற பல்சமயக் கூட்டம் - கோப்புப் படம், அக்டோபர் 4, 2021 

COP26 மாநாட்டின் எதிரொலிகள் – பிரித்தானியா, ஆஸ்திரேலியா

பிரித்தானியப் பிரதமர், COP26 உச்சி மாநாட்டில் உண்மையான தலைமைத்துவத்தை உறுதியாக வெளிப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை சமர்ப்பித்த பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களிடம் COP26 உச்சி மாநாட்டை மையபப்டுத்தி, அக்டோபர் 18, இத்திங்களன்று, விண்ணப்ப மடல் ஒன்றை அளித்தனர்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த 75,000த்திற்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ள இந்த மடலில், பிரித்தானிய பிரதமர் ஜான்சன் அவர்கள், COP26 உச்சி மாநாட்டில் உண்மையான தலைமைத்துவத்தை உறுதியாக வெளிப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பயமயமாகும் ஆபத்தைக் குறைத்தல், புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டை தடைசெய்தல், காலநிலை மாற்றத்தால் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு, செல்வம் மிகுந்த நாடுகள், ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் டாலர்கள் நிதி உதவி செய்தல் என்ற கோரிக்கைகள் இந்த விண்ணப்ப மடலில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து ஆஸ்திரேலிய அரசு இன்னும் அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை, 'சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஆஸ்திரேலியாவின் மதம் சார்ந்த பதிலிறுப்பு' என்ற பெயருடன் இயங்கிவரும் ARRCC என்ற ஓர் இயக்கம், அந்நாட்டு அரசுக்கு விடுத்துள்ளது.

அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி முடிய கிளாஸ்க்கோ நகரில் நடைபெறவிருக்கும் COP26 காலநிலைமாற்ற உச்சி மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, அக்டோபர் 17,18 ஆகிய இரு நாள்கள் ARRCC இயக்கம், பல்வேறு மதத்தலைவர்களை இணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது.

ஆஸ்திரேலிய பிரதமர், Scott Morrison அவர்கள், COP26 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் எழுந்த கண்டனங்களையடுத்து, பிரதமர் Morrison அவர்கள், தன் முடிவை மாற்றி, இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் உருவாகிவரும் ஆபத்துக்களை உணர்த்தும்வண்ணம், அக்டோபர் 17, ஞாயிறன்று, ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆயலங்களிலும் செப வழிபாடுகள் நடத்தப்பட்டு, ஆலய மணிகள் ஒலிக்கப்படுமாறு, ARRCC இயக்கமும், பல்வேறு மதத்தலைவர்களும் விடுத்த அழைப்பு, “Faiths 4 Climate Justice” என்ற நிகழ்வாக செயல்படுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 14:03