தேடுதல்

காரித்தாஸ் கொலம்பியாவின் பணிகள் காரித்தாஸ் கொலம்பியாவின் பணிகள் 

கொலம்பியா நாட்டில் சிறப்பிக்கப்படும் 'அமைதியின் வாரம்'

அமைதியைக் கட்டியெழுப்புவதில் தேவைப்படும் பொது விடயங்கள் குறித்து ஒரு சமுதாயமாக இணைந்து உரையாடுவதும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதும் மிகுந்த பலனளிக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பியா நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் 'அமைதியின் வாரம்', ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிற்றுக்கிழமை முதல், 12ம் தேதி வரை 'நம்மால் இயலக்கூடிய உண்மை' என்ற தலைப்பில் துவங்கவுள்ளது.

அமைதிக்கான இவ்வாரம் குறித்து பத்திரிகைக்குப் பேட்டியளித்த கொலம்பியத் திருஅவையின் சமுதாய மறைப்பணி அக்கறைக்குரிய தேசிய செயலகத்தின் தலைவர், பேரருட்திரு Héctor Fabio Henao Gaviria அவர்கள், நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் தேவைப்படும் பொது விடயங்கள் குறித்து, ஒரு சமுதாயமாக இணைந்து உரையாடுவதும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதும், மிகுந்த பலனளிக்கும் என உரைத்தார்.

சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், குறிப்பாக, கல்விக்கூடங்கள், சுற்றுப்புறங்கள், ஆலயங்கள், என அனைத்து சமூகத் துறைகளிலும், நாம் எந்த வகையான உண்மையை விரும்புகிறோம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில், பல நிறுவனங்களை ஒன்றிணைக்கும் முயற்சியே இது என, அவ்வமைதி வார தலைப்புப் பற்றிக் குறிப்பிட்ட பேரருட்திரு Henao Gaviria அவர்கள், ஒப்புரவிலும், ஒருமைப்பாட்டிலும், சந்தித்து உரையாடுவதற்குரிய வலிமையிலும், எத்தகைய உண்மை நமக்கு உதவும் என்பதை தெரிந்து செயல்படவேண்டியது அவசியம் என்றார்.

தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதால், மக்கள் காலம் காலமாக அடைந்துவரும் துயர்களை எடுத்துரைத்து, உண்மைக்கு இருக்கும் வலிமையையும், குணப்படுத்தும் வல்லமையையும் சுட்டிக்காட்டினார், பேரருட்திரு  Henao Gaviria.

உண்மைக்கு நம்மைத் திறந்தவர்களாக, சமுதாயத்தில் அமைதியைக் கட்டியெழுப்பவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த, திருஅவையின் சமுதாய மறைப்பணி அக்கறைக்குரிய தேசிய செயலகத்தின் தலைவர், தினமும் அமைதிக்காக பல்வேறு பணிகளை எடுத்து நடத்திவரும் மக்களின் நடவடிக்கைகளை முன்னிறுத்தும் வகையில், இவ்வாரத்தில் கொலம்பியா நாட்டில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என எடுத்துரைத்தார்.

சமுதாய அமைதிக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த வாரத்தில் உண்மைக்காகவும், ஒப்புரவுக்காகவும் அனைத்து கத்தோலிக்க அமைப்புக்களுடன் இணைந்து, சிறப்பான விதத்தில் உழைக்க உள்ளதாக அறிவித்துள்ளது, சமுதாய மறைப்பணி அக்கறைக்கான தேசிய செயலகம் எனும் கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு. (Fides)

04 September 2021, 13:35