தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ் ஆயராக இருந்த புளோரன்ஸ் நகர் பேராலயம் திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ் ஆயராக இருந்த புளோரன்ஸ் நகர் பேராலயம்  

திருத்தந்தையர் வரலாறு - மீண்டும் எதிர் திருத்தந்தை

பண்பாளரும் அப்பழுக்கற்றவருமான திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ், திருஅவையின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1057ம் ஆண்டு திருப்பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை பத்தாம் ஸ்தேவான், ஏற்கனவே திருஅவையில் பெரும்பான்மையினரால் அறியப்பட்டவராயிருந்தார். இத்தாலிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இத்திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் உறவினரும்கூட. இவர் திருத்தந்தை ஒன்பதாம் லியோவால் உரோமைத் திருஅவையின் நூலகக் காப்பாளராக நியமிக்கப்பட்டதோடு, அவரின் ஐரோப்பிய திருப்பயணங்களின்போது உடன் அழைத்துச் செல்லப்படுபவராகவும் இருந்தார். 1054ம் ஆண்டு கீழை மற்றும் மேற்கத்திய வழிபாட்டுமுறை திருஅவைகள் இரண்டாகப் பிளவுபட்டபோது, கான்ஸ்தாந்திநோபிளுக்கு அனுப்பப்பட்ட திருத்தந்தையின் பிரதிநிதிகள் குழுவில் அன்றைய அருள்பணி Federick, அதாவது பிற்கால திருத்தந்தை 10ம் ஸ்தேவானும் இடம் பெற்றிருந்தார். கான்ஸ்தாந்திநோபிள் திருஅவை இரண்டாக உடைந்தபின், உரோம் நகர் திரும்பும் வழியில் Monte Cassinoவில் துறவியானார் Federick. இவரைப் பழிவாங்கத் துடித்த பேரரசர் மூன்றாம் ஹென்றியின் மரணத்திற்குப்பின், அத்துறவு மடத்தின் அதிபராகவும் பொறுப்பேற்றார். திருத்தந்தை இரண்டாம் விக்டர், இத்துறவு சபை அதிபர் Federickஐ கர்தினாலாக உயர்த்த, அத்திருத்தந்தையின் மரணத்திற்குப்பின், மக்களால் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். எட்டு மாதங்களே தலைமைப் பொறுப்பிலிருந்த திருத்தந்தை பத்தாம் ஸ்தேவான், கிரேக்கத் திருஅவையோடு பேச்சு வார்த்தைகளைத் துவக்கி, திருஅவைக்குள் ஒன்றிப்பைக் கொணர முயன்றார். அதேவேளை தென் இத்தாலியில் படையெடுத்துவந்த நார்மானியர்களையும் தடுக்க முயன்றார். 1057ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி பதவியேற்ற திருத்தந்தை 10ம் ஸ்தேவான், தன் இந்த இரு முயற்சிகளிலும் வெற்றிகாண முடியாமல், 1058ம் ஆண்டு மார்ச் மாதம் 29ந்தேதி இத்தாலியின் Florenceல் காலமானார்.

திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ்

அடுத்து இத்தாலி நகர் சியென்னாவில் (Sienna) இடம் பெற்ற திருத்தந்தையர் தேர்தலில், திருஅவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ் (Nicolas). இவர் புளோரன்ஸ் நகரின் ஆயராக இருந்தார். 1058ல் திருத்தந்தை பத்தாம் ஸ்தேவான் புளோரன்ஸில் காலமானார் என்ற செய்தி, உரோம் நகரை அடைந்தபோது, சில குழுக்கள் இணைந்து, வெல்லேத்ரியின் (Velletri) ஆயர் John Minciusயை, திருத்தந்தை பத்தாம் பெனடிக்ட் என்ற பெயரில் தேர்வு செய்தனர். ஆனால், திருத்தந்தை பத்தாம் ஸ்தேவானோ, தான் இறப்பதற்குமுன் ஒரு பெரிய கட்டளையை பிறப்பித்துவிட்டுச் சென்றிருந்தார். அதாவது, தன் உடன் உழைப்பாளரான கர்தினால் Hildebrand  ஜெர்மனியிலிருந்து திரும்பும்வரை, எவ்வித திருத்தந்தை தேர்தலும் இடம் பெறக்கூடாது என்பதே அவரின் கடைசி ஆணையாக இருந்தது. ஆகவே, சில கர்தினால்கள் இதற்காக காத்திருக்க, சிலரோ இந்த சட்டம் செல்லாது என முணுமுணுத்தனர். ஜெர்மனியிலிருந்து திரும்பும் வழியில் இதையெல்லாம் கேள்வியுற்ற Hildebrand, சியென்னா நகரிலேயே தேர்வை நடத்தி ஆயர் Gerhardஐ திருத்தந்தையாக முன்மொழிந்தார். பேரரசி Agnesம் இதற்கு தன் இசைவை வழங்க, உரோமைய மக்களுள் ஒரு பகுதியும் தங்கள் சம்மதத்தை அளித்தனர். இவ்வாறு திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ் தேர்வு செய்யப்பட்டார்.

   இவ்வேளையில், உரோமையில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட பத்தாம் பெனடிக்ட் பதவி விலக மறுத்ததால், புதிய திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ் உரோம் நகர் செல்லும் வழியில் Sutri என்னுமிடத்தில் ஆயர் பேரவையைக் கூட்டி, பத்தாம் பெனடிக்ட்டை பதவி நீக்கம் செய்தார். 1059ம் ஆண்டு ஜனவரி மாதம் உரோம் நகரிலிருந்து பத்தாம் பெனடிக்ட் விரட்டி அடிக்கப்பட, அதே மாதம் 24ந்தேதி இரண்டாம் நிக்கலஸ் அவர்கள் திருத்தந்தையாகப் பதவியேற்றார். பண்பாளரும் அப்பழுக்கற்றவருமான திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ், திருஅவையின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினார். விரட்டியடிக்கப்பட்ட பத்தாம் பெனடிக்ட், ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் திருத்தந்தைக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அரசர்கள், மற்றும் உரோமை பொதுநிலையினரின் கட்டுப்பாட்டின்கீழ் திருத்தந்தையர்களின் தேர்தல் இருப்பதை மாற்றியமைக்க விரும்பிய இத்திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ், 1059ம் ஆண்டு உயிர்ப்பு விழாவின்போது இலாத்தரன் பசிலிக்காவில் 113 ஆயர்களைக் கொண்ட ஆயர் மாமன்றத்தைக் கூட்டினார்.

இத்திருத்தந்தை, அந்த ஆயர் மாநாட்டின்போது கொணர்ந்த சீர்திருத்தங்கள், குறிப்பாக, பாப்பிறை தேர்தல்களில் முக்கியத்துவம் நிறைந்தவைகளாக திருஅவை வரலாற்றில் நோக்கப்படுகின்றன. ஒரு திருத்தந்தைக்கான தேர்தலின்போது, முதலில் கர்தினால், ஆயர்கள் என நியமிக்கப்பட்டவர்களே ஒரு நபரை தங்களுக்குள் முன்மொழிய வேண்டும், பின்னரே ஏனைய கர்தினால்களுடன், தேர்தல் ஆலோசனைகளில் ஈடுபடவேண்டும். அனைத்துக் கர்தினால்களின் முடிவை, அருள்பணியாளர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டாடவேண்டும். உரோமை தலத்திருஅவையைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கே முதல் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். உரோம் நகரிலேயே தேர்தல் இடம்பெறவேண்டும். முடியாதபட்சத்திலேயே, வேறு இடங்களில் நடத்தப்படலாம். ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரை திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்துவதற்கு, போரோ, வேறு ஏதாவது சூழல்களோ காரணமாக இருக்கும் வேளைகளிலும், அத்திருத்தந்தையின் முழு அதிகாரமும் அங்கீகரிக்கப்பட வேண்டும், என்பன போன்ற பல புதிய விதிமுறைகளைக் கொணர்ந்தார், திருத்தந்தை இரண்டாம் நிக்கலஸ்.

ஒரு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவரை அங்கீகரிக்க பேரரசருக்கு இருக்கும் அதிகாரம், திருஅவை அவருக்கு வழங்கியுள்ள சலுகை என்பதாக இத்திருத்தந்தையின் தேர்தல் விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டதால், ஜெர்மன் திருஅவை இவரோடு முரண்பட வேண்டியதாகியது. இருப்பினும், திருத்தந்தை நிக்கலஸ், தன் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. 1058ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தந்தையாக சியென்னாவில் தேர்வு செய்யப்பட்ட இவர், அதற்குப் பின்னரும் புளோரன்ஸ் ஆயர் என்ற பொறுப்பையும் கொண்டிருந்தார். 1061ம் ஆண்டு ஜூலை மாதம் புளோரன்சில் இவர் உயிரிழந்தபோது, இவரின் உடல் அங்குள்ள புனித Reparata கோவிலில்  அடக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2021, 13:54