தேடுதல்

திருமணம் புரியவிருக்கும் ஒரு தம்பதி திருமணம் புரியவிருக்கும் ஒரு தம்பதி  

மகிழ்வின் மந்திரம் - முடிவெடுப்பதைக் கட்டுப்படுத்தும் காரணிகள்

சில புனிதர்கள், அனைத்து நற்பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பண்பைக் கடைப்பிடிப்பதை வெளிப்படுத்துவதில் சிரமத்தை அனுபவித்திருக்கலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில்,  மேய்ப்புப்பணி அக்கறையில் நிதான நிலையின் அவசியம் பற்றி விளக்கும்போது, 'மேய்ப்புப்பணி பகுத்தறிதலில் தீவிரத்தை மட்டுப்படுத்தும் விடயங்கள்', என்ற குறுந்தலைப்பில் வழங்கியுள்ள மூன்று பத்திகளில், (301-303) 301ம் பத்தியில் கூறப்பட்டுள்ள எண்ணங்களின் தொகுப்பு இதோ:

திருமணம் தொடர்புடைய சில ஒழுங்குமுறையற்றச் சூழல்களைப் புரிந்துகொள்வதில், ஒரு விடயம் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது, நற்செய்தி விடுக்கும் சவால்களில் சமரசம் ஏற்படுகின்றன என்ற எண்ணம் உருவாகும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறலாகாது. பல்வேறுச் சூழல்களையும் காரணிகளையும் மட்டுப்படுத்தும் விடயங்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும் திறனை திருஅவைக் கொண்டுள்ளது. ஆகவே, ஒழுங்குமுறையற்ற, அதாவது, திருஅவைச் சட்டத்திற்கு உடன்பாடு இல்லாதவகையில் கூடிவாழும் தம்பதியர், பெரும் பாவத்தில் வாழ்கின்றனர், அவர்களுக்கு புனிதத்துவத்தின் அருள் கிட்டாது என்று எவரும் சொல்ல முடியாது. இவர்கள் திருஅவைச் சட்டத்தை அறியாதவர்களாகச் செயல்படுகிறார்கள், என்பதையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. ஒருவருக்கு சட்ட விதியைக் குறித்து  நன்கு தெரிந்திருக்கலாம், ஆனால், 'அதன் உள்ளார்ந்த மதிப்புக்களைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். அல்லது, அவர் வேறு விதமாக நடந்து கொள்ள அனுமதிக்காத, அதாவது, மேலும் பாவத்தில் விழாத வகையில் முடிவெடுக்க முடியாத, ஒரு விலக முடியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆயர் மாமன்றத் தந்தையர் உரைத்துள்ளதுபோல், முடிவெடுப்பதை கட்டுப்படுத்தும் சில காரணிகளும் இங்கு இருக்கலாம். ஒருவரிடம் அருளும் பிறரன்பும் இருக்கலாம், இருப்பினும் எந்த ஒரு நற்பண்பையும் சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் அவர் இருக்கலாம், என்பதை உணர்ந்திருந்தார் புனித தாமஸ் அக்குவினாஸ். வேறுவிதமாகச் சொல்லவேண்டுமானால், ஒருவர் அனைத்து நற்குணங்களையும் தனக்குள் கொண்டிருந்தாலும், அவற்றுள் ஒன்றை அவரால் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கலாம், ஏனெனில், அதை வெளிப்படையாகக் கடைப்பிடிப்பது அவருக்கு சிரமமானதாக இருக்கும். சில புனிதர்கள், சில குறிப்பிட்ட நற்பண்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறக் கேட்டிருக்கிறோம், ஆனால், அவர்கள் அனைத்து நற்பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருந்தாலும், அந்த குறிப்பிட்ட பண்பைக் கடைப்பிடிப்பதை வெளிப்படுத்துவதில் சிரமத்தை அனுபவித்திருக்கலாம். (அன்பின் மகிழ்வு 301)

22 October 2021, 14:27