தேடுதல்

கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் - எசாயா 35:7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் - எசாயா 35:7 

பொதுக்காலம் 23ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் திரும்பிச்செல்லும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 23ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இறைவனிடமிருந்து அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும் ஆரோக்கிய அன்னையின் விழாவை நேரடியாகக் கொண்டாடமுடியாமல், அந்த அன்னையின் திருத்தலங்களில் நடைபெறும் நவநாள் நிகழ்வுகளை, சென்ற ஆண்டும், இந்த ஆண்டும், தொலைக்காட்சியிலும், கணணியிலும் கண்டுவருகிறோம். அந்த அளவுக்கு, ஒரு நோய், இவ்வுலகை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. இத்தகைய ஒரு சூழலில், ஆரோக்கிய அன்னையின் விழாவுக்கு முந்தைய ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு வாசகங்கள், நோயைக்குறித்தும், அதை எதிர்கொள்ளும் வழிகளைக் குறித்தும், ஆய்வுசெய்ய நம்மை அழைக்கின்றன.

மனிதராயப் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் எதார்த்தம், நோய். ஏழை, பணக்காரன், மேல்குடியினர், தாழ்த்தப்பட்ட குடியினர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி, அனைவரையும் நோய்கள் பாதிக்கும் என்ற உண்மையை, கோவிட் பெருந்தொற்று, மிகத் தெளிவாக நமக்கு உணர்த்திவருகிறது. வாழ்வில் தவிர்க்கமுடியாத எதார்த்தமாக விளங்கும் நோயை எதிர்கொள்வதில், பல வழிகளைப் பின்பற்றுகிறோம்.

மருந்து, மாத்திரை, மருத்துவர் என்று, மருத்துவ உலகிடம் சரணடைவது, நம்மில் பலர் பின்பற்றும் வழி. அதிலும், குறிப்பாக, பணம்படைத்தவர்கள், உலகின் எந்த மூலைக்கும் சென்று, அல்லது உலகின் எந்த மூலையிலிருந்தும் மருத்துவரை வரவழைத்து, நோயை நீக்க மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் அறிவோம்.

ஆனால், நோயைத் தடுப்பதற்கோ, அதிலிருந்து குணமாவதற்கோ, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற வறியோர் நம்பும் மேலான வழி, ஆண்டவனின் சந்நிதி. தங்கள் வறுமையையும், நோயையும் நீக்க, ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையைத் தேடி அவரது திருத்தலங்களுக்குச் செல்லும் ஆயிரமாயிரம் பக்தர்களை நாம் அறிவோம்.

வறுமையும், நோயும் உள்ளவர்கள், ஆண்டவனை நெருங்கமுடியாது என்ற தவறான கருத்தை, அன்றைய யூத மதத்தலைவர்கள், மக்கள் மனதில் திணித்துவந்தனர். மதத்தலைவர்களைப் பொருத்தவரை, நோயும் வறுமையும், பாவத்தின் தண்டனைகள். நோயுற்றோரும், வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை விட்டு, விலகியிருப்பது நல்லது. அதிலும், தொழுநோய் போன்ற ஒரு சில நோய் உடையவர்களை, ஒருவர் பார்த்தாலோ, அல்லது, அவர்கள் நிழல் கூட ஒருவரைத் தீண்டினாலோ, அவர்களும் தீட்டுப்பட்டவர்கள் ஆகிவிடுவர் என்ற அச்சங்களை, மதத்தலைவர்கள், மக்கள் மீது திணித்துவந்தனர்.

மதத்தலைவர்கள், இவ்வாறு, வறியோரையும், நோயுற்றோரையும், இறைவனிடமிருந்தும், பிறரிடமிருந்தும் விலக்கிவைத்து, அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்த வேளையில், எசாயா போன்ற இறைவாக்கினர்கள், வறியோருக்கும், நோயுற்றோருக்கும் நம்பிக்கை தரும் வண்ணம், காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர் என்று கூறினர்.

வறுமையும் நோயும் வாட்டும்போது, இறைவனே நம்மை புறக்கணித்துவிட்டார் என்று விரக்தியின் எல்லைக்கு போகும் மனம், பாறையாய் இறுகிப்போகும். ஆனால், அந்த பாறைக்குள்ளிருந்து சின்னதாய், நீர்த்துளிபோல் கசியும் விசுவாசம், கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, பின்னர் பாறையைப் பிளந்து கொட்டும் அருவியாய் மாறும். இத்தகைய ஓர் அருவியை, நாம் இன்றைய முதல் வாசகத்தில் உணர்கிறோம்.

எசாயா 35: 4-7

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இந்த வாசகத்தின் இறுதி வரிகளில் இறைவாக்கினர் எசாயா சித்திரித்துள்ள கனவுக்கு முற்றிலும் எதிர் துருவமாக, அண்மையில், அதாவது, ஆகஸ்ட் 9ம் தேதி, ஐ.நா. அவை, கவலைதரக்கூடிய ஓர் அறிக்கையை வெளியிட்டது. 66 நாடுகளைச் சேர்ந்த 234 அறிவியலாளர்கள் இணைந்து, காலநிலையில் உருவாகிவரும் மாற்றங்களைக் கண்காணித்து வெளியிட்ட இந்த அறிக்கை, நெருங்கிவரும் ஆபத்தை உணர்த்தும் 'சிவப்பு குறியீடு' (Code red) என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த அறிக்கையின் உண்மைகளைக் காணும்போது, கனல் கக்கும் மணல்பரப்பு, நீர்த் தடாகம் ஆகும் என்ற சொற்களை, நீர்த் தடாகம், கனல் கக்கும் மணல்பரப்பு ஆகும் என்று மாற்றிச் சொல்லத்தோன்றுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவு, அதன் வெளிப்பாடாக நம்மை வாட்டியெடுக்கும் பெருந்தொற்று, ஆகியவற்றால், நாம் நம்பிக்கையை இழக்காமல் வாழ, இறைவாக்கினர் எசாயா அழைப்பு விடுத்துள்ளார்.

யாக்கோபு மடலிலிருந்து வழங்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், வறியோரை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? என்ற கேள்விகளுக்கு, மிகவும் தெளிவான பாடங்களைச் சொல்லித்தருகின்றது.

பொதுவாகவே, நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும், ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். மறுப்பதற்கில்லை. பொதுவாக, வறியோரைக் கண்டதும் நமக்குள் பரிதாபம், இரக்கம் ஆகிய உணர்வுகள் எழுவது இயற்கை. ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு வறியோரைக் கண்டதும் மரியாதை என்ற உணர்வு எழுகிறது? இதுதான், திருத்தூதர் யாக்கோபு, நம்மிடம் எழுப்பும் சங்கடமான கேள்வி. பொன் மோதிரமும், பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரையும், அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரையும் சந்திக்க நேர்ந்தால், யாருக்கு கூடுதல் மரியாதை அளிப்போம் என்பதை ஆய்வுசெய்ய, திருத்தூதர் யாக்கோபு, நம்மை அழைக்கிறார். புனித யாக்கோபு இத்தகையைச் சவால்களை தன் மக்களுக்கு முன் வைப்பதற்கு காரணம், அவர் இயேசுவிடம் கற்றுக்கொண்ட அன்புப் பாடங்கள். குறிப்பாக, வறியோர் மீதும், நோயுற்றோர் மீதும், இயேசு காட்டிய அக்கறை. அந்த அன்பும், அக்கறையும் இன்றைய நற்செய்தியில் வெளியாகிறது.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர், கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் தவறான கருத்துக்களை மக்கள் மனதில் திணித்த மதத்தலைவர்கள் மத்தியில், இயேசு, "வறியோர் பேறுபெற்றோர்" என்று தன் மலைப்பொழிவைத் துவக்கினார். இயேசு இவ்வாறு சொன்னது, மதத்தலைவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்; தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில், நம்பிக்கை பிறந்திருக்கும். இன்றைய நற்செய்தியில்,  மீண்டும் ஒருமுறை, இயேசு தன்  சொல்லாலும்,செயலாலும் பல பாடங்களைப் புகட்டவருகிறார்.

உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.  - மாற்கு 7, 35
உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். - மாற்கு 7, 35

மாற்கு நற்செய்தி 7: 32

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டுவந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு, அவரை வேண்டிக் கொண்டனர்.

என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டுவந்தனர். அவர் தானாகவே இயேசுவைத் தேடிவரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை ஒரு பாவி என்றும், கடவுளின் தண்டனையைப் பெற்றவர் என்றும், முத்திரை குத்திய யூத மதத்தலைவர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும், அத்தலைவர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, அவர் தயங்கியிருக்கலாம்.

தயக்கம், குழப்பம், தன்மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு, என்று, பல சிறைகளை எழுப்பி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர், இந்த நோயாளி. அவருடைய ஒரு சில நண்பர்கள், அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டுவந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலில் முடங்கிப்போன ஒருவரை, அவரது நண்பர்கள் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை (லூக்கா 5: 18-25) இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து, அவருடைய நண்பர்கள், முடக்குவாதமுற்றவரை, இயேசுவுக்கு முன் கிடத்தினர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார் என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். (லூக்கா 5: 20) அத்தகைய ஒரு சூழல் இங்கும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

காது கேளாத மனிதரை, இயேசுவிடம், அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. இயேசு விரும்பியிருந்தால், ஒரு சொல் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு அவரது காதுகளில் விரல்களை வைத்தது, உமிழ்நீரால் அவரது நாவைத் தொட்டது, 'திறக்கப்படு' என்ற கட்டளையிட்டது... என்ற அனைத்து செயல்களும், நோயுற்ற அந்த மனிதர்மீது இயேசு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தின. அந்த அன்பு, அவரை முழுமையாகக் குணமாக்கியது. ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய அற்புதங்களை நாம் அறிவோம்.

2 மாதக் குழந்தையொன்று, தன் தாயின் குரலை முதல் முறையாகக் கேட்கும்போது, அக்குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகையும், அழுகையும் அழகான ஒரு காணொளிப்பதிவாக, சமூக வலைத்தளங்களில், மூன்று ஆண்டுகளாக வலம்வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஒரு நிமிட 'வீடியோ'வை, 7 கோடியே 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். கிறிஸ்டி (Christie Keane) என்ற இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை சார்லட் (Charlotte), பிறவியிலேயே கேட்கும் திறனின்றி பிறந்தாள். இரண்டு மாதங்கள் சென்று கேட்கும் கருவியொன்று, குழந்தையின் காதில் பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தை சார்லட், தன் தாயின் குரலை முதல் முறை கேட்டு, கண்களில் கண்ணீரோடு சிரிக்கும் அந்த வீடியோ, காண்போரின் உள்ளத்தைத் தொடுகிறது, கண்கள் நனைகின்றன. குழந்தையின் இதயத்தில் அன்பு அதிர்வுகளை உருவாக்க, தாயின் குரல் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை, இந்த காணொளிப்பதிவு, மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது.

தாய் சேய் உறவைச் சித்திரிக்கும் இந்த உணர்வுப்பூர்வமான வீடியோவைக் காணும்போது, ஆதரவின்றி விடப்படும், ஆயிரமாயிரம் குழந்தைகள், நினைவுக்கு வருகின்றனர். கேட்கும், பார்க்கும், பேசும் திறன்கள் இல்லாமல் பிறக்கும் பல்லாயிரம் குழந்தைகள், யாருமற்ற அனாதைகளாக விடப்படும் கொடுமை, இன்றும் நம்மிடையே தொடர்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஓர் அன்னையாக இருந்த புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, செப்டம்பர் 5, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கிறோம். நோயுற்றோரும், வறியோரும் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களை தன் வாழ்வின் மையமாகவும், பணிகளின் மையமாகவும் கொண்டு வாழ்ந்த புனித அன்னை தெரேசாவைப்போல, வறியோருக்காகவும், நோயுற்றோருக்காகவும், குறிப்பாக, இநத பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்துவரும் உன்னத உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

தாய்க்குரிய பரிவோடு, இயேசு, காதுகேளாதவரைக் குணமாக்கும் நிகழ்வு, நமக்கு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் திரும்பிச்செல்லும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக மகாத்மா காந்தி சொல்லித்தந்தார். இயேசுவின் 'திறக்கப்படு' என்ற கட்டளை, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்லித் தருகிறது.

வறுமை, நோய் ஆகிய சிறைகளில் நாம் சிக்கியிருக்கும்போதும், இச்சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், இறைவாக்கினர் எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நிஜமாக்குவோம். முடியாது என்ற அவநம்பிக்கை, நம்மைச் சிறைப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம். இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.... காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இத்தகைய நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள, இறைமகனும், ஆரோக்கிய அன்னையும், புனித அன்னை தெரேசாவும் நமக்குத் துணை புரிவார்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2021, 14:17