தேடுதல்

ஆண்டவர் என் கற்பாறை - திருப்பாடல் 18,2 ஆண்டவர் என் கற்பாறை - திருப்பாடல் 18,2 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 3

18வது திருப்பாடலில் காணப்படும் கவிதை நயத்தை, இத்தேடலில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 18 - அரசரின் வெற்றிப் பாடல் 3

“I always like walking in the rain, so no one can see me crying”, அதாவது, "மழையில் நனைந்தபடி நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், நான் அழுதுகொண்டிருப்பதை யாராலும் பார்க்கமுடியாது" என்று சொன்னவர், புகழ்பெற்ற நடிகர், சார்லி சாப்ளின் (Charlie Chaplin). அவர் விட்டுச்சென்ற இக்கூற்று, நம் விவிலியத்தேடலைத் துவக்க உதவியாக உள்ளது. உலகினர் அனைவரையும் தன் திரைப்படங்கள் வழியே சிரிக்கவைத்த நகைச்சுவை நடிகர் சாப்ளின் அவர்கள், தன் சொந்த வாழ்வில் அழுதுகொண்டிருந்தார் என்பதை, கற்பனை செய்துபார்க்க கடினமாக உள்ளது. தன் தனிப்பட்ட வாழ்வில் அடைந்த வேதனைகளின் விளைவாக, சாப்ளின் அவர்கள், மக்களை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த திரைப்படங்களை உருவாக்கினார்.

உலகில் இதுவரை வாழ்ந்த, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பல கலைஞர்கள், தங்கள் துன்பங்களையும், துயரங்களையும், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், பாடல்கள், நாடகம் என்ற பல்வேறு கலைப்படைப்புக்களாய் உருவாக்கியுள்ளனர் என்பதை, வரலாறு, மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்கிறது.

“Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility” அதாவது, "சக்திமிக்க உணர்வுகள், தன்னிச்சையாய் நிறைந்து வழிவதே, கவிதை. அமைதியில் ஒருவர் தன் உணர்வுகளைத் தொகுப்பதே கவிதையாக உருவாகிறது." புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், வில்லியம் வேர்ட்ஸ்வெர்த் (William Wordsworth) அவர்கள், கவிதைக்கு வழங்கியுள்ள இலக்கணம் இது.

உணர்வுகள், குறிப்பாக வேதனைகள், உள்ளத்தில் பொங்கியெழும்போது, கவிதைகள் உருவாகின்றன என்பது, பலரும் உணர்ந்த உண்மை. தங்கள் கவிதையின் வழியே, பல்லாயிரம் கவிஞர்கள், தங்கள் வேதனைகளுக்கு மருந்தைத் தேடிக்கொண்டனர்.

நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 18வது திருப்பாடலின் பல வரிகளை மன்னர் தாவீது, கவிதை வடிவில் உருவாக்கியுள்ளதற்கு, அவர் அடைந்த துன்பங்கள் முக்கிய காரணம் என்பதை, எளிதில் புரிந்துகொள்ளலாம். இத்திருப்பாடலில் காணப்படும் கவிதை நயத்தை, இத்தேடலில், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். இத்திருப்பாடலின் முதலிரு இறைவாக்கியங்களில், ஆண்டவர், தனக்குச் சொந்தமானவர் என்று உரிமை கொண்டாடி, அவரை, "என் ஆற்றல், என் கற்பாறை, என் கோட்டை..." என்று, 9 உருவகங்களில் தாவீது அழைத்தார் என்பதை, சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம்.

  • இந்த அறிமுக இறைவாக்கியங்களைத் தொடர்ந்து, தாவீது தனக்கு ஏற்பட்ட துயரங்களையும், அவற்றிலிருந்து ஆண்டவர் தனக்கு எவ்வாறு உதவிசெய்தார் என்பதையும், 4 முதல் 16 முடிய உள்ள 13 இறைவாக்கியங்களில் கூறியுள்ளார். இந்த 13 இறைவாக்கியங்களும், மிக உயர்ந்த கவிதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். தான் வாழ்வில் அடைந்த வேதனைகளை விவரிக்க, தாவீது பயன்படுத்தியுள்ள கவிதை வரிகள் இதோ:

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்கவைத்தன. (திருப்பாடல் 18:4-5)

தான் சந்தித்த துன்பங்களை விவரிக்க, தாவீது, சாவின் கயிறுகள், அழிவின் சுழல்கள், பாதாளக் கயிறுகள், சாவின் கண்ணிகள் என்ற பல்வேறு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். ஆடுகளை மேய்த்துவந்தபோது, தாவீது சந்தித்த சிங்கம், கரடி போன்ற விலங்குகளில் துவங்கி, பெலிஸ்தியர்களின் வீரனான கோலியாத்து, மன்னர் சவுல், அரியணை ஏறியபின், தாவீதுக்கு எதிராக திரண்டெழுந்த மோவாபியர், அம்மோனியர், சிரியர் என்ற வேற்று நாட்டவர், அவரது அரியணையைப் பறிக்கத் துடித்த அவரது அன்புமகன் அப்சலோம், என்று, தாவீதின் வாழ்வில், கண்முன் தோன்றிய அனைத்து எதிரிகளிடமிருந்தும் ஆண்டவர் தன்னைக் காத்ததை, தாவீது இவ்வரிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், கண்ணுக்குத் தெரியாமல், தனக்குள்ளிருந்து உருவான தீய சக்திகளையும், தாவீது இவ்விரு இறைவாக்கியங்களில் நினைவுகூர்ந்துள்ளார். வெளியிலிருந்து வராமல், தன் உள்ளத்திலிருந்து இச்சக்திகள் புறப்பட்டதால், அவற்றை, 'பாதாளக் கயிறுகள்' என்று தாவீது குறிப்பிட்டிருப்பதாக விவிலிய விரிவுரையாளர்கள் கணித்துள்ளனர்.

துன்பங்களைக் குறிக்க 'கயிறு' என்ற உருவகத்தை பயன்படுத்தியுள்ள தாவீது, அதே உருவகத்தை, மீண்டும் ஒருமுறை, 116ம் திருப்பாடலிலும் பயன்படுத்தியுள்ளார்: "சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன; பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன." (திருப்பாடல் 116:3)

18வது திருப்பாடலின் 4 மற்றும் 5 ஆகிய இரு இறைவாக்கியங்களில், தன் துன்பங்களின் ஆழத்தை, கவிதையாக வடித்த மன்னர் தாவீது, தன் கதறலைக் கேட்டு, இறைவன் எவ்வாறு தன் வாழ்வில் குறுக்கிட்டார் என்பதை, 7 முதல், 15 முடிய உள்ள 9 இறைவாக்கியங்களில், மற்றுமோர் உன்னதக் கவிதையாக வடித்துள்ளார்.

இறைவனின் குறுக்கீடு, ஒரு புயலைப்போல, நிலநடுக்கத்தைப்போல இருந்தது என்பதைக் கூற, "அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின. அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்பக்கனல் வெளிப்பட்டது" (திருப்பாடல் 18:7-8) என்று தாவீது விவரித்துள்ளார்.

  • இதைத் தொடர்ந்து, அடுத்த வரிகளில், இறைவனின் வரவால், வானம், காற்று, நீர்கொண்ட முகில், நீர்த்திரள் என்ற அனைத்திலும் உருவான மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன. இறைவனின் வரவால், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள், 29, 46 மற்றும் 144 ஆகிய திருப்பாடல்களிலும் பதிவாகியுள்ளன. அப்பாடல்களில் காணப்படும் ஒரு சில வரிகள் இதோ:
  • ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்... ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது; ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது (திருப்பாடல் 29:3,7-8)

கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது. (திருப்பாடல் 46:6)

  • 'அரசரின் வெற்றிப் பாடல்' என்று பெயரிடப்பட்டுள்ள 18வது திருப்பாடலிலும், 'வெற்றிக்கு நன்றி' என்று பெயரிடப்பட்டுள்ள 144வது திருப்பாடலிலும் கூறப்பட்டுள்ள பல கூற்றுகள், ஒரே விதத்தில் அமைந்துள்ளன:

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!... என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே!... ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்; மலைகளைத் தொடும்; அவை புகை கக்கும். மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்; உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும். (திருப்பாடல் 144:1-2,5)

ஆண்டவர், தன் வாழ்வில் குறுக்கிட்ட பாணியை, புயலாக, நிலநடுக்கமாக, கடல் நீரின் கொந்தளிப்பாக 18வது திருப்பாடலில் தாவீது விவரித்துள்ளதை சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஆண்டவர் குறுக்கிட்டுள்ள நேரங்களைக் குறித்து சிந்திக்க முயல்வோம். இறைவனின் குறுக்கீடு எப்போதும், பெரிய அளவில், பிரம்மாண்டமாக அச்சமூட்டும் முறையில் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. பல நேரங்களில், ஆண்டவர் நம் வாழ்வில் சந்தடியேதுமின்றி நுழையக்கூடும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இறைவாக்கினரான எலியாவின் வாழ்வில் ஆண்டவர் குறுக்கிட்ட நேரம். இதை, நாம் அரசர்கள் முதல் நூல், 19வது பிரிவில் இவ்வாறு வாசிக்கிறோம்:

அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. (1 அரசர்கள் 19:11-13)

பாகாலின் பொய்வாக்கினர்களை, இறைவாக்கினர் எலியா கொன்றதால், அவரைக் கொல்வதற்கு, ஈசபேல் அரசி முயற்சிகளை மேற்கொண்டார். எனவே, இறைவாக்கினர் எலியா, நாட்டை விட்டு வெளியேறி, ஓரேபு மலையின் குகையில் அடைக்கலம் புகுந்தார். சக்திமிகுந்த அரசியின் கோபத்திலிருந்து தப்பித்து ஓடிய எலியாவைக் காப்பதற்கு, இறைவனும், சக்தியை வெளிப்படுத்தும், சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகிய வடிவங்களில் வருவார் என்று, இறைவாக்கினர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், வலிமை மிகுந்த எந்த வடிவத்திலும் வராத இறைவன், மெல்லிய ஒலியின் வழியே அவர் வாழ்வில் குறுக்கிட்டார்.

சக்தி மிகுந்த வழிகளிலோ, மென்மையான வழிகளிலோ நம் வாழ்வில் குறுக்கிடும் இறைவனை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வரத்தை இறைவன் வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம். தாவீதின் வாழ்வில், சக்திமிகுந்த வழிகளில் குறுக்கிட்ட இறைவன், அவருக்குச் செய்த நன்மைகளை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

19 October 2021, 14:15