தேடுதல்

கடன் பிரச்சனையில் உள்ள குடும்பம் கடன் பிரச்சனையில் உள்ள குடும்பம்  

மகிழ்வின் மந்திரம்: பல்வேறு நிலைகளில் மணவாழ்வு வாழ்வோருக்கு ...

சில குறிப்பிட்ட சூழல்களில், வித்தியாசமாகச் செயல்படுவதை மக்கள் மிகக் கடினமாக உணர்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவின் 302ம் பத்தியில், திருமண அருளடையாளத்தைப் பெறாமல் கூடிவாழ்வோர், மணமுறிவு பெற்றுள்ளோர் மற்றும், மறுமணம் புரிந்துள்ளோர் ஆகியோருக்கு 'மேய்ப்புப்பணியைத் தெளிந்துதேர்தலில், தீவிரத்தை மட்டுப்படுத்தும் விடயங்கள்’ எவை என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார். இவ்விடயங்கள் பற்றி, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு மற்றும், மாமன்றத் தந்தையர் கூறியிருப்பதை, 302ம் பத்தியில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவர் அனைத்து நற்குணங்களையும் தனக்குள் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பண்பைக் கடைப்பிடிப்பதை வெளிப்படுத்துவதில் சிரமத்தை அனுபவித்திருக்கலாம். எனவே, மாற்றமுடியாத ஒரு செயலுக்குப் பொறுப்பேற்பது, அறியாமை, அலட்சியம், வற்புறுத்தல்,  பயம், பழக்கவழக்கம், வரம்புமீறிய பற்றுகள், மற்றும் ஏனைய உளவியல் அல்லது சமூகக் காரணிகளால் குறைக்கப்படலாம், அல்லது ஒன்றும் இல்லாமலும் ஆக்கப்படலாம் என்று கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி தெளிவாக குறிப்பிடுகிறது. மேலும், முதிர்ச்சியின்மை, கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கம், கவலை போன்ற தார்மீகப் பொறுப்பை மட்டுப்படுத்தும் மேலும் சில உளவியல் மற்றும் சமூகச் சூழல்கள் பற்றியும் அந்த ஏட்டின் மற்றொரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே, ஒரு சூழல் பற்றி எதிர்மறையாகத் தீர்ப்பிடுவது, அச்சூழலில் வாழ்கின்ற நபரின் மாற்றமுடியாத அல்லது, குறைச்சொல்லக்கூடிய நிலை பற்றி தீர்ப்பிடுவதைக் குறிக்காது. எனவே இந்த கருத்துக்களின் அடிப்படையில், மாமன்றத் தந்தையர் பலர் வலியுறுத்த விரும்பும் விதிமுறை மிகவும் சரியானது என்றே நானும் கருதுகிறேன். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 302ம் பத்தியில் குறிப்பிட்டுள்ளார். சில குறிப்பிட்ட சூழல்களில், வித்தியாசமாகச் செயல்படுவதை மக்கள் மிகக் கடினமாக உணர்கின்றனர். எனவே, திருமணம் தொடர்புடைய சில ஒழுங்குமுறையற்றச் சூழல்களுக்குரிய பொதுவான விதிமுறைகளை விட்டுவிடாமலும், அதேநேரம், அவ்விவகாரம் சார்ந்த சில நடவடிக்கைகளை, அல்லது தீர்மானங்களை எடுப்பது, அனைத்து விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்பது ஏற்கப்படவேண்டும். மேய்ப்புப்பணியைத் தெளிந்துதேர்தலில், ஒருவரின் முறையாக உருவாக்கப்பட்ட மனச்சான்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு, இத்தகைய சூழல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்களின் விளைவுகளும்கூட, எல்லா விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. (அன்பின் மகிழ்வு 302)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2021, 15:00