தேடுதல்

ஆலோசனை பெறும் ஒரு தம்பதி ஆலோசனை பெறும் ஒரு தம்பதி  

மகிழ்வின் மந்திரம் : எல்லாச் சூழல்களுக்கும் ஒரே பொதுவிதியா?

குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நடைமுறை பகுத்தறிவின் பதிலுரையாக இருப்பதை, ஒரு நிரந்தர விதியின் நிலைக்கு உயர்த்த முடியாது என்று நாம் சொல்ல முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8வது பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,'சட்ட விதிகளும் தேர்ந்துதெளிதலும்' என்ற குறுந்தலைப்பின் கீழ், ஒவ்வொரு செயலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எவ்வாறு மேய்ப்புப்பணி அணுகுமுறை இருக்கவேண்டும் என்பது குறித்து 304ம் பத்தியில் கூறியுள்ளதன் தொகுப்பு இதோ: 

தனிமனிதர் ஒருவரின் செயல்பாடுகள், பொதுச் சட்டம் அல்லது விதிக்கு ஒத்துப் போகிறதா, இல்லையா என்பதை தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, ஏனெனில் ஒரு மனிதனின் உறுதியான வாழ்வில் கடவுள் மீது கொண்டிருக்கும் முழு நம்பிக்கையையும் பகுத்தறிந்து உறுதிசெய்ய இது போதாது. புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் போதனைகளை நாம் எப்போதும் நினைவுகூர்ந்து அதை நமது மேய்ப்புப்பணி பகுத்தறிதலில் இணைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறேன்: “பொதுக் கோட்பாடுகளில் ஒத்துப்போதல் குறித்து நோக்கவேண்டிய தேவை இருந்தாலும், விரிவாக விடயங்களுக்கு நாம் இறங்கும்போது, அடிக்கடி குறைபாடுகளைச் சந்திக்கிறோம்… செயல்பாடு, உண்மை, அல்லது நடைமுறை நேர்மை என்பதை ஆழமாக உற்றுநோக்கும்போது, அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் பொதுவான கோட்பாடுகளாகப் பார்க்கும்போது இருக்கும். விரிவான விடயங்களில் ஒரே மாதிரியான நேர்மை இருந்தால், அது அனைவருக்கும் சமமாகத் தெரியாது... அதேவேளை, விரிவாக நாம் இறங்கும்போது, கொள்கை அல்லது கோட்பாடு அங்கு தோல்வியடைவதைக் காண்போம்”. பொது விதிகள், நாம் ஒருபோதும் விலக்கிவைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாத ஒரு நல்லதை முன்வைக்கின்றன என்பது உண்மைதான், ஆனால், அவை உருவாக்கப்பட்ட விதத்தில், அனைத்து தனிப்பட்ட சூழல்களுக்கும் முற்றிலும் இயைந்ததாக இருத்தல் இயலாது. அதே நேரத்தில், இதே காரணத்தைக் கருத்தில்கொண்டு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நடைமுறை பகுத்தறிவின் ஒரு பகுதியாக இருப்பதை ஒரு விதியின் நிலைக்கு உயர்த்த முடியாது என்றும் சொல்லமுடியும். இவ்வாறு, தனிப்பட்டச் சூழல்களை கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படும் பொதுவிதி, மதம் சார்ந்த ஒழுங்குமுறையை நுண்ணியமாகக் கடைப்பிடிக்க,  சகிப்பற்றத்தன்மையுடன் எதிர்பார்க்கும் நிலைக்கு இட்டுச்செல்வதுடன், சிறப்பு அக்கறையுடன் பாதுகாக்கவேண்டிய மதிப்பீடுகளுக்கு ஆபத்தாகவும் வந்து முடியும். (அன்பின் மகிழ்வு 304)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:20