தேடுதல்

காலநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை உருகுகிறது காலநிலை மாற்றத்தால் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை உருகுகிறது 

படைப்பின் காலம் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நிலையைத் தெளிவாக நோக்கி, சரியாகத் தீர்ப்பிட்டு, அறநெறிப்படி நடக்க, Laudato si’ திருமடல் அழைப்புவிடுக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல், மற்றும், பல்லுயிர்களுக்கு, மனிதர் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் குறித்தும், படைப்பைப் பாதுகாப்பதற்கு மனிதர் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், படைப்பின் காலத்தில் சிந்தித்துச் செயல்படுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

செப்டம்பர் ஒன்று, இப்புதன் முதல், சூழலியலின் பாதுகாவலரான, அசிசி நகர் புனித பிரான்சிசின் விழாவான, அக்டோபர் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்திற்கென மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு மனசாட்சியை உருவாக்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில் வெளியிட்ட Laudato si’ திருமடலில், “சூழலியல் மனச்சான்றை உருவாக்குவது பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார் எனவும், அதில் அவர், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நிலையைத் தெளிவாக நோக்கி, சரியாகத் தீர்ப்பிட்டு, அறநெறிப்படி நடக்க அழைப்புவிடுத்துள்ளார் எனவும், அமெரிக்க ஆயர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சூழலியல் பிரச்சனைகள், புரிந்துகொள்வதற்குச் சற்று கடினமாகவே உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஆயர்கள், நம் ஆழமான நம்பிக்கை வாழ்வு, இப்பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவரான, பேராயர் Paul Coakley அவர்களும், பன்னாட்டு நீதி மற்றும், அமைதி பணிக்குழுவின் தலைவரான ஆயர் David Malloy அவர்களும், “சூழலியல் மனச்சான்றை நோக்கி” என்ற தலைப்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2021, 15:07