தேடுதல்

குடும்ப உறவைப் பேணிக் காக்கும் மேய்ப்புப்பணியைக் குறிக்கும் இலச்சினை குடும்ப உறவைப் பேணிக் காக்கும் மேய்ப்புப்பணியைக் குறிக்கும் இலச்சினை 

மகிழ்வின் மந்திரம் : மனசாட்சிக்கு இடம் தருவது சிறந்தது

மேய்ப்புப்பணியில் மேற்கொள்ளப்படும் தெளிந்து தேர்தல், வளர்ச்சியின் புதிய நிலைகளையும், புதிய முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள திறந்தமனம் கொண்டிருக்கவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மரபுவழி திருமணம் செய்துகொள்ளாமல், மாறுபட்ட வழியில் உறவு கொண்டிருக்கும் தம்பதியரை, திருஅவை எவ்வாறு வழிநடத்தவேண்டும், எவ்வாறு அவர்களுடன் இணைந்து, தெளிந்து தெரிவு செய்யவேண்டும், மற்றும் அவர்களின் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணவேண்டும் என்ற கருத்துக்களை, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8வது பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிந்துரைகளாக வழங்கியுள்ளார். இப்பிரிவில், முறையற்ற உறவுகள் கொண்டிருப்போருடன், மேய்ப்புப்பணியாற்றுவோர் மேற்கொள்ளும் பணிகளில், வெகு தீவிரமாகச் செயல்படாமல், நிதானமாக செயல்படுவதைப்பற்றி, மூன்று பத்திகளில் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். இவற்றில் 303வது பத்தியில் அவர் கூறும் கருத்துக்கள் இதோ:

  • திருமண உறவில் நிலவும் குறிப்பிட்ட நடைமுறை விடயங்கள், ஒன்றையொன்று பாதிக்கும் என்பதை உணர்ந்து, திருமணத்தைக் குறித்து திருஅவை பின்பற்றும் ஒழுங்குமுறைகளில், தனிப்பட்டவரின் மனசாட்சிக்கு உரிய இடம் வழங்கப்படுவது சிறந்தது. இத்தகைய மனசாட்சி, இறைவனின் அருளில் நம்பிக்கை கொண்டதாக, அருள்பணியாளரின் பொறுப்பான, தெளிந்து தேர்தலால் வழிநடத்தப்பட்டதாக, தெளிவானச் சிந்தனைகள் கொண்டதாக இருப்பது அவசியம்.

இத்தகைய மனசாட்சி, நற்செய்தி விடுக்கும் சவால்களுக்கு ஈடுகொடுக்க இயலாத ஒரு சூழலை, புரிந்துகொள்கிறது. அப்போதையச் சூழலில், கடவுளுக்கு தாராளமனத்துடன் வழங்கப்படும் பதிலிறுப்பை இது கண்டுகொள்கிறது. மேய்ப்புப்பணியில் மேற்கொள்ளப்படும் இத்தகையத் தெளிந்து தேர்தல், வளர்ச்சியின் புதிய நிலைகளையும், புதிய முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள திறந்தமனம் கொண்டிருக்கவேண்டும். (அன்பின் மகிழ்வு 303)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 14:31